ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து நாட்களில் ரூ.535 கோடி உயர்ந்துள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. அதனுடன் சேர்த்து சில மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், ஆந்திர மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தின் முதல்வராக கூடிய விரைவில் அவர் பொறுப்பேற்கவுள்ளார். தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியை முடிவு செய்யும் கிங்மேக்கராகவும் சந்திரபாபு நாயுடு மாறியுள்ளார்.
இந்த நிலையில், ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து நாட்களில் ரூ.535 கோடி உயர்ந்துள்ளது. சந்திரபாபு நாயுடு நிறுவிய ஹெரிடேஜ் ஃபுட்ஸ் (Heritage Foods) என்ற நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஐந்து நாட்களில் 55 சதவீதம் அதிகரித்துள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் முதன்மை பங்குதாரரான (promoter) சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஷ்வரியின் சொத்து மதிப்பு ரூ.535 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
தாயின் மரியாதைக்காக 1,000 வேலைகளை இழக்கலாம்: கங்கானவ அறைந்த பெண் காவலர் மீண்டும் பொளேர்!
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாளான ஜூன் 3ஆம் தேதி ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.424க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இன்று, ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.661.25 ஆக உயர்ந்துள்ளது.
சந்திரபாபு நாயுடு 1992ஆம் ஆண்டில் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தை நிறுவினார். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான அந்த நிறுவனத்திற்கு பால் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என இரண்டு வணிக பிரிவுகள் உள்ளன. தற்போது, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஹெரிடேஜ் பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையில் முன்னிலையில் உள்ளன.
ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் முதன்மை பங்குதாரரான சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, 2,26,11,525 கோடி பங்குகளை வைத்திருக்கிறார். இவர்களது மகன் லோகேஷிடம் 1,00,37,453 கோடி பங்குகள் உள்ளன. ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்கள் விலை உயர்வால், லோகேஷின் சொத்து மதிப்பும் ரூ.237.8 கோடி உயர்ந்துள்ளது.