
ட்விட்டர் நிறுவனம் தங்களின் இயக்குநர் குழுவில் இணைவதற்கு டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கிற்கு அழைப்பு விடுத்த நிலையில், அதில் இணைய அவர் மறுத்துவிட்டார்.
ட்விட்டர் அழைப்பு
மாறாக, ட்விட்டரில் செய்யப்பட உள்ள மாற்றங்கள், திருத்தங்கள் குறித்து ஆலோசனைகளை மட்டும் வழங்குவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கி, அதிகமான பங்குகளை வைத்துள்ள தனிநபர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
விளக்கம்
இது குறித்து ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “ ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் 2022, ஏப்ரல் 9ம் தேதி எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக இணைவதாக இருந்தது. ஆனால், எலான் மஸ்க் அன்றைய தினம் எங்களுக்கு அளித்த தகவலில், நிர்வாகக் குழுவில் இணைவதற்கு விருப்பமில்லை எனத் தெரிவித்தார்.
எங்கள் நிர்வாகக்குழுவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எங்களுடைய பங்குதாரர்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும், நலன்களும் காக்கப்படும். எலான் எங்கள் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர்” எனத் தெரிவித்துள்ளார்
காரணம் என்ன
ட்விட்டர் பங்குகளை வாங்கியதில் போதுமான ஆணவங்களைத் தாக்கல் செய்யவில்லை என அமெரிக்க பங்குச்சந்தை எலான் மஸ்கின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து ட்விட்டரின் இயக்குநர்கள் குழுவில் இணையும் முடிவையும் எலான் மஸ்க் கைவிட்டார்
ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து 9.2 சதவீதப் பங்குகளை 7.35 கோடி டாலருக்கு எலான் மஸ்க் அவரின் ரோவோக்கபில் அறக்கட்டளை மூலம் வாங்கினார். இதன்மூலம் ட்விட்டர் நிறுவனத்தில் அதிகபட்சமாக பங்குகளை வைத்துள்ள தனிநபராகினார் மஸ்க்.
ட்விட்டர் நிறுவனத்துக்கு சனிக்கிழமை எலான் மஸ்க் வழங்கிய அறிவுறுத்தல்களில், ட்விட்டரின் ப்ளூ சப்கிரிப்ஸன் சேவையில், குறைந்தபட்ச சேவைக்கட்டணம் வசூலித்தல், விளம்பரங்களுக்குத் தடை, கிரிப்டோகரன்ஸியில் பணம் செலுத்துதல் போன்றவற்றை கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.