மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமரும், நிதியமைச்சருமான மொரார்ஜி தேசாயின் சாதணையை சமன் செய்துள்ளார்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் இரண்டாவது ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டும் கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட் இதுவாகும்.
பிரதமர் மோடி அரசாங்கத்தின் கீழ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம், 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக முழு பட்ஜெட்டையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்து, முன்னாள் பிரதமரும், நிதியமைச்சருமான மொரார்ஜி தேசாயின் சாதணையை நிர்மலா சீதாராமன் சமன் செய்துள்ளார்.
1959 மற்றும் 1964க்கு இடைப்பட்ட காலத்தில் ஐந்து முழு பட்ஜெட்களையும் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் மொரார்ஜி தேசாய் தாக்கல் செய்துள்ளார். அத்துடன், இந்தியாவின் எந்தவொரு நிதியமைச்சரும் இல்லாத அளவுக்கு மொத்தம் 10 பட்ஜெட்களை தாக்கல் செய்த அரிய சாதனையையும் மொரார்ஜி தேசாய் பெற்றுள்ளார்.
வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை : பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..
இந்த நிலையில், அவரது ஒரு சாதனையை அதாவது தொடர்ச்சியாக 5 முழு பட்ஜெட், ஒரு இடைக்கால பட்ஜெட் தாக்கல் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் சமன் செய்துள்ளார். அத்துடன், தனது முன்னோடிகளான மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப.சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா போன்றவர்களின் சாதனைகளையும் அவர் முறியடித்துள்ளார்.
இவர்கள் யாரும் தொடர்ச்சியாக ஆறு பட்ஜெட்களை தாக்கல் செய்தது இல்லை. பிரதமர் மோடி முதல்முறை ஆட்சி பொறுப்பேற்றபோது நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, நிதியமைச்சராக பொறுப்பேற்றார். 2014-15 முதல் 2018-19 வரை ஐந்து முழு பட்ஜெட்களை அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்தார். அதன்பிறகு, அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், நிதியமைச்சராக கூடுதலாக பொறுப்பேற்ற பியூஷ் கோயல் 2019-20ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்தார்.
Union Budget 2024 இடைக்கால பட்ஜெட் தாக்கல் நிறைவு: மக்களவை ஒத்தி வைப்பு!
பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சி காலத்தில்; அதாவது 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பிறகு, மோடி அரசின் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார். இதன் மூலம் நிதி அமைச்சகத்தை முழு நேரமாக நிர்வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்ற அவர், 1970-71ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.