2022- 23 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மக்களவையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு தொடங்கிய உரை 1 மணி நேரம் 30 நிமிடங்களில் முடிந்தது.கடந்த நான்கு ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கை மீது உரையாற்ற அவர் எடுத்துக்கொண்ட குறைவான நேரம் இது தான்.
2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதையொட்டி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் மத்திய நிதி துறை இணை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். இதனையடுத்து நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை காலை 10.20 மணியளவில் கூடியது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற விவாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அமைச்சரவைக்கு ஓப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்திய பொருளாதாரம் அடுத்த 25 ஆண்டுகளில் விரிவடைவதற்கு அடிதளமாக இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச தொடங்கினார்.டிஜிட்டல் கரன்சி,5ஜி ஏலம்,நதிகள் இணைப்பு திட்டம்,ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி திட்டம்,60 லட்சம் பேருக்கு வேலை, 400 வந்தே பாரத் ரயில்கள்,அனைத்து கிராமங்களில் இணைய வசதி,ஒரு லட்சம் கோடி வட்டியில்லா கடன், வருமானவரி - 2 ஆண்டு அவகாசம்,கிரிப்டோ கரன்சி - 30% வரி,போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
undefined
அதே போல இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக வருமானவரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் ஏற்படவில்லை, வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2.5 லட்ச ரூபாயாகவே தொடரும்.மேலும் இதுவரை இல்லாத வகையில் ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் 1.40,986 கோடியாக அதிகரித்துள்ளது எனவும் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே இந்த அளவுக்கு ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்திருப்பது பொருளாதார மீட்சி நிலையை காட்டுகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில் நிதிநிலை அறிக்கையை 11 மணிக்கு தாக்கல் செய்ய தொடங்கிய அவர், 1 மணி 31 நிமிடங்களுக்கு உரையாற்றினார். கடந்த நான்கு ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கை மீது உரையாற்ற அவர் எடுத்துக்கொண்ட குறைவான நேரம் இது தான். கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை மீது உரையாற்ற அவர் 1 மணி நேரம் 48 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார்.2020 - 21 ஆம் ஆண்டிற்கான நிதியாண்டில் பட்ஜெட் உரையை முடிக்க இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார்.இதுவே அவர் எடுத்துக்கொண்ட அதிகபட்ச நேரமாகும். இதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டில் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார்.