பொருளாதார ஆய்வறிக்கையில் சாதகமான நிலை, பொருளாதார வளர்ச்சியில் மீட்சி, ஜிஎஸ்டி வரி வசூலில் தொடர்ந்து உயர்வான போக்கு, 7-வது மாதமாக லட்சம் கோடிகளில் ஜிஎஸ்டி வரி வசூல், கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தை நோக்கிய பயணம் ஆகிய சாதகமான அம்சங்களுடன் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
பொருளாதார ஆய்வறிக்கையில் சாதகமான நிலை, பொருளாதார வளர்ச்சியில் மீட்சி, ஜிஎஸ்டி வரி வசூலில் தொடர்ந்து உயர்வான போக்கு, 7-வது மாதமாக லட்சம் கோடிகளில் ஜிஎஸ்டி வரி வசூல், கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தை நோக்கிய பயணம் ஆகிய சாதகமான அம்சங்களுடன் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
undefined
மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறப்பேற்றபின் தனது 4-வத பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா, இந்த ஆண்டும் 2-வது முறையாக ஸ்மார்ட் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் பெருந்தொற்றிலிருந்து மீண்டுவந்து, வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற பெயரை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆதலால் இந்த போக்கை தக்கவைக்க முயலும் மத்திய அரசு வரும் பட்ஜெட்டில் உள்கட்டமைப்புத் துறையை வலுப்படுத்தவும், ஜிடிபியை மேம்படுத்தவும் அதிக அக்கறை காட்டும்.
சம்பளம் வாங்குவோருக்கு சலுகை இருக்குமா?
வருமானவரி செலுத்தும் ஊதியம் பெறும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு கடந்த 2014 ஆண்டுகளாக மத்திய பட்ஜெட்டில் எந்தவிதமான நேரடிச் சலுகையும் இல்லை, வருமானவரிப் படிநிலை மாற்றப்படவில்லை. கொடுப்பதுபோல் கொடுத்து மறுபுறம் எடுத்துக்கொள்ளும் அறிவிப்பாக இருக்கிறது. அடிப்படை வருமானவரி விலக்கு இன்னும் ரூ.2.5 லட்சமாகவே இருக்கிறது. இதை ரூ.3 லட்சமாக உயர்த்தக் கோரி அருண் ஜேட்லி காலத்திலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்த முறை அதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும், மூத்த குடிமக்களுக்கான அடிப்படை வருமானவரி விலக்கு ரூ.3.50 லட்சமாகவும் உயரலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பொருளாதார வல்லுநர்கள் நடத்திய சர்வேயில் 64% பேர் அடிப்படை வருமானவரி விலக்கு இந்தமுறை உயர்த்தப்படும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக டிடிஎஸ் முறையை முறைப்படுத்தியது, டிசிஎஸ் முறையை எளிமைப்படுத்தியது, வரிரீதியான சிக்கல்களைத் தீர்க்கவும், அதற்கான கட்டமைப்பை உருவாக்கவும் மத்தியஅரசு கடந்த காலங்களில் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. ஆதலால், வரிவிதிப்பு முறையை எளிமைப்படுத்தும்வகையில் அறிவிப்பு இருக்கலாம்.
சுகாதாரத்துறை
கொரோனா பெருந்தொற்றுக்குப்பின் மத்திய அரசு சுகாதாரத்துறையின் மீது கூடுதல் அக்கறை செலுத்திவருகிறது. இந்த கவனம், அக்கறை இந்த பட்ஜெட்டிலும் தொடரக்கூடும் எனத் தெரிகிறது. கிராமப்புறங்களில் இன்னும் மருத்துவச்சேவை எட்டப்படாமல் இருக்கிறது, 2வது மற்றும் 3-வது தரநகரங்களிலும் எதிர்பார்த்த நவீன மருத்துவச் சேவை கிடைக்கவில்லை. குறிப்பாக ஐசியு வசதி, வென்டிலேட்டர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, ஆக்சிஜன் பிளான்ட் ஆகியவை இல்லை.
இதற்கான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வரலாம். நாட்டின் ஜிடிபியில் தற்போது 1.2 % மருத்துவக் கட்டமைப்புக்கு ஒதுக்கப்படுகிறது, இதை 3% சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மருத்துவத்துறையினர் சார்பில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பெருந்தொற்று காலத்தில் இந்தியா மருத்துவத்துறையின் மையமாகவே உலகளவில் கருதப்பட்டது. கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு, அது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆதலால், பெருந்தொற்றுக்கான மருந்துக் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், மருந்துகள், கருவிகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படலாம்.
சுகாதாரம் மற்றும் உடல்நலம் சார்ந்த சேவைகளுக்காக ரூ.2.23 லட்சம் கோடி கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. வரும்நிதியாண்டு பட்ஜெட்டில் இதைவிட கூடுதலாக நிதி ஒதுக்கிடலாம்
சிறு,குறு, நடுத்தரத் தொழில்கள்
நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இருப்பது சிறு,குறு, நடுத்தரத் தொழில்கள்தான். பெருந்தொற்று காலத்தில் இந்த சிறுதொழில் பிரிவினர் ஏராளமான இழப்புகளையும், கதவடைப்புகளையும் சந்தித்தனர், இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். கடந்த சில மாதங்களாகத்தான் மீண்டும் இந்தத் துறையினர் துளிர்விட்டு வருகிறது. ஆதலால், இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் விரைவாக மீண்டுவர கடன் வழங்கும் முறை எளிமைப்படுத்தப்படலாம், கடன் வழங்குவதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம். இசிஎல்ஜிஎஸ் எனப்படும் அவசரகால கடன் உறுதித் திட்டத்தை 2023ம்ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை கூட நீட்டிக்கலாம்.
சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ. 15,700 கோடி ஒதுக்கப்பட்டது, இது அதற்கு முந்தைய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு என்றுகூறப்பட்டது. வரும்பட்ஜெட்டில் கூடுதலாக ஒதுக்கப்படலாம்.
சுற்றுலாத்துறை
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மோசமாக பாதிக்கப்பட்டதில் சுற்றுலாத்துறை முக்கியமானது. ஆதலால், சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய சலுகை,ஊக்கம் ஆகியவை வழங்கப்படலாம்.
உற்பத்தி துறை
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உற்பத்தி, ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆதலால், உற்பத்தி துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள், குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குச் சலுகை, மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்த கூடுதல் நிதிஒதுக்கீடு போன்றவை இருக்கும். ஏற்றுமதியை அதிகப்படுத்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை இருக்கும்.
வேளாண் துறை
வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்தாலும் அது போதாதாகவே இருக்கிறது என்பது விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது. 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதால் அதுதொடர்பான அறிவிப்பு வரலாம்.
நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டது. கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த கடன் தொகை வரும் பட்ஜெட்டில் அதிகரிக்கப்படலாம்.