
உலகில் கொரோனாவைரஸ் கோரத்தாண்டவம் ஆடியதன் எதிரொலியாக நம் வாழ்க்கை முறையே முற்றிலும் மாறிப்போனது. பலருக்கு வாழ்க்கையை முடிவுக்கும் வந்துவிட்டது. எதுவாயினும் வாழ்க்கையை கடக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தில் மக்கள், அரசாங்ம், தொழில்நுட்ப நிறுவனங்கள் என பலதரப்பட்டோரும் ஒரு முடிவுக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் வியாபரத்தில் தொய்வு ஏற்படுவதை தவிர்க்க ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றும் வசதியை வழங்க துவங்கினர்.
கடந்த இரு ஆண்டுகளில் ஊரடங்கு, முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற புது வார்த்தைகளுடன் work from home திட்டமும் நம்மில் மிகவும் பழகிவிட்டது. அலுவலகம் சென்று பணியாற்றியவர்கள் இன்று வீட்டையே அலுவலகமாக மாற்றிக் கொண்டுள்ளனர். இரண்டு ஆண்டுகள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் ஊழியர்களை ஐ.டி. நிறுவனங்கள் மெல்ல அலுவலகம் வர வலியுறுத்த துவங்கி இருக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், முன்னணி ஐ.டி. நிறுவனங்களான விப்ரோ, காக்னிசண்ட், டி.டி.எஸ்., இன்ஃபோசிஸ் உள்ளிட்டவை தங்களின் ஊழியர்களை மீண்டும் அலுவலகம் வந்து பணியாற்ற அழைக்கின்றன. அந்த வகையில் மார்ச் முதல் வாரத்தில் ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டும் என நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பெங்களூரை சேர்ந்த விப்ரோ நிறுவனம் தனது மூத்த அதிகாரிகளை மார்ச் 3 ஆம் தேதி முதல் அலுவலகம் வர வலியுறுத்தி இருக்கிறது. முதற்கட்டமாக வாரத்தில் இரண்டு நாட்கள் இவர்கள் அலுவலகம் வந்து பணியாற்றுவர் என கூறப்படுகிறது. இதே போன்று காக்னிசண்ட் நிறுவனமும் தனது அலுவலகங்களை ஏப்ரல் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
2022 முழுக்க ஹைப்ரிட் முறையில் அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து பணியாற்றும் முறை கடைப்பிடிக்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனம் வரும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் அதிகளவு ஊழியர்களை அலுவலகம் வரவைக்க திட்டமிட்டுள்ளது. ஒமிக்ரான் பரவல் குறைந்துள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்களும் ஹைப்ரிட் முறையில் பணியாற்றும் சூழலை பின்பற்ற திட்டமிட்டுள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.