Budget 2022 : மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும்? பொருளாதார பார்வையில் ஒரு விரிவான அலசல்

By manimegalai a  |  First Published Jan 31, 2022, 8:06 PM IST

புதிய வரிவிதிப்பு இருக்குமா, வருமானவரி உச்சவரம்பில் தளர்வு இருக்குமா, தொழில்துறையினருக்கு சலுகை இருக்குமா என சாமானியர்கள் முதல் சகலதரப்பு மக்களின் எதிர்பார்ப்பையும் ஒவ்வொரு பட்ஜெட் தூண்டி வருகிறது.


புதிய வரிவிதிப்பு இருக்குமா, வருமானவரி உச்சவரம்பில் தளர்வு இருக்குமா, தொழில்துறையினருக்கு சலுகை இருக்குமா என சாமானியர்கள் முதல் சகலதரப்பு மக்களின் எதிர்பார்ப்பையும் ஒவ்வொரு பட்ஜெட் தூண்டி வருகிறது.

அந்த வகையில், 2022-23-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தாக்கல் செய்யும் 10வது பட்ஜெட் இதுவாகும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் இதுவாகும். இந்திய அ ரசியலமைப்புச் சட்டத்தின் 125-வது பிரிவிலு பட்ஜெட்டை வரையரை செய்கிறது. 

Tap to resize

Latest Videos

undefined

பட்ஜெட்டுக்கு முதல்நாள் பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். வரும் 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% முதல் 8.5% வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக காகிதமில்லா ஸ்மார்ட் பட்ஜெட்டை முதல்முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்படி எம்.பி.க்கள் அனைவருக்கும் பிடிஎப் முறையில் பட்ஜெட் நகல்கள் வழங்கப்பட்டுள்ளன. 2-வது முறையாக ஸ்மார்ட் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

பட்ஜெட் எப்படி இருக்கும்

நிதியமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நிதியை 14%  உயர்த்தி வருகிறார். அந்தவகையில் வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் 14 % உயர்த்தப்பட்டால், பட்ஜெட் மதிப்பு ரூ.39.60 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்படும் என ப்ளூம்பெர்க் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இந்த பட்ஜெட்டில் வரிவிதிப்பு வீதங்களில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்றே பொருளாதார வல்லுநர்கள் கருத்தாக இருக்கிறது. அதேநேரம், கொரோனா பரவல் காரணாக அரசுக்கு ஏராளமான செலவுகள் ஏற்பட்டுள்ளதால், அதை சமாளிக்கும் வகையில் அரசின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக  புதிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

கொரோனா பரவல் ஏற்பட்டதிலிருந்து மத்திய அரசுக்கான பட்ஜெட் செலவு அதிகரித்துள்ளது. இதனால் ஜிடிபியில் மத்தியஅரசின் நிதிப்பற்றாக்குறை 6% அதிகமாக இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது. ஆனால், வரும் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை அளவை 6.1%அளவில் வைத்திருக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலக்கு வைப்பார் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 6.8% என விரிவடைந்துவிட்டது.

கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் பரவலால் பொருளாதார நடவடிக்கையில் பெரிதான தாக்கம் ஏதும் இல்லாவிட்டாலும், தாக்கல் இல்லை என மறுக்கமுடியாது. குறிப்பாக வேலையின்மை அளவையும், சமத்துவமின்மையையும் பெருந்தொற்று அதிகரித்துள்ளது.

ஆதலால், வேலையின்மையை கட்டுப்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிகமான நிதியை பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஒதுக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். இல்லாவிட்டால், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் இல்லாத பட்ஜெட் என  எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை சந்திக்க வேண்டியதிருக்கும்.

அதுமட்டுமல்லாமல் சமத்துவமின்மை அதிகரிப்பால் ஏழ்மையில் வீழ்ந்த மக்களின் எண்ணிக்கை கனிசமாக அதிகரி்துள்ளதாக சமீபத்தில் ஆஃக்ஸ்பாம் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. ஆதலால், ஏழ்மையிலிருந்து மக்களை மீட்கும் வகையில் திட்டங்கள், வசதிபடைத்தவர்களுக்கு புதிய வரி விதிப்பது பற்றி அறிவிக்கலாம். 

பெருந்தொற்று பரவல் ஒமைக்ரானோடு முடிந்துவிடாது என உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளதால், இனிவரும்காலங்களில் சுகாதாரத்துறைக்கு அதிகமான முதலீடுகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது. மேலும், பெரும்தொற்று காலத்தில் குழந்தைகளின் கல்வி பாதிப்பு, கற்றல் இடைநிற்றல் ஆகியவை அதிகரித்துள்ளதால், கல்விக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்படலாம்

5 மாநிலத் தேர்தல் அடுத்த மாதம் நடந்தாலும் அதில் வாக்காளர்களைக் கவர்வதற்காக பெரிதாக எந்தத்திட்டங்களும் இருக்க வாய்ப்பில்லை என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அதற்கு பதிலாக இந்தியாவின் கடன்பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், என்ஆர்ஐ ஆகியோரின் முதலீட்டை ஈர்க்க வரிச்சலுகை, திட்டங்களை அறிவிக்கலாம்.

பங்குப்பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கு விரி விதிக்கப்படுகிறது. இந்த வரி பட்ஜெட்டில் நீக்கப்படலாம். இதன் மூலம் வெளிநாட்டி இந்தியர்கள் அதிகமாக முதலீடு செய்வது ஊக்குவிக்கப்படும். ரிசர்வ் வங்கிக்கு டாலர் முதலீடு அதிகரிக்கும், நிதிப்பற்றாக்குறை அளவு குறையும். 
இந்த பட்ஜெட்டில் உற்பத்தி துறை, வேளாண்துறையை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள், திட்டங்கள், வரிச்சலுகைகள் வழங்கப்படலாம்.

விவசாயிகள் வருமானத்தை 2022ம் ஆண்டுக்குள் இருமடங்காக்குவேன் என பிரதமர் மோடி வாக்குறுதியளித்துள்ளார். ஆதலால், அதை செயல்படுத்தும்விதத்தில் திட்டங்கள் ஏதேனும் அறிமுகப்படுத்தப்படலாம். மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும், ஏற்றுமதியை அதிகப்படுத்தவும் அதிகமான சலுகைகள் இருக்கலாம் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

பெருந்தொற்று காரணமாக சமூகத்தில் ஏழை-பணக்காரர்கள் இடைவெளி வெகுவாக அதிகரித்துள்ளது பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஆதலால், ஏழை மக்களை தூக்கிவிடும் வகையில் சிறப்புச் சலுகைகள், திட்டங்கள், பணக்காரர்கள் மீது வரிவிதிப்பு போன்றவை இருக்கலாம். 
பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்ஸி, டிஜிட்டல் கரன்ஸியை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே அறிவிப்பு வரலாம் எனத் தகவல் வெளியானது. ஆனால், ஏதும் வரவில்லை. ஆதலால், பட்ஜெட்டில் அதுகுறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

click me!