இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம்: இடைநிறுத்திய கனடா!

By Manikanda Prabu  |  First Published Sep 3, 2023, 2:11 PM IST

இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது


டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டை வருகிற 9,10 ஆகிய தேதிகளில் இந்தியா நடத்த உள்ளது. இந்த மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொள்ளவுள்ள நிலையில், இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Agreement) இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது.

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான இந்தியா-கனடா பேச்சுவார்த்தைகளில் ஆரம்பகட்ட முன்னேற்றத்திலேயே அதனை இடைநிறுத்தம் செய்வதாக கனடா தரப்பு தெரிவித்துள்ளதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest Videos

undefined

இந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் எனவும், இந்த இடைநிறுத்த காலம் என்பது இரு நாடுகளும் முன்னேற்றத்தைக் கணக்கிட உதவும் என்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை சுமார் 6 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. சரக்குகள், சேவைகள், பிறப்பிட விதிகள், வர்த்தகத்திற்கான தொழில்நுட்பத் தடைகள் மற்றும் தகராறு தீர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய இடைக்கால ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா மற்றும் கனடா அதிகாரிகள் கடந்த மே மாதம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த ஒப்பந்தத்தை நடப்பாண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, இந்தியா-கனடா இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆரம்பகால முன்னேற்ற வர்த்தக ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படும் கனடாவுடனான இடைக்கால பேச்சுவார்த்தை, வேகமாக முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. ஆரம்பகால முன்னேற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை ஏப்ரல் மாதம் அந்நாட்டின் ஒட்டாவா நகரில் நடைபெற்றது. இந்தியா-கனடா இருதரப்பு சரக்கு வர்த்தகம் 2022ஆம் ஆண்டில் 8.2 பில்லியன் டாலர்களை எட்டியது. 2021 உடன் ஒப்பிடும்போது சுமார் 25 சதவீதம் அதிகமாக இது வளார்ச்சி அடைந்துள்ளது.

இந்த பின்னணியில், இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பிறப்பிட விதிகள் மற்றும் சில கட்டணங்கள் போன்றவற்றில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் இந்த இடைநிறுத்தத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

400 கோடி மதிப்புள்ள பங்களா.. விலை உயர்ந்த கார்கள்.. கௌதம் அதானியின் சொகுசு வாழ்க்கை எப்படி இருக்கு தெரியுமா?

அதேசமயம், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தையில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. மேலும், ஆஸ்திரேலியா  உடனான ஆரம்பகட்ட அறுவடை வர்த்தக ஒப்பந்தத்தை தடையற்ற வர்த்தக ஒப்பந்தமாக விரிவுபடுத்தும் முயற்சிகளிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது.

இந்தியாவும் கனடாவும் மூலோபாய பங்காளிகளாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக, கனடாவில் உள்ள காலிஸ்தான் சார்பு கூறுகள் குறித்து இந்தியா அடிக்கடி கவலை எழுப்பி வருகிறது. இதன் விளைவாக, இந்தியாவுக்கு எதிரான குரல்கள் கனடாவின் பல பகுதிகளில் ஒலித்து வருகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தியா அரசு முறைப்பயணம் சிறப்பாக அமையவில்லை. டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ட்ரூடோவின் வரவேற்புக்காக காலிஸ்தானி பிரிவினைவாதி ஜஸ்பால் அத்வாலுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதே அதற்கு காரணமாக கூறப்பட்டது.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு இந்தியா அழைப்பு விடுக்காததற்கு சமீபத்தில் ஆட்சேபனை தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ, ஜி20 உச்சி மாநாட்டிற்கு டெல்லிக்கு வரும்போது, உக்ரைன் விவகாரத்தை எழுப்புவேன் என்றும் கூறியிருந்தார்.

“இந்தியா-கனடா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவது இந்திய வர்த்தக நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத. ஏனெனில் இந்திய தயாரிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஏற்கனவே கனடாவில் வரிவிலக்கிற்குள் நுழைந்துவிட்டன. அவற்றிற்கு இந்த ஒப்பந்தத்தால் பலன் கிடைத்திருக்காது.” என திங்க் டேங்க் குளோபல் ரிசர்ச் இனிஷியேட்டிவ் இணை நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

click me!