பெண்ட்லி ஆடம்பர எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரம்

By Kevin KaarkiFirst Published Jan 26, 2022, 4:15 PM IST
Highlights

பெண்ட்லி  நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் தனது எலெக்ட்ரிக் கார் மாடல் எப்போது அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. 

பெண்ட்லி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் வெளியீட்டு விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முழுமையாக எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கும் பெண்ட்லி கார் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. விலை உயர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளர்கள் மெல்ல எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது பெண்ட்லி இணைந்து இருக்கிறது.

புகாட்டி மற்றும் போர்ஷ் போன்ற பிராண்டுகளை வைத்திருக்கும் ஃபோக்ஸ்வேகன் குழுமம் தான் பெண்ட்லியை நிர்வகிக்கிறது. முன்னதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் களமிறங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிட்ட நிலையில், தற்போது பெண்ட்லி நிறுவனமும் தனது எலெக்ட்ரிக் கார் மாடல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 

எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதற்கென பெண்ட்லி நிறுவனம் 3.4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. "ஆடம்பர கார்கள், மாற்று சக்தியில் இயங்கும் வாகனங்கள் மட்டுமின்றி எங்களின் அனைத்து திட்டங்களிலும் குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டுவதே எங்கள் குறிக்கோள்," என  பெண்ட்லி நிறுவன தலைமை செயல் அதிகாரி அட்ரியன் ஹால்மார்க் தெரிவித்தார்.  

பெண்ட்லி உருவாக்க இருக்கும் புது எலெக்ட்ரிக் கார் மாடல் பிரிட்டனில் உள்ள கிரீவ் ஆலையில் உருவாக்கப்பட இருக்கிறது. இதே ஆலையில் பெண்ட்லி நிறுவனத்தின் பல்வேறு பிரபல மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இங்கிருந்து நிறுவனத்தின் அனைத்து கார்களையும் மின்சக்தி மூலம் இயங்க செய்யும் எங்களின் நோக்கத்தை அடைய நீண்ட பயணம் காத்திருக்கிறது. இப்போதே புதிதாக உருவாக்கப்படும் பெண்ட்லி எலெக்ட்ரிக் கார் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

கார் கேபின்களை மிகவும் ஆடம்பரமாக வழங்குவதில் பெயர் பெற்ற நிறுவனமாக பெண்ட்லி இருக்கிறது. அந்த வகையில் பெண்ட்லி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல் அதிக விலை உயர்ந்ததாக இருப்பதோடு, இதுவரை இல்லாத அளவு தலைசிறந்த வடிவமைப்பில் கேபின் மிக ஆடம்பரமாக உருவாக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

சந்தையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஏற்கனவே தனது எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரங்களை அறிவித்துவிட்டது. அதன்படி ரோல்ஸ் ராய்ஸ் எலெக்ட்ரிக் கார் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர ஆஸ்டன் மார்டின் நிறுவனமும் எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் பணிகளை துவங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!