சேமிப்பு பத்திரங்கள்: பாதுகாப்பான முதலீடா?

Published : May 25, 2025, 04:49 PM IST
Income Tax Saving

சுருக்கம்

மாறும் வட்டி விகித சேமிப்பு பத்திரங்கள், குறிப்பாக சீரான வருமானத்தை நாடும் முதலீட்டாளர்களுக்கு, பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக கருதப்படுகின்றன. 

குறைந்த முதலீடு அதிக லாபம் என எதிர்பார்ப்பவர்களுக்கு பெரும்பாலும் ஏமாற்றமே ஏற்படும். குறைந்த முதலீடு நியாயமான வருமானம் என கருதுபவர்களுக்கு சேமிப்பு பத்திரங்கள் போதிய பாதுகாப்பான லாபத்தை கொடுக்கிறது. அதே சமயம் எளிதான முதலீட்டு முறையும் அடித்தட்டு மக்களுக்கு இதனை கொண்டு சேர்க்கின்றன.வங்கிகள் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கத் துவங்கியுள்ள சூழலில், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு உத்தியை பரிசீலனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மாறும் வட்டி விகித சேமிப்பு பத்திரங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.இடர் குறைந்த தன்மையை நாடும் முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக சீரான வருமானத்தை நாடும் மூத்த குடிமகன்களுக்கு பொருத்தமான முதலீடு வாய்ப்புகளில் ஒன்றாக இந்த பத்திரங்கள் அமைகின்றன.

அதிக வட்டி விகித பலன்

தற்போதைய சூழலில், 8.05 சதவீத வட்டி விகித பலனும், அரசாங்கத்தின் பாதுகாப்பும் கொண்ட இந்த பத்திரங்கள் வைப்பு நிதியை விட கூடுதல் பலனை அளிக்கக்கூடியதாக கருதப்படுகின்றன. அரசு சார்பில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் சேமிப்பு பத்திரங்கள், மற்ற பத்திரங்கள் போல அல்லாமல் மாறும் வட்டி விகிதம் கொண்டவை. தேசிய சேமிப்பு சான்றிதழுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட கூடுதலாக 35 அடிப்படை புள்ளிகள் வட்டி கொண்டவை. சிறுசேமிப்பிற்கான வட்டி விகித போக்கிற்கு ஏற்ப இதன் வட்டி விகிதம் அமையும். குறைந்தபட்ச முதலீடாக 1,000 ரூபாய் மேற்கொள்ளலாம். முதலீட்டிற்கு உச்ச வரம்பு கிடையாது என்பதால் இதனை எல்லா தரப்பினரும் தேர்வு செய்யலாம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

சீரான வருமானம் தரும்

பாதுகாப்பன அதே சமயம் சீரான வருமானத்தை நாடும் முதலீட்டாளர்களுக்கு இந்த பத்திரங்கள் ஏற்றவை என கூறும் சந்தை ஆலோசகர்கள் வட்டி விகித ஏற்ற இறக்கங்களில் இருந்தும் இவை பாதுகாப்பு அளிப்பவை என அறிவுறுத்துகின்றனர். இந்த பத்திரங்களில் முதலீடு செய்வதும் எளிதானது எனவும் ரிசர்வ் வங்கியின் நேரடி முதலீடு இணையதளம் மூலம் முதலீடு செய்யலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதற்காக பத்திர பதிவேடு கணக்கை துவக்கி கொள்ள வேண்டும். டிஜிட்டல் முறையில் விண்ணப்பித்து, மின்னணு வடிவில் பராமரிக்கலாம். இதற்கான வட்டி விகித பலன், ஆண்டுக்கு இரு முறை அளிக்கப்படும். இந்த பலனை மொத்தமாக முதிர்வு காலத்திலும் பெற்றுக் கொள்ளலாம். முதலீடு செய்யும் போதே இந்த வாய்ப்பை தேர்வு செய்து கொள்ளலாம்.

தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்த பத்திரங்கள் பாதுகாப்பானவை என்றாலும், ஏழு ஆண்டு கால முதிர்வு கொண்டவை. முன்கூட்டியே விலக்கி கொள்ளும் வாய்ப்பு, நிபந்தனைகளுடன் மூத்த குடிமகன்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. முதிர்வு காலம் வரை காத்திருக்க வேண்டும் என்பதால், இவற்றை விரும்பிய நேரத்தில் பணமாக்கிக் கொள்வது சாத்தியம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை தேர்வு செய்து கொள்ளும் முன், தங்கள் பணமாக்கல் தேவையை கவனத்தில் கொள்ள வேண்டும். நிதி இலக்குகள் மற்றும் பணமாக்கல் தன்மைக்கு ஏற்ப முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும்.

நடுத்தர வர்க்கத்தினர் நாடும் முதலீடு

மற்ற முதலீடுகளில் போதிய பணமாக்கலை உறுதி செய்து, இந்த வாய்ப்பை பரிசீலிப்பது ஏற்றதாக இருக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். முதலீடு காலம் மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப திட்டமிடும் போது, இதன் சீரான வருவாய் தன்மை சாதகமாக அமையும். இந்த பத்திரங்களை மாற்றவோ, விற்கவோ முடியாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். வங்கிகளில் அடமானமும் வைக்க முடியாது. தேசிய சேமிப்பு சான்றிதழ் போல இந்த முதலீட்டின் மீது வரி விலக்கு கோர முடியாது. வட்டி விகித பலன் வரி விதிப்பிற்கு உட்பட்டது போன்ற சிரமங்கள் இருந்தாலும் எந்த காலத்தில் நமக்கு நஷ்டத்தை தராது என்பதால் இதனை நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் தேர்வு செய்யலாம்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Invest 1000 Rupees Scheme: ரூ.1,000 போதும்.. வங்கிகளை மிஞ்சும் வட்டி தரும் தபால் நிலைய திட்டம்
E85 Fuel: பெட்ரோலை விட லிட்டருக்கு ₹20 குறைவு! நாட்டில் அறிமுகமான புதிய எரிபொருள் - முழு விவரம்