வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும்தான் வேலை, வேலைநேரத்துக்குப்பின் ஊழியர்களை நிறுவனம் கூப்பிடக்கூடாது உள்ளிட்ட சலுகைகளுடன் பெல்ஜியம் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும்தான் வேலை, வேலைநேரத்துக்குப்பின் ஊழியர்களை நிறுவனம் கூப்பிடக்கூடாது உள்ளிட்ட சலுகைகளுடன் பெல்ஜியம் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தொழிலாளர் சட்டத்தில் புதிய திருத்தத்தை பெல்ஜியம் அரசு கொண்டு வந்து இதை பிரதமர் அலெக்சான்டர் டி க்ரூ அறிவித்துள்ளார்.
வாரத்துக்கு 4 நாட்கள்தான் வேலை என்ற திட்டத்தை கடந்த 2015 முதல்2019ம் ஆண்டுவரை ஐஸ்லாந்து நாடு பரிசோதனை முறையில் பலமாநிலங்களில் அறிமுகப்படுத்தியது. அது 85% வெற்றி கிடைத்ததையடுத்து, நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தியது. அடுத்தார்போல், ஸ்பெயின், ஸ்காட்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளும் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.
இந்த திட்டத்தில் ஊழியர்கள் தினசரி 10 மணிநேரம், வாரத்துக்கு 40 மணிநேரம் பணியாற்றி 3 நாட்களை குடும்பத்தாருடன் செலவிடலாம். குடும்பத்தாருடன் அதிகநேரம் செலவிடும்போது, நல்ல ஆரோக்கியமான மனது, உடலுடன், புத்துணர்ச்சியுடனும் பணியாற்றுவார்கள் என்பதால் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், குடும்பத்துக்கும், வேலைக்கும் இடையே சரிசமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோணத்தில் அறிமுகம் செய்துள்ளன.
இந்த நாடுகளைப் பின்பற்றி பெல்ஜியம் நாடும் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாரத்துக்கு 4 நாட்கள் என்ற திட்டத்தையும் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கலாம். அல்லது 5 நாட்கள் என்ற முறையையும் தேர்வு செய்யலாம். இது அந்தந்த ஊழியர் சங்கத்துடன், நிறுவனங்கள் பேச்சு நடத்தி நடைமுறைப்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.
அதேபோல 20 தொழிலாளர்களுக்கு மேல்பணிபுரியும் நிறுவனங்களில் வேலை நேரத்துக்குப்பின், முக்கிய, அவசர வேலைகருதி தொழிலாளர்களை நிறுவனம் மேலாளர் அனுமதியின்றி தொடர்பு கொள்ளக்கூடாது. வார வேலைநாட்கள் முடிந்தபின்பும் தொழிலாளர்களை அவசரப்பணி காரணமாக தொடர்பு கொள்ளக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பெல்ஜியம் பிரதமர் அலெக்சான்டர் டி க்ரூ வெளியிட்ட அறிவிப்பில் “ கொரோனாபெருந்தொற்று நோய் ஊழியர்களை நெகிழ்வுத்தன்மையுடன் பணியாற்ற வைத்துள்ளது. அதாவது தங்களின் குடும்பப்பணி, சொந்தப் பணிக்கு மத்தியில் பணியைச் செய்ய வேண்டியநிலையில் உள்ளனர். இது புதிய பணிக்கான பாதையை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி வாரத்துக்கு 4 நாட்கள் வேலைத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். தொழிற்சங்கம் அனுமதித்தால், ஊழியர்கள் வாரத்துக்கு 4 நாட்கள் தினசரி 10 மணிநேரம் பணியாற்றலாம். தற்போது தினசரி 8 மணிநேரம், வாரத்துக்கு 5 நாட்கள் பணியாற்றுகிறார்கள். இனிமேல் 3 நாட்கள் குடும்பத்தாருடன் செலவிடலாம்” எனத் தெரிவித்தார்