
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய் 60 டாலராக அதிகரித்துள்ளது. இந்த தாக்கம் இந்தியச் சந்தையில் எதிரொலிக்கும் என்பதால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல்விலையை உயர்த்தலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
2 ஆண்டுகளுக்கு பின்
சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை சந்தை நிலவரப்படி பிரண்ட் பெட்ரோலிய கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 60 டாலர்(ரூ.3,893) ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டுக்கு பின், தற்போதுதான் 60 டாலருக்கு அதிகரித்துள்ளது.
28: 72 சதவீதம்
இந்தியாவைப் பொருத்தவரை தனது எரிபொருள் தேவையின் 82 சதவீதத்தை இறக்குமதியின் மூலமே நிறைவேற்றி வருகிறது. இதில் 28 சதவீதம் பிரண்ட் கச்சா எண்ணையையும், 72 சதவீதம் மிகவும் மலிவாக கிடைக்கும் வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெயையும் இந்தியா நம்பி இருக்கிறது.
விலை உயர்வு?
இதற்கு முன் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை மாற்றப்பட்ட நிலையில், இப்போது எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி வருகின்றன.
அந்த அடிப்படையில் வெள்ளிக்கிழமை 60 டாலராக உயர்ந்த கச்சா எண்ணெயின் தாக்கம் பெட்ரோல், டீசல் விலையில் எதிரொலிக்கும். இதனால், அடுத்த சில நாட்களில் விலை உயர்த்தப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.
எதிர்ப்பு
நாள்தோறும் விலை மாற்றம் என்ற திட்டம் கொண்டு வந்ததில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் 7 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டதால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். இதையடுத்து, மத்திய அரசு கலால்வரியை 2 ரூபாய்குறைத்தது.
இதற்கு முன் கச்சா எண்ணெய் விலை அடிமட்டமாக குறைந்த நேரத்தில் அதன் பலனை மக்களுக்கு தராமல் மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் முதல் 2016ம் ஆண்டு ஜனவரி வரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.11.77 காசுகளும், டீசல்லிட்டருக்கு ரூ13.47 காசுகளும் கலால்வரியை உயர்த்திக்கொண்டது.
வாய்ப்பு
இதனால், தற்போது பெட்ரோல் லிட்டர் ரூ.71 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.60.47 காசுகளாக உயர்ந்து இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த வாரத்தில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கனிசமாக உயர்த்த அதிகபட்சமான வாய்ப்புகள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சிக்கல்
இமாச்சலப் பிரதேசம், குஜராத் தேர்தல் நடத்த விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், கலால் வரிக் குறைப்பையும் மத்திய அரசால் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இது ஒருவகையில், தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால், பா.ஜனதா அரசுக்கு தலைவலியை உண்டாக்கக்கூடும். மேலும், கலால் வரிக் குறைப்பை மத்திய அரசு செய்யும் பட்சத்தில் நிதிப்பற்றாக்குறை கடுமையாக இருக்கும் என்பதால், அதற்கு வாய்ப்பு இருக்காது எனத் தெரிகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.