fd interest rates:நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது. ஹெச்டிஎப்சி, பேங்க் ஆஃப் பரோடா வங்கி, டெபாசிட்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது. ஹெச்டிஎப்சி, பேங்க் ஆஃப் பரோடா வங்கி, டெபாசிட்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன.
நாட்டில் நிலவும் உயர்ந்த பணவீக்க நிலையைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, வட்டிவீதத்தை கடந்த மே மாதம் 40 புள்ளிகள் உயர்த்தியது. அதன்பின் இந்த மாதத்தில் 50 புள்ளிகள் உயர்த்தியது. கடந்த 2 மாதங்களில் வட்டிவீதம் 90 புள்ளிகள் உயர்ந்துள்ளன. ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வீதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, பிற வங்கிகளும் டெபாசிட்களுக்கான வட்டியையும், கடனுக்கான வட்டியையும் உயர்த்தி வருகின்றன.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, எம்சிஎல்ஆர் வீதத்தை 20 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. ஒரு மாதம் மற்றும் 3 மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் 6.85 சதவீதத்திலிருந்து 7.05 சதவீதமாக அதிகரித்துள்ளது. 6 மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் 7.35%, ஓர் ஆண்டுக்கான எம்சிஎல்ஆ 7.40%, 2 ஆண்டுகளுக்கு 7.60%, 3 ஆண்டுகளுக்கு 7.70% சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே வைப்பு நிதிக்கான வட்டிவீதத்தை எஸ்பிஐ வங்கி 15 முதல் 20 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது, இது கடந்த 14ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பெரிய டெபாசிட்களுக்கான வட்டியையும் 50 முதல் 75 புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி ரூ.2 கோடிவரையிலான வைப்பு நிதிக்கான வட்டிவீதம் 6 மாதம் முதல் 9 மாதங்கள்வரை 4.65 சதவீதமாக வைத்துள்ளது. இதற்கு முன் 4.40 சதவீதம்வட்டி அளிக்கப்பட்டது.
9 மாதங்கள் ஒரு ஆண்டுக்கு குறைவான வைப்புத் தொகைக்கு 4.65% வட்டியும், ஓர் ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகைக்கு 5.35 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பேங்க் ஆப் பரோடா வங்கி, சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை 5 முதல் 10 புள்ளிகள் அதிகரித்துள்ளன. ஐடிபிஐ வங்கி, டெர்ம் டெபாசிட்களில் ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கு வட்டியை 10 முதல் 25 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி உயர்வு நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.