
elon musk :சீனாவில் நடப்பு குழந்தைப் பிறப்பின் மூலம் ஒவ்வொரு தலைமுறையிலும் 40 சதவீத மக்கள் தொகையை சீனா இழக்கிறது என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்
சீனர்களுக்கு ஆர்வமில்லை
உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாகஇருந்த சீனாவில் கடந்த தசாப்தமாக கடைபிடிக்கப்பட்ட கடும் குடும்பக்கட்டுபாடு காரணமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆர்வம் மக்களிடையே குறைந்துவிட்டது. தம்பதியினருக்கு 3 முதல் 4 குழந்தைகள் இருந்த நிலையில் தற்போது ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளவே யோசிக்கிறார்கள்.
இதனால் சீனாவில் முதியோர் எண்ணிக்கை அதிகரி்த்தும், உழைக்கும் பிரிவில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருகிறது. நீண்டகாலத்தில் பொருளாதாரத்தில் பெரும் சிக்கலை உருவாக்கும் என்பதால், சீனா குடும்பக்கட்டுப்பாடு கொள்கையை தளர்த்தியது. தம்பதியினர் 3குழந்தைவரை பெற்றுக்கொள்ளலாம், அதற்கு தேவையான மானிய உதவிகளும் வழங்கப்படும் என அறிவித்தது.
மிகக் குறைவு
ஆனால், சீனர்கள், ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளவே அலுத்துக்கொள்வதால் அங்கு பொருளாதாரத்திலும், மக்கள்தொகையிலும் பெரிய அளவு மாற்றத்தை எதிர்காலத்தில் சந்திக்க இருக்கிறது. கடந்த ஆண்டு ஒரு கோடியே 60 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தபின், நாட்டில் ஓர் ஆண்டில் குழந்தை பிறப்பு மிகக் குறைவாகும். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் சுதந்திரமாக திருமணங்கள்நடத்தலாம், குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என சீன அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும், மக்கள் குழந்தைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வமில்லாமல் உள்ளனர்.
40 சதவீதத்தை இழக்கிறீர்கள்
இது குறித்து டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரில் சீனர்களை கடுமையாகச் சாடியும், வேதனையும் தெரிவித்து, பிபிசி இணையதளத்தில் வெளியான ஒரு கட்டுரையையும் பகிர்ந்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “சீனாவில் பெரும்பாலான மக்கள் ஒரு குழந்தைக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.
ஆனால் சீனாவில் 3 குழந்தைகள் வரை தம்பதி பெற்றுக்கொள்ளலாம் என்று அனுமதியளித்தபோதும், கடந்த ஆண்டு மிகமிகக் குறைவாக குழந்தை பிறப்புவீதம் இருந்துள்ளது. தற்போதுள்ள குழந்தை பிறப்புவீதத்தால் ஒவ்வொரு தலைமுறையிலும் 40 சதவீதம் மக்களை சீனா இழக்கும், மக்கள் தொகை வரிசை சீர்குலையப் போகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அளித்த பேட்டியி்ல் “ குழந்தை பெற்றுக்கொண்டால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதி அதை தள்ளிப்போடுகிறார்கள். இது ஒட்டுமொத்த முட்டாள்தனம். சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் குழந்தை பிறப்புவீதம் குறைந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்காவில் குழந்தை பிறப்பு வீதம் குறைந்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் அமெரிக்க சந்திக்கும் பிரச்சினையில் ஒன்று மக்கள் தொகை சீர்குலைவுதான்.” எனத் தெரிவித்துள்ளார்.
உயர்த்துவது கடினம்
சீனாவைச் சேர்ந்த சீன உலகமயமாக்கல் மையத்தின் மூத்த ஆய்வாளர் ஹூவாங் வென்ஜெங் கூறுகையில் “ எலான் மஸ்கின் கவலை நியமானது.கடந்த 10 ஆண்டுகளாக சீனாவில் மக்கள்தொகை குறைந்து வருகிறது. சீன அரசு தனது போக்கையும், மனநிலையையும் மாற்றாவிட்டால், நாட்டின் வளர்ச்சிக்கு மனிதர்கள் முக்கியம் என்பதை உணராவிட்டால், சரிந்துவரும் மக்கள் தொகையை மீண்டும் திரும்பிக் கொண்டுவர முடியாது” எனத் தெரிவித்தார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.