1BHK வீடுகள்: சிறிய முதலீடு, பெரிய லாபம்?

Published : May 25, 2025, 05:12 PM IST
construction work

சுருக்கம்

குறைந்த வருமானம் உள்ளவர்களும் எளிதாக வங்கிக் கடன் பெற்று, வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்த முடியும் என்பதால், 1 BHK வீடுகள் முதலீட்டிற்கு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.

வீடு வாங்க வேண்டும் என்ற கனவை காணாத நடுத்தர வர்க்கத்தினரே இருக்க முடியாது. சென்னை போன்ற பெருநகரங்களில், நகரின் மத்தியப் பகுதியில் வீடு வாங்குவது, செலவு பிடிக்கும் விஷயம் என்றாலும், அந்த வீடுகள் ஒரு சில ஆண்டுகளிலேயே குறிப்பிடத்தக்க அளவு விலை உயர்ந்துவிடும். இதன் காரணமாகவே, நகரின் மையப் பகுதியில், விலை அதிகம் என்றாலும், வீடுகளை வாங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். தங்களின் தேவைக்காக வீடுகளை வாங்குபவர்கள் ஒருபுறம் என்றால், சொந்த வீடு இருந்தாலும், முதலீட்டைப் பெருக்குவதற்காக மீண்டும் ஒரு வீட்டை வாங்கி, அதனை வாடகைக்கு விடுபவர்களும் இருக்கின்றனர்.

அதிகரிக்கும் புதிய வீடு சிந்தனை

இதில் கிடைக்கும் வாடகை, முதலீட்டுத் தொகைக்கு ஈடாகுமா என்ற கேள்வி ஒருபுறம் எழுந்தாலும் புதிதாக வாங்கிய வீடு, அடுத்த சில ஆண்டுகளில் விலை உயர்ந்துவிடும் என்பதே முதலீட்டாளர்களின் எண்ணமாக இருக்கிறது. எனவே நகர்ப் பகுதிகளில் வீடு வாங்குவது சிறந்த முதலீட்டு யோசனையாக இருந்தாலும், அதிகத் தொகையை முதலீடு செய்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது என்கின்றனர் ரியல் எஸ்டேட் துறை முதலீட்டு ஆலோசகர்கள். ஒரு வரவேற்பறை, ஒரு சமையலறை, ஒரு படுக்கை அறை கொண்ட விலை குறைந்த 1 BHK வீடுகளை வாங்குவது சிறந்த யோசனையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

1 BHK வீடுகளே முதலில் விற்பனை

அளவில் சிறிதாக இருந்தாலும், 1 BHK வீடுகளுக்கான அடிப்படைத் தேவைகள் மற்றும் சொகுசு வசதிகளைச் செய்து தருவதில் முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள் எந்த வித சமரசமும் செய்து கொள்வதில்லை. அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, சென்னை போன்ற பெருநகரங்களில், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கட்டப்பட்ட 1 BHK வீடுகளே முதலில் விற்பனையாகின்றன என்பதும் தெரியவந்துள்ளது.

1 BHK வீடுகளின் தேவை உயர்வு

மும்பை, டெல்லி,சென்னை போன்ற பெருநகரத்தின் மையப் பகுதியில் 1 BHK வீடுகளை விடக் குறைந்த முதலீட்டில் வீடுகள் கிடைக்காது. கடந்த சில ஆண்டுகளாகவே, முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள்கூட குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் 1 BHK வீடுகளைக் கட்டியுள்ளன. அதற்கான தேவை உயர்ந்துள்ளதுதான் இதற்கு முக்கியக் காரணம் என்று கூறுகின்றனர் ரியல் எஸ்டேட் துறையினர். சிறய வீடாக இருந்தாலும் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

சிக்கலின்றி் கடனுதவி பெறலாம்

1 BHK வீடுகளை வாங்கும் நுகர்வோருக்குப் பல விஷயங்கள் சாதகமாக இருக்கும் . 2BHK, 2.5 BHK போன்ற மற்ற பெரிய வீடுகளை விட 1 BHK வீடுகள் விலை குறைவாகவே இருக்கும். எனவே, குறைந்த வருமானம் உள்ள நடுத்தர குடும்பத்தினரும் எளிதாக வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்து, சிக்கலின்றிக் கடனுதவி பெறலாம். வங்கிக் கடன் வாங்கினாலும், அதற்கான மாதாந்திரத் தவணைத் தொகை குறைவாகவே இருக்கும் என்பதால், எளிதாக வீட்டுக் கடனைத் திரும்பிச் செலுத்தி விட முடியும். வசதியான குடும்பம் என்றால், வங்கிக் கடனுதவி இல்லாமலேயே, சொந்த முதலீட்டில் 1 BHK வீடுகளை வாங்கிட முடியும்.

குறைந்த வாடகை நிறைந்த பலன்

கல்லூரிகளில் படிக்கும்  மாணவர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் எனப் பலரும், நகரின் மத்தியப் பகுதிகளில் வீட்டை வாடகைக்கு எடுக்கவே விரும்புவார்கள். அவர்களுக்கு, 1 BHK வீடுகள் சிறந்த தேர்வாகவே இருக்கும் என்பதால், இதனை வாடகைக்கு விடுவதில் தாமதம் ஏற்படாது என்பது கூடுதல் சிறப்பம்சம். குறிப்பாக கல்லூரி செல்லும் மாணவர்கள், தங்களின் படிப்பை முடிக்கும் வரை வாடகை வீடுகளில் தங்க விரும்புவார்கள். அதனால், குறைந்த வாடகை கொண்ட 1 BHK வீடுகளே அவர்களின் முதல் தேர்வாக இருக்கும். இதுதவிர, பிற பகுதிகளில் இருந்து பணி நிமித்தமாக, பெருநகரங்களுக்கு வருபவர்களும், 1 BHK வீடுகளையே வாடகைக்கு எடுக்க விரும்புவார்கள். எனவே, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற, நகர்ப் பகுதிகளில் 1 BHK வீடுகளைத் தேர்வுசெய்வதே சிறந்த முடிவாக இருக்கும் என ரியல் எஸ்டேட் முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். நகரின் நடுப்பகுதியில் இருக்கும் வீடு சின்னதோ பெருசோ அது சொந்தமாக இருந்தால் அதன் உரிமையாளருக்கு ஒரு கெத் இருக்கத்தானே செய்யும்.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?