Russia Ukraine crisis: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்துள்ளதையடுத்து, ரஷ்யாவில் பொருட்களை விற்பனை செய்யப்போவதில்லை, நிறுத்துகிறோம் என்று ஆப்பிள், நைக், ஃபோர்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அதிரடியாக அறிவித்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்துள்ளதையடுத்து, ரஷ்யாவில் பொருட்களை விற்பனை செய்யப்போவதில்லை, நிறுத்துகிறோம் என்று ஆப்பிள், நைக், ஃபோர்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அதிரடியாக அறிவித்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யப் போர் தீவிரமடைந்துள்ளது. இதனால் ரஷ்யா மீது பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பொருளாதார, நிதித்தடையை விதித்துள்ளன. ரஷ்யாவிலிருந்து இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து பேரல் 110 டாலரை எட்டியுள்ளது. தங்கள் வான் எல்லையில் பறக்க அமெரிக்காவும் தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் பிரபல நிறுவனங்களும் தங்கள் பொருட்களை ரஷ்யாவில் விற்பனை செய்யமாட்டோம், நிறுத்துகிறோம் என அறிவித்து நெருக்கடி கொடுத்துள்ளன.
ஆப்பிள்:
ஆப்பிள் நிறுவனம் தனது விற்பனை அனைத்தையும் ரஷ்யாவில் நிறுத்தப்போவதாக நேற்று அறிவித்துள்ளது. மாஸ்கோ நகரில் சமீபத்தில் அலுவலகத்தை தொடங்கியபோதிலும், அதிபர் புதினின் அகங்காரமான போக்கைக்கண்டித்து, தங்களின் முடிவிலிருந்து பின்வாங்கியது. ரஷ்யாவில் எந்தவிதமான ஆப்பிள் நிறுவனப் பொருட்களும் விற்பனை செய்யப்படாது எனத் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “ உக்ரைனில் ரஷ்யாவின் அத்துமீறல் மிகுந்த கவலையளிக்கிறது. மனிதநேயப் பணிகளுக்கு ஆதரவு அளிக்க இருக்கிறோம், அகதிகளுக்கு ஆதரவு தேவை. அந்தப் பகுதியில் உள்ள எங்கள் ஆதரவாளர்களுக்கு உதவுவோம்” எனத் தெரிவித்துள்ளது
மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ரஷ்ய அரசின் ஆர்டி மொபைல் ஆப்ஸ் மற்றும் விண்டோஸ் ஆப்ஸிலிருந்தும் ரஷ்யாவின் விளம்பரங்களை நீக்கிவோம் எனத் தெரிவித்துள்ளது.
கூகுள்
கூகுள் நிறுவனமும் ரஷ்யா சார்பில் வழங்கப்பட்ட அனைத்து விளம்பரங்களையும் நீக்குவோம், ரஷ்ய சேனல்கள் ,இணையதளங்கள் விளம்பரங்களை ஒளிபரப்பமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. இதேபோல யூடியூப், ஃபேஸ்புக் நிறுவனமும் ரஷ்ய விளம்பரங்களை வெளியிடமாட்டோம் எனத் தெரிவித்துள்ளன
நைக்
விளையாட்டுவீரர்களுக்கான ஷூ, உடைகள் தயாரிப்பு நிறுவனமான நைக் , தங்களின் தயாரிப்புகளை ரஷ்யாவுக்கு அனுப்பமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. ரஷ்ய வாடிக்கையாளர்களுக்கு எங்கள் பொருட்கள் கிடைக்கும் என உத்தரவாதம் அளிக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது
எக்ஸான் மொபைல் கார்ப்
எஸ்ஸான் மொபைல் கார்ப்பரேஷன் நிறுவனம் ரஷ்யாவில் தங்கள் நிறுவனப் பணியையும், செயல்பாட்டையும் நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளது. ஷாக்லின்-1 பகுதியிலிருந்தும் வெளியேறுவதாக எக்ஸான் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் நிறுவனங்கள்
பிரி்ட்டனைச் சேர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல் நிறுவனம் ஆகியவையும் ரஷ்யாவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளன. ரஷ்யாவில் மிகப்பெரிய முதலீட்டாளர்களான இந்த நிறுவனங்கள் வெளியேறுவது பாதிப்பை ஏற்படுத்தும்
ஃபோர்டு
மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு நிறுவனம், ரஷ்யாவில் தங்கள் நிறுவனத்தின் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஹார்லி டேவிட்சன்
ரஷ்யாவுக்கு அனுப்ப இருந்த அனைத்து பைக்குகள், இருசக்கர வாகனங்களையும் உடனடியாக நிறுத்துவதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரைப்படங்கள்
இது தவிர வால்ட் டிஸ்னி கோ, வார்னர் மீடியா நிறுவனங்களும் தங்களின் புதிய திரைப்படங்களை ரஷ்யாவில் வெளியிடமாட்டோம். குறிப்பாக தி பேட்மேன் திரைப்படம் ரஷ்யாவில் வெளியிடப்படாது எனத் தெரிவித்துள்ளது.
போயிங்:
விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், ரஷ்யாவில் உள்ள தனது விமானங்களுக்கு உதரி பாகங்கள், பராமரிப்பு, விற்பனை அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.