ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் 9 வயதான பேரன் தேவன்ஷின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது
ஆந்திர மாநில முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக நேற்று பதவியேற்றார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி. நட்டா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜனசேனா தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் மற்றும் பலர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்று, மோடி 3.0 அரசில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக, சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினர் முதன்மை பங்குதாரர்களாக இருக்கும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு ஏற்றம் கண்டன. இதன் மூலம் அந்நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் அவரது மனைவி, மகன் ஆகியோரின் சொத்து மதிப்பு உயர்ந்தது.
பங்குசந்தையில் கடந்த சில அமர்வுகளில் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இரண்டு மடங்கு லாபம் ஈட்டியது. இதன் விளைவாக நிறுவனத்தில் 35.7 சதவீத பங்குகளை வைத்திருக்கும் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு அதிகரித்தது. அந்த நிறுவனத்தின் முதன்மை பங்குதாரரான (promoter) சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஷ்வரியின் சொத்து மதிப்பு ரூ.535 கோடிக்கும் அதிகமாக உயர்ந்தது.
ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தில், சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரிக்கு 24.37 சதவீத பங்குகளும், அவரது மகன் லோகேஷ் 10.82 சதவீதமும், அவரது மருமகள் பிராமணி 0.46 சதவீதமும், அவரது 9 வயது பேரன் தேவன்ஷ் 0.06 சதவீதமும் பங்குகளும் வைத்துள்ளனர். ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டதையடுத்து, ஜூன் 3ஆம் தேதியன்று ரூ.2.4 கோடியாக இருந்த சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவன்ஷின் 56,075 பங்குகளின் மதிப்பு இப்போது ரூ.4.1 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அவரது சொத்து மதிப்பு ரூ.1.7 அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்குகள் புதிய 52 வார உயர்வான ரூ.727.9ஐ எட்டியதால் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் ரூ.1,225 கோடியை ஈட்டியுள்ளனர்.
உலகின் டாப் 10 பணக்கார பெண்கள்.. இந்தியாவின் சாவித்ரி ஜிண்டாலுக்கு எந்த இடம்?
சந்திரபாபு நாயுடு 1992ஆம் ஆண்டில் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தை நிறுவினார். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான அந்த நிறுவனத்திற்கு பால் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என இரண்டு வணிக பிரிவுகள் உள்ளன. தற்போது, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஹெரிடேஜ் பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையில் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.