
இந்தியச் சந்தையில் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது பிரபல எஸ்யூவி மாடல்களான எம்ஜி ஹெக்டர் மற்றும் எம்ஜி ஆஸ்டருக்குக் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தச் சிறப்பு ஆண்டு விழாச் சலுகையின் கீழ், எம்ஜி ஹெக்டர் ஷார்ப் ப்ரோ மேனுவல் வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19.59 லட்சமாகவும், எம்ஜி ஆஸ்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சத்தில் தொடங்குகிறது.
மேலும், வாகனக் கடன் பெறுவோருக்குப் பதிவு மற்றும் காப்பீடு உள்ளிட்ட ஆன்-ரோடு விலையிலும் சலுகைகள் உண்டு. அதாவது, எம்ஜி ஹெக்டர் மற்றும் ஆஸ்டர் எஸ்யூவிகளை இப்போதே வாங்கி, சில மாதங்களுக்குப் பிறகு இஎம்ஐ செலுத்தத் தொடங்கலாம்.
இந்த மைல்கல் ஆண்டு விழா, எங்கள் பயணத்தைப் பற்றிச் சிந்திக்கவும், சாதனைகளைக் கொண்டாடவும், எல்லாவற்றிற்கும் மேலாக எம்ஜி ஹெக்டர் மற்றும் ஆஸ்டரைத் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி வினய் ரெய்னா தெரிவித்தார். சிறந்த விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தைப் புதுப்பிப்பதில் எம்ஜி முன்னணியில் உள்ளது. இந்தியச் சாலைகளில் 8 பில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமாக ஓடிய எம்ஜி ஹெக்டர் மற்றும் ஆஸ்டர் எஸ்யூவிகளில் அதிக சலுகைகளைப் பெறும் இந்த வாய்ப்பு எங்கள் வாடிக்கையாளர் மைய அணுகுமுறைக்குச் சான்றாகும் என்றும் அவர் கூறினார்.
எம்ஜி ஹெக்டர் சிறப்பம்சங்கள்
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி 2.0 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு எஞ்சின் விருப்பங்களில் கிடைக்கிறது. டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஹெச்பி பவரையும் 350 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. பெட்ரோல் எஞ்சின் 143 பிஹெச்பி பவரையும் 250 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டாக உள்ளது. டர்போ-பெட்ரோல் எஞ்சினுக்கு 6-ஸ்பீட் டூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் விருப்பமும் உள்ளது. பெட்ரோல் எஞ்சினில் 48வி மைல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இருக்கும்.
எம்ஜி ஆஸ்டர் சிறப்பம்சங்கள்
எம்ஜி ஆஸ்டர் 110 பிஹெச்பி 1.5 லிட்டர், 4-சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 140 பிஹெச்பி 1.3 லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என இரண்டு பெட்ரோல் எஞ்சின்களில் கிடைக்கிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் ஐந்து ஸ்பீட் மேனுவல், ஆறு ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் எட்டு ஸ்பீட் சிவிடி ஆட்டோமேட்டிக் ஆகியவை அடங்கும்.