crude oil price: ரஷ்யாவிடம் இருந்து 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை மே மாதம் கொள்முதல் செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவிடம் இருந்து 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை மே மாதம் கொள்முதல் செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த மாதம் 24ம் தேதி முதல் நடந்துவரும் போருக்குப்பின், ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவின் முதல் கொள்முதல் இதுவாகும்.
பொருளாதாரத் தடை
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதி்த்தன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யவும் தடை விதித்தன. இதனால் ரஷ்யா தான் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெயை நட்பு நாடுகளுக்கு வரலாற்றில் இதுவரைஇல்லாத அதிரடி தள்ளுபடி விலையில் விற்கத் தயாராகிவிட்டது.
30 லட்சம் பேரல்
இதையடுத்து, ரஷ்யாவிடம் இருந்து போர் தொடங்குதற்கு முன்பே எண்ணெய் கொள்முதல் குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் பேசிவிட்டது. தற்போது ரஷ்ய நிறுவனங்களும் விலையைக் குறைத்துள்ளதால், 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை வரும் மே மாதம் ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. ஆனால் விலைவிவரங்களை வெளியிடவில்லை.
ரஷ்யா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடை, கச்சா எண்ணெய் இறக்குமதி தடை விதித்தபின் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா செய்யும் முதல் கொள்முதல் இதுவாகும்.
மவுனம் காத்த இந்தியா
உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலுக்குப்பின், ஐ.நா.வில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அதிருப்தியில் இருந்தன, ரஷ்யாவைவின் செயலை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால், இந்தியா ரஷ்யாவின் செயல்பாடுகள் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை 3 %அளவுதான் இந்தியா இறக்குமதி செய்தாலும், ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் இறக்குமதி 80 சதவீதம் நடக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரஷ்யா இந்தியாவுக்கு நீண்டகால நட்பு நாடு என்பதால், எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
சலுகை விலை
ஆனால், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, ரஷ்யா தன்னுடைய நாட்டில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயை நட்பு நாடுகளுக்கு சலுகை விலையில் விற்க முடிவெடுத்துள்ளது. சர்வதேச சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை கடுமையாகஅதிகரித்து வரும்நிலையில், ரஷ்யாவின் இந்த சலுகையை இந்தியாவும் பயன்படுத்திக்கொண்டு தனது இறக்குமதிச் செலவையும், அன்னியச் செலவானியையும் சரிக்கட்ட திட்டமிட்டுள்ளது.
உரம், கச்சா எண்ணெய்
இதுகுறித்துமத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் “ ரஷ்யா அதிரடியான தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை விற்பனை செய்தால், அதை இந்தியாவும் மகிழ்ச்சியாக ஏற்கத் தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
அவ்வாறு ரஷ்யா சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும்பட்சத்தில், ரஷ்ய ரூபிள்-இந்திய ரூபாய் மூலம் வர்த்தகம் செய்ய இரு நாடுகளும் ஆலோசித்துள்ளன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மட்டுமல்லாது உரம், பூச்சிகொல்லிகள் இறக்குமதியையும் ரூபிள்-ரூபாய் வர்த்தகத்தில் செய்யவும் ஆலோசிக்கப்படுகிறது.