125 கி.மீ வேகம், 180 கி.மீ. ரேன்ஜ் - இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்

By Kevin KaarkiFirst Published Jan 29, 2022, 1:40 PM IST
Highlights

இக்னிட்ரான் மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இக்னிட்ரான் மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் சைபோர்க் GT120 எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை அறிமுகம் செய்தது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலில் 4.68 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 6 கிலோவாட் அளவு திறன் வழங்குகிறது. 

முழு சார்ஜ் செய்தால் புதிய சைபோர்க் GT120 மாடல் 180 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. சைபோர்க் GT120 மாடல் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 2.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த மாடலில் மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன. இக்னிட்ரான் ஏற்கனவே அறிமுகம் செய்த சைபோர்க் யோகா மற்றும் சைபோர்க் பாப் இ மாடல்களை போன்று இல்லாமல் புதிய சைபோர்க் GT120 மாடலில் பேட்டரியை கழற்றும் வசதி வழங்கப்படவில்லை.

இந்த எலெக்ட்ரிக் மாடலில் உள்ள 4.68 கிலோவாட் ஹவர் பேட்டரியுடன், பிரஷ்-லெஸ் டி.சி. மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அதிகபட்சமாக 6 கிலோவாட் அளவு திறனை வெளிப்படுத்தும். இந்த ஸ்போர்ட்ஸ் பைக் மணிக்கு அதிகபட்சமாக 125 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய ஐந்து மணி நேரங்கள் ஆகும்.  

புதிய சைபோர்க் GT120 மாடலில் காம்பி பிரேக் சிஸ்டம், முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் ஜியோ-ஃபென்சிங், ஜியோ லொகேஷன், யு.எஸ்.பி. சார்ஜிங், ப்ளூடூத், கீலெஸ் இக்னிஷன் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. 

இதன் கிளஸ்டரில் எல்.இ.டி. டிஸ்ப்ளே யூனிட் உள்ளது. இது பேட்டரி ஆயுள் பற்றிய விவரங்களை காண்பிக்கும். இந்த டிஸ்ப்ளே IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இக்னிட்ரான் மோட்டோகார்ப் நிறுவனத்தின் சைபோர்க் GT120 மாடல்- இகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று விதமான ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. 

சைபோர்க் GT120 முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரிவர்ஸ் மோட், பார்கிங் அசிஸ்ட், மோட்டார்சைக்கிளின் சத்தத்தை மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. புதிய சைபோர்க் GT120 மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிளாக் மற்றும் பர்பில் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதில் உள்ள மோட்டார் மற்றும் பேட்டரி ஐந்து வருடங்கள் வாரண்டியுடன் கிடைக்கிறது.

click me!