
20 ஆண்டுகளாக அடையாளம் தெரியாத இமயமலை சாமியார் பேச்சைக் கேட்டு என்எஸ்இ எனப்படும் தேசியப் பங்குசந்தையை அதன் முன்னாள் தலைமைநிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணா நிர்வகித்தது செபி விசாரணையில் தெரியவந்துள்ளது.
1994ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக ரவி நரேன் இருந்தார். இவருக்குப்பின் சித்ரா ராமகிருஷ்ணா என்பவர் அந்தப் பதவிக்கு வந்தார். இவர் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை வரைபதவி வகித்தார்.
இவரின் பதவிக்காலத்தில் தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியின் ஆலோசகர் என்ற மிக முக்கிய பதவிக்கு ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவருக்கும் பங்குச்சந்தைக்கும் பெரிதாக தொடர்பு இல்லாதவர்.
ஆனாலும், இவர் மாதம் ரூ.15 லட்சத்தில் நியமிக்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.1.68 கோடி ஊதியம்வழங்கப்பட்டது. 2014ம் ஆண்டு சுப்ரமணியன் ஊதியம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டு, ரூ.2.01 கோடியாக உயர்த்தப்பட்டது,அடுத்த சில மாதங்களிலேயே 15 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.2.31 கோடியாக அதிகரிக்கப்பட்டது. 2015ம் ஆண்டு சுப்பிரமணியனுக்கான செலவு மட்டும் ரூ.5 கோடியாக அதிகரித்தது.
இந்நிலையில் சுப்பிரமணியன் நியமனத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளதாகவும், கட்டுப்பாடுகளை மீறி அவருக்கு ஏராளமான சலுகைகள், ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்புான செபி விசாரணை நடத்தியதில் விதிமுறைகள் மீறப்பட்டது உறுதியானது, மேலும் பல்வேறுஅதிர்ச்சிக்குரிய தகவல்களும் வெளியாகின.
இதுகுறித்து செபி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
என்எஸ்இயின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, கடந்த 20 ஆண்டுகளாக இமயமலையில் உள்ள ஒரு சாமியாரின் ஆலோசனையின்படிதான் நடந்துள்ளார். அவரின் அறிவுரைகள், கட்டளைப்படிதான் தேசியப் பங்குச்சந்தையையும் நடத்தியுள்ளார். தேசியப் பங்குசந்தையின் ரகசிய ஆவணங்கள், கோப்புகள் போன்றவற்றை மின்அஞ்சல் மூலம் அந்த சாமியாருக்கு அனுப்பிவைத்து அவரின் சொல்படி அனைத்து முடிவுகளையும் சித்ரா எடுத்துள்ளார்.
கடந்த 20ஆண்டுகளாக சாமியாரின் ஆலோசனைப்படி செயல்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா ஒருமுறைகூட அந்த சாமியாரை நேரில் பார்த்தது இல்லை. சிரோண்மனி என்ற பெயரில் அந்த சாமியாரை சித்ரா அழைத்துள்ளார்.
அந்த சாமியாரின் கட்டளைப்படிதான், என்சிஇ தலைமை செயல்அதிகாரிக்கு ஆலோசகராக அந்த துறைக்கே தொடர்புஇல்லாத சுப்பிரமணியம் என்பவர் 2013ம் ஆண்டு நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 3 முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.2.31 கோடியாக உயர்ந்தது. அதுமட்டுமல்லாமல் சர்வதேசப்பயணம், உள்நாட்டில் விமானத்தில் இலவசப் பயணம்,இதர சலுகைகள் என ஏராளமானவற்றை அந்த சாமியார் ஆலோசனைப்படி வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணா மின்அஞ்சலை ஆய்வு செய்துபார்த்தபோது, சுப்பிரமணியனுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை மட்டும் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு, அதிலும் 3 நாட்கள் மட்டும் வரலாம், விரும்பும் நேரத்தில் பணியாற்றலாம் என சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பங்குச்சந்தைக்கு ரூ.5 கோடிவரை இழப்பு ஏற்படுத்தியது, விதிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை சித்ரா ராமகிருஷ்ணா செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதலால், முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், முன்னாள் செயல் அதிகாரி ரவி நரேன், ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன், ஆகியோருக்கு தலா ரூ.2 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டை தடுக்காமல் இருந்த என்எஸ்இ ஒழுங்குஅதிகாரி வி.ஆர்.நரசிம்மனுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராத தொகையை 45 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய பங்குச் சந்தையை சாமியார் அறிவுரைப்படி நடத்திய சித்ரா ராமகிருஷ்ணா பங்கு தகவல்களை பல்வேறு நிறுவனங்களுக்கு ரகசியமாக பகிரும் ஊழலையும் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.