ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டாலருக்கு வாங்கும் ஒப்பந்தத்தை டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் திடீரென ரத்து செய்வதாக அறிவித்தார்.
ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டாலருக்கு வாங்கும் ஒப்பந்தத்தை டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் திடீரென ரத்து செய்வதாக அறிவித்தார்.
ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி பல்வேறு விதிமுறைகளையும், அம்சங்களையும் மீறி நடப்பதால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்த எலான் மஸ்க் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் சமூக வலைதளத்தை 4400 கோடி டாலருக்கு வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் பங்குச்சந்தையில் பைலிங்கில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தம் கையொப்பமானது.
ஆனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் தனது முடிவை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் திடீரென தெரிவித்தார்.
ட்விட்டர் நிறுவனத்தில் ஏராளமான போலிக் கணக்குகள் இருப்பதால், அதுதொடர்பாக தகவல்கள் தேவை என்று எலான் மஸ்க் கோரியிருந்தார். ஆனால் ட்விட்டர் நிறுவனம் அந்தப் போலிக் கணக்குகள், ஸ்பாம் குறித்த விவரங்களை வழங்கவில்லை. இது தொடர்பாக பலமுறை ட்விட்டர் நிறுவனத்துக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்குடனான ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டதேத்தவிர அந்தவிவரங்களை வழங்கவில்லை. ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் இடையிலான ஒப்பந்தம் முடிவுக்கு வரப் போவதாக வாஷிங்டன் போஸ்ட் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் அதிரடியாக தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் வழக்கறிஞர்கள் கூறுகையில் “ ஒப்பந்தத்தில் கூறப்பட்ட பல்வேறு அம்சங்களை மீறி ட்விட்டர் நிறுவனம் நடந்து கொண்டது. பல்வேறு தகவல்களைக் கேட்டிருந்தோம், போலிக் கணக்குகள் குறித்த விவரங்களைக் கேட்டிருந்தோம். ஆனால்,எதையும் ட்விட்டர் நிறுவனம் தரவில்லை. இவை அனைத்தும்ஒரு நிறுவனத்தை வாங்கும் முன் அடிப்படையான அம்சங்கள்” எனத் தெரிவித்தார்
ஆனால், ஒப்பந்தத்தை மீறி எலான் மஸ்க் நடந்துள்ளதால், அவருக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என ட்விட்ர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை டெலாவர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிர்வாகம் தொடர இருக்கிறது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும்ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் தெரிவித்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குமதிப்பு கடுமையாகச் சரிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக மஸ்க் அறிவித்த நிலையில் 54.20 டாலராக உயர்ந்தநிலையில் அதைவிட 36% குறைந்து, 34.58 டாலராகச் சரிந்தது.