1 Year Of CM Stalin : திமுக ஆட்சி ஓர் ஆண்டு நிறைவு: சவால்களை சமாளித்ததா நிதித்துறை..?

Published : May 07, 2022, 10:07 AM ISTUpdated : May 07, 2022, 10:51 AM IST
1 Year Of CM Stalin : திமுக ஆட்சி ஓர் ஆண்டு நிறைவு:  சவால்களை சமாளித்ததா நிதித்துறை..?

சுருக்கம்

1 Year Of CM Stalin: mk stalin: stalin cm: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவுக்கு வருகிறது. இந்த ஓர் ஆண்டில் நிதி மற்றும் வர்த்தகத்துறையில் பல்வேறு சவால்களை சந்தித்த திமுக அரசு அதை எவ்வாறு சமாளித்து வெற்றிகரமாக ஓர் ஆண்டே நிறைவு செய்திருக்கிறது என்பதை இந்த செய்தி தொகுப்பு விளக்குகிறது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவுக்கு வருகிறது. இந்த ஓர் ஆண்டில் நிதி மற்றும் வர்த்தகத்துறையில் பல்வேறு சவால்களை சந்தித்த திமுக அரசு அதை எவ்வாறு சமாளித்து வெற்றிகரமாக ஓர் ஆண்டே நிறைவு செய்திருக்கிறது என்பதை இந்த செய்தி தொகுப்பு விளக்குகிறது.

கடின உழைப்பாளி

திமுக 10 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தபின், முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறையாக அரியணை ஏறினார். தனது அரசியல் வாழ்க்கையில் அடிமட்டத் தொண்டனாக, நிர்வாகியாக, எம்எல்ஏவாக, மேயராக,அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக என பல்வேறு படிநிலைகளில் கடினமாக வளர்ந்தபின்புதான் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். 

பாதை எளிதல்ல

தனது அரசியல் பாதை முழுதும் பல்வேறு சவால்கள், சறுக்கல்கள், போராட்டங்களைச் சந்தித்து முதல்முறையாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்த அவருக்கு மகிழ்ச்சிக்குரியதாக அமையவில்லை.தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவிஏற்றபோது மாநிலத்தில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக இருந்தது. இதனால் தனது பதவி ஏற்புவிழாவைக் கூட மிகவும் எளிமையாக ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் நடத்தினார்.

முதல் சவால் 

கொரோனா 2-வது அலையிலிருந்து புதிதாக ஆட்சி அமைத்த திமுக அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்று எண்ணியபோது அதிலிருந்து வெற்றிகரமாக தமிழகத்தையும், தமிழக மக்களையும் மீ்ட்டது திமுக அரசு. 

நிதி நெருக்கடி

அடுத்ததாக தமிழக அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது, நிதிநிலைமைதான். அதிமுக ஆட்சியிலிருந்து இறங்கியபோது, தமிழகத்துக்கு இருந்த கடன் மட்டும் ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடி. 2020-21ம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி. ஆக தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சுமார் ரூ.2.63 லட்சம் கடனை அதிமுக அரசு விட்டுச் சென்றது.

இந்த சவாலை எவ்வாறு திமுக அரசு சமாளிக்கப் போகிறது. கடன் சுமை, வருவாய் பற்றாக்குறையிலிருந்து எவ்வாறு மீளப்போகிறது என்று எதிர்க்கட்சியினர் எள்ளி நகையாடினார். முதல்வர் முக ஸ்டாலின், நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் ஆகியோர் முன் தமிழகத்தின் நிதிச்சூழல் கவலைக்குரியதாகவும், பூதாகரமாவும் வளர்ந்திருந்தது. 

புதிய முயற்சி: பொருளாதார குழு

ஆனால் இதுவரை எந்தமாநிலத்திலும் இல்லாதவரையில் மாநிலத்தின் நிதிநிலையை சீரமைக்கவும், வருவாயைப் பெருக்கவும், ஏழ்மையை ஒழிக்கவும், சீராக நிதித்துறையை கொண்டு செல்லவும் புதிதாக ஒரு திட்டத்தை திமுக அரசு வகுத்தது. 
தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்பட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு, சர்வதேச அளவில் அறியப்பட்ட ஐந்து பொருளாதார நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை திமுக அரசு அமைத்தது.

இந்தக் குழுவில் இடம் பெற்ற 5 பொருளாதார வல்லுநர்களும் சர்வதேச அளவில் அறியப்பட்ட சிறந்த பின்புலத்தைக் கொண்டவர்கள். இந்தக் குழுவில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, வளர்ச்சிப்பொருளாதாரம், ஏழ்மை ஒழப்பில் வல்லுநரான ஜான் திரே, மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பொருளாதார ஆலோசகராக இருந்த எஸ். நாராயணன் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

தொலைநோக்கு அம்சம்

தமிழகஅரசைப் பொறுத்தவரை இந்தக் குழுவினரிடமிருந்து பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளை வகுப்பது, சமூக நீதி, மனித வளத்தை மேம்படுத்துவதில் வழிகாட்டுதல்  மாநிலத்தின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உற்பத்தி ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறது.

ஏன் அவசியம்

ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக பரப்பளவில் தமிழகம் உள்ளி்ட்ட பல மாநிலங்கள் உள்ளன. தமிழக அரசு பட்ஜெட்டில் ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடியைக் கையாளுகும்போது பொருளாதார நிபுணர்களின் ஆலோசனை மிகவும் அவசியம். தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் நிச்சயம் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனை தேவைப்படும்.

ஜிஎஸ்டி இழப்பு

அதுமட்டுமல்லாமல் நாட்டில் ஜிஎஸ்டி வரிமுறை கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபின், மாநில அரசுகள் கடும் வருவாய் பற்றாக்குறையைச் சந்திக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. மாநிலங்களுக்கு வருவாய்தரும் அனைத்து வழிகளையும் மத்திய அரசு மடைமாற்றிக்கொண்டது. 

மாநிலங்களின் நிதி இறையாண்மை என்பது ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வந்த பிறகு அடியோடு போய் விட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு 5 ஆண்டுகளில் 14 %வளர்ச்சி இருக்கும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டாலும் அது நடக்கவில்லை. 2022 வரை இழப்பீடு தரப்படும் என்றாலும் இன்னும் வருவாய் சீராகவில்லை.

 இதனால்தான் இழப்பீடு காலத்தை நீட்டிக்க வேண்டும் என மாநிலங்கள் கேட்கும் நிலை இருக்கிறது.  ஜிஎஸ்டி கவுன்சில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் இன்னும் நிலுவைத் தொகையை தராமல் இழுத்தடிக்கிறது. மாநிலங்கள் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், இம்மாதிரி பொருளாதாரக் குழு மிக அவசியம்.

பயன் என்ன?

இந்த குழு அமைக்கப்படுவதன் மூலம் என்ன பயன் என்று பொதுவாக சிலர் கேட்கலாம்.  இந்தக் குழுவில் இருக்கும் பொருளாதார வல்லுநர்களின்  தொடர்புகள் மூலம் புதிய முதலீடுகள் தமிழகத்துக்குள் வரலாம். பொருளாதார உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டிருப்பதால், பொருளாதாரம், முதலீடு ஆகியவற்றில் மாநில அரசு மிகத் தீவிரத்துடன் பணியாற்றுகிறது என்பதைப் புரிந்துகொண்டு பல நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வரும். 

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். வரி வருவாயும் அதிகரிக்கும். திமுக முன்வைத்த 7 அம்சத் திட்டத்தில் 2 இலக்க வளர்ச்சியை அடைய இந்த குழு உதவும். 

வெள்ளை அறிக்கை
2-வதாக தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆண்ட அதிமுக அரசு எவ்வாறு நிதி நிலையை விட்டுச் சென்றுள்ளது என்பதை மக்கள் அறிந்துகொள்வதற்காக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் 120 பக்க வெள்ளையறிக்கையை வெளியிட்டார். 

திமுக வெளிப்படைத்தன்மையுடைய அரசாக இருக்கிறது, மக்களின் ஒத்துழைப்பு மற்றும் கருத்துகளைப் பெற்று நிபுணர்களிடம் ஆலோசித்து அவர்களின் நிபுணத்தையும் சேர்த்து செயல்படுகிறது என்பதற்கு முக்கிய எடுத்துக்காட்டாகும்.
தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை தற்போது 3.16 சதவிகிதமாக இருக்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சியில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது மாநிலத்தில் ரூ.17,000 கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறை இருந்தது.

கடன் சுமை

 அதிமுக அரசின் கடைசி 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பொதுக்கடன் 3 லட்சம் கோடி, அதில் 50 சதவிகிதம் தினசரி செலவு என்ற அடிப்படையில் செலவழிக்கப்பட்டுள்ளது.

தமிழகஅரசின் வருவாயில் பெரும்பகுதி, ஊதியம், ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றுக்கு மட்டுமே செலவு செய்யப்படுகிறது. கடனை வாங்கித்தான் கட்டாய செலவை செய்தது இது வேறு எந்த மாநிலமும் நடக்காததாகும்.2011ம் ஆண்டு திமுக ஆட்சி நிறைவடையும்போது கடன் அளவு என்பது ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், அதிமுக ஆண்ட கடந்த 10 ஆண்டு காலத்தில் கடன் அளவு ரூ.5.70 கோடியாக உயர்ந்துள்ளது.

முதல் பட்ஜெட்

திமுக அரசு தாக்கல் செய்த முதல்முறையாக தாக்கல் செய்த முழுபட்ஜெட்டில்தான் இந்த கடன் அளவைக் குறைக்கவும், வருவாய் பற்றாக்குறையைப் போக்கவும் முதல் அடி எடுத்துவைக்கப்பட்டது. அதிமுக அரசுவிட்டுச் சென்ற கடனும், வருவாய் பற்றாக்குறையும் ஓர் இரவில் சரிசெய்யக்கூடியது அல்ல, முதல்வர் முக ஸ்டாலினிடமும், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனிடமும் மாயமந்திரக் கோலும் இல்லை. ஆனால், சீரிய திட்டமிடல், பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனையில் நீண்டகாலத்தில் இந்தப் பிரச்சினைகள், சிக்களில் இருந்து தமிழகம் மீண்டெளும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

வருவாய் பற்றாக்குறை
பட்ஜெட்டில் முதல்முறையாக நிதிநிலை மாற்றப்பட்டதால் தமிழகத்தில் ரூ.7ஆயிரம் கோடிக்கு அதிகமாக வருவாய் பற்றாக்குறை குறைய வழி செய்யப்பட்டது பாராட்டுக்குரியதாகும். கொரோனா போன்ற சவாலான காலகட்டத்திலும் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீகமாகக் குறைக்க பட்ஜெட்டில் வழி செய்யப்பட்டது.

வாக்குறுதி நிறைவேற்றம்

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடனே வாக்குறுதிகளில் மிக முக்கியமாக பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம், ஆவின்  பால்விலைகுறைப்பு , மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை கடும் நிதிச்சிக்கலுக்கு மத்தியிலும் நிறைவேற்றியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடும் நிதிப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பெட்ரோல் மீதான வாட் வரியில் லிட்டருக்கு ரூ.3 குறைத்தது திமுக அரசு. பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல்விலை உயர்வைக் காரணம் காட்டி பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியபோதிலும் இதுவரை திமுக அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவில்லை. மின்கட்டணத்தையும் உயர்த்தாமல் மக்களுக்கு சுமை ஏற்றாமல் இருக்கிறது. 

பாராட்டு
பட்ஜெட்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக்குறையை 2022-23ம் நிதியாண்டில் 3.5சதவீதத்துக்குள்ளும், 2023-24ம் ஆண்டு முதல் 3 சதவீதத்துக்குள் பராமரிக்க உறுதி செய்துள்ளதே பாராட்டுக்குரிய அம்சாகும்.
வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கப் படிப்படியான நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்துவருவதால் அதற்குரிய பலனும் நீண்டகாலத்தில் கிடைக்கும். குறிப்பாக கடன்தாங்குதன்மை வரையறுக்கப்பட்டு, வரவுக்கும் செலவுக்கும் சமநிலை இருக்குமாறு பராமரிப்பதாலே வருவாய் பற்றாக்குறை குறையக்கூடும்.

வரி அல்லாத வருவாய்

குறிப்பாக வரி அல்லாத வருவாய் நடப்பு நிதியாண்டில் 31 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. இது அடுத்தநிதியாண்டில் 15% 2024-25ம் ஆண்டில் 7% என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நீண்டகாலத்தில் வரிஅல்லாத வருவாயில் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது.
அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் வரிவருவாயில், தமிழக அரசின் பங்கு 2023-24ம் நிதியாண்டில் ரூ.37,591 கோடியாகவும், 2024-25ம் ஆண்டில் ரூ41,404 ஆக உயரும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளதே வரிவருவாய்  உயரும் என்பதையே காட்டுகிறது. இதன்மூலம்மெல்ல தமிழகத்தின் பொருளதாரம் மீளும் என்பதையே காட்டுகிறது

சமூகநலத் திட்டங்கள்

திமுக அரசு என்றாலே சமூக நீதி, சமூகநலத்திட்டங்கள், ஏழைகளின் வளர்ச்சியில்முன்னுரிமை ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும். அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் மானியங்கள் மற்றும் நிதிப்பரிமாற்றங்களுக்காக மட்டும் ரூ.1.13 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

சமூகநலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு அதிகப்படுத்தப்பட்டுவருகிறதே தவிர குறைக்கப்படவில்லை. 2023-24ம் ஆண்டில் ரூ.1.16 லட்சம் கோடியாகவும், 2023-25ம் ஆண்டில் ரூ.1.23 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக அரசு நிதிநெருக்கடிகாலத்திலும்கூட மக்களுக்கான சமூகநலத்திட்டங்களுக்கான நிதியைக் குறைக்காமல் செயல்படுகிறது என்பது தெரிகிறது

நீண்டகாலத்தில் குறையும்

வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கவும் திட்டங்களை வகுத்துள்ளது திமுக அரசு. 2022-23ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குரை ரூ.23,313 கோடியாக் குறைக்கவும், 2024-25ம் ஆண்டில் ரூ.13,582 கோடியாகக் குறைக்கவும்  திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 
வருவாய் பற்றாக்குறையை குறைப்பதன் மூலம் தமிழகத்தின் நிதிநிலைமை ஸ்திரப்பட்டு, கடன்தாங்குதன்மையும்வலுப்பெறும்.  பெரும்பாலும் வளர்ச்சிக்கான செலவினங்கள், நீண்டகாலத் திட்டங்ளுக்கு நிதியை அதிகமாக ஒதுக்கீடு செய்வதால் அதற்குரிய பலன்களும் நீண்டகாலத்தில் கிடைக்கத் தொடங்கும்.

முதல்வரின் பயணம்
முதல்வர் முக ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் துபாய் எக்ஸ்போ-வில் பங்கேற்கவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சந்திக்கவும் 5நாட்கள் அரசுமுறை பயணமாக துபாய் சென்றார். ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டார்களைச் சந்தித்துப் பேச்சிய மு.க.ஸ்டாலின் பல்வேறு  புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.

 இந்த பயணத்தின் மூலம் 6 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.6100 கோடி மிதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது இதன் மூலம் 14,700 பேருக்கு வேலை கிடைக்க இருக்கிறது என்ற செய்தியும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும்.

நீண்டகாலப் பலன்

திமுக ஆட்சிக்கு வந்த ஓர் ஆண்டுக்குள் தமிழகம் போன்ற மிகப்பெரிய மாநிலத்தில் பொருளாதாரத்தில் உடனடி மாற்றத்தை கொண்டுவருவது கடினம். ஆனால், நீண்டகாலத்தில் பலன் அளிக்கும் நடவடிக்களை எடுத்துவருவது பாராட்டுக்குரியது. தற்போது தமிழக அரசு எடுத்துவரும்பல்வேறு நிதிச் சீர்திருத்தங்கள், பொருளாதார ஊக்க நடவடிக்கைகள் நிச்சயம் நீண்டகாலத்தில் பலன் அளிக்கும் அதற்கான முதல்படிதான் முதலாம் ஆண்டு நிறைவு. 

நாட்டின் தற்போதைய வலுவிழந்த பொருளாதார சூழலிலும் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட உயர்ந்திருப்பது தமிழகத்துக்கு சாதகமானது. ஆதலால் திமுக ஆட்சியின் கீழ் நீண்டகாலத்தில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும் என நம்பலாம். 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Chemically Ripened Mangoes: உஷார்! நீங்கள் வாங்கும் மாம்பழம் இனிப்பானதா? அல்லது விஷமானதா?
Credit Card Rules Offer: கிரெடிட் கார்டு யூசர்களுக்கு குட் நியூஸ்! இனி இஷ்டத்துக்கு அபராதம் போட முடியாது - RBI அதிரடி!