
வங்கிகளின் வாராக் கடன் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1.33 லட்சம் கோடி குறைந்துள்ளது. அதாவது 2019ம் ஆண்டு மார்ச்சில் ரூ.9.33 லட்சம் கோடி இருந்தநிலையில் 2021 செப்டம்பர் காலாண்டில் ரூ8 லட்சம் கோடியாகக் குறைந்துவிட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் அளவு 80 சதவீதத்திலிருந்து 72% குறைந்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கும் பிரச்சினையே வாராக்கடன்தான். வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி கடன் பெறும் பெரு நிறுவனங்கள் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதால் ஆண்டுக்கு ஆண்டு வாராக்கடன் அளவு அதிகரித்து வருகிறது. இந்த வாராக் கடனிலிருந்து வங்கிகளை மீட்கத்தான் பேட்-பேங்க்(Badbank) உருவாக்கப்பட்டது.
பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்து வரும் வாராக் கடன் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் (NARCL) மற்றும இந்திய கடன் தீர்வு மையம்(DRCL) என்ற அமைப்புகளை நிதிஅமைச்சகம் உருவாக்கியது. ‘பேட் டெப்ட்’ (Bad Debt) என்று சொல்லப்படும் வாராக்கடனை கையாள்வதற்கென்றே தொடங்கப்பட்டுள்ளதால்அவ்வமைப்பு ‘பேட் பேங்க்’ (Bad Bank)என்று அழைக்கப்படுகிறது.
வங்கிகளிடமிருந்து பெற்ற வாராக் கடன் சொத்துகளை சந்தையில் விற்று அந்தத் தொகையை அந்தந்த வங்கிகளுக்குத் திருப்பிக் கொடுக்கும். இந்தியாவில் வாராக்கடன் நாட்டின் பொருளாதாரத்துக்கே நெருக்கடி ஏற்படுத்தும் அளவில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில் மத்திய அரசு பேட் பேங்கை உருவாக்கியுள்ளது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் ஒட்டுமொத்த வாராக்கடன் அளவு குறைந்திருப்பதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
மக்களவையில் நிதித்துறை இணைஅமைச்சர் பாகவத் காரத் அளித்த பதிலில் கூறுகையில் “ கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.9.33 லட்சம் கோடி வாராக்கடன் வங்கிகளுக்கு இருந்தது. இது 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிந்த காலாண்டில் ரூ.8 லட்சம் கோடியாக்க குறைந்தது. ஏறக்குறைய 2 ஆண்டுகளில் ரூ.1.33 லட்சம் கோடி வாராக்கடன் குறைந்துள்ளது. வாராக்கடன் அளவும் 80%லிருந்து 72%மாகக் குறைந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்த வாராக்கடன் ரூ.9 லட்சம் கோடியே 33 ஆயிரத்து 779 கோடியாகும். ஆனால், 2021, செப்டம்பர் 30ம் தேதி இந்த வாராக்கடன் ரூ.8 லட்சத்து 463 கோடியாகக் குறைந்துள்ளது.
வர்த்தகரீதியான வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் 2019, மார்ச் 31ம் தேதி வரை 79.2 % இருந்தது. இது 2021, செப்டம்பர் 9ம் தேதி நிலவரப்படி 72.3% ஆகக் குறைந்துவிட்டது. தனியார் வங்கிகளிலும் செயல்படா சொத்துக்கள் சதவீதம் இந்தக் காலக்கட்டத்தில் 19.4 சதவீதத்திலருந்து, 24.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பிரதான் மந்திரி ஜன் தன்யோஜனா திட்டத்தில் இதுவரை 44.51 கோடி வங்கிக்கணக்குகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வங்கிக்கணக்கு தாரர்கள் அதிகபட்சமாக ரூ.10ஆயிரம்வரை ஓவர்டிராப்ட் பெற்றுக்கொள்ளலாம். ஜன்தன் கணக்கு தாரர்கள், எஸ்வான்நிதி திட்டம் மூலம் பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட சாலை ஓர வியாபாரிகள் ஆகியோருக்கும் ஓவர் டிராப்ர்ட் மூலம் கடன் வழங்கப்பட்டது.
சாலை ஓர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் 32.69 லட்சம் சாலை ஓர வியாபாரிகளுக்கு 2022, ஜனவரி 31-ம்தேதி வரை ரூ.3,364 கோடி கடன் வழங்கப்பட்டது. தீனதயால் அந்தோதயா திட்டம், என்பிஎப் திட்டம் ஆகியவை மூலம் முன்னுரிமைத் துறைகளுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காரத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.