இனி விளம்பரங்களுக்கு நடுவேதான் சீரியலா? புலம்பும் இல்லத்தரசிகள்.. டிவி சேனல்களுக்கான கெடுவை நீக்கிய மத்திய அரசு!

Published : Aug 22, 2026, 06:03 PM IST
TV Channels

சுருக்கம்

TV Channels: டிவி சேனல்களுக்கான 12 நிமிட விளம்பர கெடுவை மத்திய அரசு நீக்கியுள்ளது. ஆகவே இனி விளம்பரங்களுக்கு நடுவேதான் சீரியலா? என இல்லத்தரசிகள் புலம்பி வருகின்றனர்.

டிவி சேனல்களுக்கான விளம்பர நேரக் கட்டுப்பாட்டை மத்திய அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங்கள் ஒளிபரப்ப வேண்டும் என்ற விதி இனிமேல் செல்லாது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், 'கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்ஸ் (திருத்த) விதிகள், 2026'-ஐ ஆகஸ்ட் 21 அன்று அரசிதழில் வெளியிட்டது. இதன் மூலம் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.

டிவி சேனல்களுக்கான விளம்பர கெடுவை நீக்கிய மத்திய அரசு

அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்ஸ் விதிகள், 1994-இன் விதி 7-இல் உள்ள துணை விதி (11) நீக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது. இந்த துணை விதிதான், ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிட விளம்பர வரம்பை நிர்ணயித்தது. இந்த விளம்பர நேரக் கட்டுப்பாடு, 2006-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அப்போது இந்தியாவில் வெறும் 62 டிவி சேனல்கள்தான் இருந்தன. ஆனால் இன்றைக்கு 900-க்கும் மேற்பட்ட சேனல்கள் உள்ளன என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: PF Balance Check: உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு? நொடியில் செக் செய்ய 4 ஈசி வழிகள்!

இந்தியாவில் அதிகரித்த டிவி சேனல்கள்

2006-ல், டிவி சேனல்களை ஒளிபரப்பும் முக்கிய தளமான கேபிள் டிவி, அனலாக் தொழில்நுட்பத்தில் இயங்கியது. அதனால் குறைவான சேனல்களை மட்டுமே ஒளிபரப்ப முடிந்தது. மக்களுக்கும் குறைவான தேர்வுகளே இருந்தன. ஆனால், கேபிள் டிவி துறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பிறகு, DTH, கேபிள் டிவி, HITS மற்றும் IPTV என அனைத்து தளங்களும் இப்போது டிஜிட்டல் மயமாகிவிட்டன. இந்த தளங்கள் தற்போது 300 முதல் 500 சேனல்கள் அல்லது அதற்கும் அதிகமாக ஒளிபரப்புகின்றன. இதனால், சந்தையில் போதுமான போட்டி உருவாகியுள்ளது.

விளம்பர வருவாயை நம்பியுள்ள சேனல்கள்

டிவி ஒளிபரப்புத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, விளம்பர நேரக் கட்டுப்பாடு தொடர்பான விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தியாவில், ஒரு சேனல் 'பே' சேனலாக இருந்தாலும் சரி, 'இலவச' சேனலாக இருந்தாலும் சரி, விளம்பர வருவாயைத்தான் பெரிதும் நம்பியுள்ளது. மேலும், டிஜிட்டல் மீடியாவில் இதுபோன்ற விளம்பர நேரக் கட்டுப்பாடு இல்லாததால், டிவி சேனல்களுக்கு ஒரு சமமற்ற போட்டி நிலவியது.

டிவி துறைக்குள்ளும், டிவி துறைக்கும் டிஜிட்டல் மீடியாவுக்கும் இடையேயும் சந்தையில் போதுமான போட்டி இருப்பதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கருதுகிறது. எனவே, நியாயமான போட்டியை உறுதி செய்வதற்கும், தொழில் செய்வதை எளிதாக்குவதற்கும் இந்த விளம்பர நேரக் கட்டுப்பாட்டை நீக்க அரசு முடிவு செய்துள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Floating Post Office: அட! தண்ணீரில் மிதக்கும் போஸ்ட் ஆபீஸ்! நம்ம நாட்டுல எங்க இருக்கு தெரியுமா?

இனி விளம்பரங்களுக்கு நடுவேதான் சீரியலா?

மத்திய அரசின் இந்த அறிவிப்பு டிவி சேனல்கள் நடத்தும் உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. விளம்பர கெடு நீக்கப்பட்டதால் இனிமேல் அதிக விளம்பரம் செய்ய முடியும். இதன்மூலம் அதிக வருவாய் கிடைக்கும். அதே வேளையில் இது டிவி சேனல்களை பார்ப்பவர்களுக்கு பேரிடி செய்தியாக அமைந்துள்ளது. ஏற்கெனவே டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நடுவே அடிக்கடி விளம்பரம் வந்து இல்லத்தரசிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். மத்திய அரசு விளம்பர கெடுவை நீக்கியுள்ளதால் இனி விளம்பரங்களுக்கு நடுவேதான் சீரியலா? என இல்லத்தரசிகள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Axis Credit Card: ஆக்சிஸ் கிரெடிட் கார்டு யூசர்களுக்கு ஷாக் நியூஸ்! ஆகஸ்ட் 28 முதல் புது ரூல்ஸ்!
Tamil Nadu Gold Ring Scheme: தங்க மோதிர டெண்டரை தட்டித் தூக்கிய ஜாய் ஆலுக்காஸ்.! தங்க மோதிர திட்டத்தில் நடந்தது என்ன?