elon musk twitter : ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு குறித்து வங்கிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு குறித்து வங்கிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆட்குறைப்பு
ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் ஆட்குறைப்பும், வேலையாட்கள் மாற்றமும் அவசியம் என்று எலான் மஸ்க் கருதுகிறார் என்று தி வாஷிங்டன் போஸ்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டாலருக்கு வாங்கியுள்ள எலான்மஸ்க் அதை தனது விருப்பத்துக்கு மாற்றும் வேலையில் இறங்கியுள்ளார். இதற்கு முன் ட்விட்டர் நிறுவனம் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருந்துத, இனி தனியார் நிறுவனம் என்பதால் புதிய முயற்சிகளில் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார். ட்விட்டின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், வங்கிகளுடன் எலான் மஸ்க் ஆலோசித்து வருகிறார். இந்த ஆலோசனையில் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் ஏராளமான ஊழியர்களையும் குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கருத்துக் கூற மறுப்பு
இந்ததகவல் குறித்து ட்விட்டர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலிடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால், ஊழியர்களிடம் பேசிய பராக் அகர்வால், “ இந்த நேரத்தில் யாருக்கும் வேலையிழப்பு ஏற்படாது” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், எலான் மஸ்க் குறித்தும், நிறுவனத்தின் கொள்கை துறை குறித்தும் அறிந்த வகையில் “ ட்விட்டர் நிறுவனத்தில் விரைவில் ஆட்குறைப்பு இருக்கும்” என வாஷிங்டன் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அதிருப்தி
கேபிடல்ஹில் வன்முறையின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் மகன் ஹன்டரின் லேப்டாப் குறித்த செய்திகள் வந்தபோது, அதை ட்விட்டர் நிறுவனம் தணிக்கை செய்தது. இது தொடர்பாக ட்விட்டர் கொள்கை தலைவர் விஜய கட்டே மீது எலான் மஸ்க் வைத்த விமர்சனத்தில் அவரின் அதிருப்தி இருப்பது தெரிந்தது.
வேண்டாத சத்தங்கள்
ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் கூறுகையில் “ 4400 கோடி டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியபின் அவரிடம் இருந்து கண்டபடி பேச்சுகள், சத்தங்கள் வரும். இருப்பினும் நானும், என்னுடைய குழுவினரும் ட்விட்டரை சிறப்பாக மாற்றத் தேவையான பணிகளைத் தொடர்ந்து செய்வோம்” எனத் தெரிவித்திருந்தார்
பராக் அகர்வால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ட்விட்டரை சிறப்பாக மாற்றவே இந்தப் பணியைத் தேர்ந்தெடுத்தேன். என்ன தேவையோ அதை சரி செய்வோம், சேவையை வலிமையாக்குவோம். எவ்வளவு சத்தங்கள், வேண்டாத பேச்சுகள் வந்தபோதும்கூட, நாம் பெருமையுடன் நம்முடைய பணி தொடர்ந்து செய்வதில் கவனம் செலுத்துவோம்” எனத் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அகர்வால் சமீபத்தில் ஊழியர்களிடம் பேசிய ஆடியோ கசிந்தது, அதில் “ விரைவில் எலான் மஸ்க் அவரின் கவலையை வெளியிடுவார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் உறுதியானால், வித்தியாசமான முடிவுகள் எடுக்கப்படும். நம் அனைவரிடமும் எலான் மஸ்க் விரைவில் பேசுவதற்கான வாய்ப்பைத் தேடுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.