Triumph Daytona 660 பைக்கின் விலை சுமார் ரூ.9 லட்சமாக இருக்கலாம். இது கவாஸ்கி நிஞ்ஜா 650, ஹோண்டா CBR650R மற்றும் யமஹா R7 ஆகிய ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ட்ரையம்ப் டேடோனா 660 (Triumph Daytona 660) பற்றிய தகவல் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இப்போது அதைப் பற்றிய தகவல்கள் ட்ரையம்பின் இந்திய இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பைக் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
ரிலீஸ் தொடர்பாக குறிப்பிட்ட தேதி வெளியிடப்படவில்லை என்றாலும், டேடோனா 660 பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் நடுப்பகுதியில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
ட்ரையம்ப் டேடோனா 660 பைக் ட்ரையம்ப் நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ் பைக். இது ட்ரைடென்ட் 660 பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது டேடோனா என்ற பெயரைக் கொண்டிருந்தாலும் இந்தியாவில் ஒரு காலத்தில் விற்பனையில் இருந்த ட்ரையம்ப் டேடோனா 675 போல இல்லை. ஆனாலும் டேடோனா 660 ஒரு முழுமையான பைக்கை விரும்பும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அம்சங்களைக் கொண்டுள்ளது.
டேடோனா 660 பைக்கின் ஸ்போர்ட்டி வடிவமைப்பு டேடோனா 675 பைக்கை நினைவூட்டும் வகையில் உள்ளது. முன்பக்கத்தில் இரட்டை 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டேடோனா 660 பைக் டிரிபிள் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
எல்இடி விளக்குகள், புளூடூத் இணைப்பு ஆகிய அம்சங்களுடன் மூன்று விதமான ரைடிங் மோட் கொண்ட தாக இந்த பைக் உருவாகியுள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை சேனல் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகியவை முக்கியமானவை.
ட்ரையம்ப் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9 லட்சம் முதல் ரூ.9.25 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த பைக் கவாஸ்கி நிஞ்ஜா 650, ஹோண்டா CBR650R மற்றும் யமஹா R7 ஆகிய ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.