Hindustan Motors to sell Contessa brand : இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த அம்பாசிடர் காரை அனைவருக்கும் நினைவிருக்கும் ஆனால், கான்டஸா காரை நினைவிருக்குமா எனத் தெரியவில்லை.
இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த அம்பாசிடர் காரை அனைவருக்கும் நினைவிருக்கும் ஆனால், கான்டஸா காரை நினைவிருக்குமா எனத் தெரியவில்லை.
அந்த கான்டஸா கார், அம்பாசிடர் கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டநிலையில் கான்டஸா பிராண்டை மட்டும் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்ய இருக்கிறது.எஸ்ஜி கார்ப்பரேட்மொபைலிட்டி பிரைவேட் நிறுவனத்துக்கு கான்டஸா பிராண்டை இந்துஸ்தான் நிறுவனம் விற்க இருக்கிறது. இரு நிறுவனங்களுக்கு இடையிலான விற்பனை தொகை குறித்து எந்தவிவரமும் வெளியிடப்படவில்லை.
கான்டஸா பிராண்ட் விற்பனை, உரிமை மாற்றுதல் தொடர்பாக எஸ்ஜி கார்ப்பரேட் மொபைலிட்டி நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் மோட்டார்ஸ் இடையே கடந்த 16ம் தேதி ஒப்பந்தம் நடந்துள்ளது. இதுதொடர்பாக இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபில் பைலிங்கில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கார்களில் கான்டஸா, அம்பாசிடர் இரண்டுமே இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. 1980களிலும், 2000 ஆண்டு தொடக்கத்திலும் இரு கார்களின் ஆதிக்கம் இந்தியச் சாலையில் அதிகம் இருந்தது. அதிலும் கான்டஸா காரில் ஒருவர் வந்தாலே அவரின் கவுரவம் அதிகரிக்கும் என்ற ரீதியில் இருக்கும்.
அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் செல்வதற்கு அம்பாசிடர் காரும், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள்,ஆளுநர்கள் செல்வதற்கு கான்டஸா காரும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களான ஹூன்டாய், ஃபோர்டு, டேவூ, மாருதிசூஸுகி கார்கள் வருகையால் கடும் போட்டியும், சவாலும் ஏற்பட்டது. இந்தப் போட்டியை சமாளிக்க முடியாமலும் காலத்துக்கு ஏற்ப கார்களை வடிவமைக்க இயலாததால் சந்தையிலிருந்து இரு கார்களும் காணாமல் போயின. சந்தையில் காணாமல் போனாலும் மக்கள் மனதில், கார் பிரியர்கள் மனதில் கான்டஸாவுக்கும், அம்பாசிடர் காருக்கும் தனி மதிப்பு இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
கடும்போட்டி காரணமாக கடந்த 2014ம் ஆண்டு மே.வங்கத்தில் உள்ள உத்தரப்பராவில் உள்ள தொழிற்சாலையை இந்துஸ்தான் மோட்டார்ஸ் மூடியது. அதன்பின் அம்பாசிடர் பிராண்டை பிரான்ஸ் நிறுவனமான பிஎஸ்ஏ குழுமம் ரூ.80 கோடிக்கு கடந்த 2017ம் ஆண்டு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.