ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் திருப்பணிகளுக்கு பட்ஜெட்டில்ரூ.125 கோடி ஒதுக்கீடு. இந்த பதிவில் தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில்களை காணலாம்.
1000 Years Old Temple List : தமிழ்நாடு சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர்களாலும், பல்லவ மன்னர்களாலும், வேளிர்களாலும் ஆளப்பட்டது. ஒவ்வொரு ஆட்சியிலும் கட்டிடக் கலை அடுத்த பரிணாமத்தை அடைந்தது. அதன் சான்றுகளாக நிற்பவைதான் கோயில்கள். அவை பல நூற்றாண்டுகளாக கலையை தாங்கி நின்று கொண்டிருப்பவை. அவற்றை முறையாக சீரமைத்து பராமரித்தால் இன்னும் பல நூற்றாண்டுகள் அதன் தரம் மாறாமல் இருக்கும். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் திருப்பணிகளுக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இந்தப் பதிவில் 1000 ஆண்டுகளுக்கும் பழமையான கோயில்கள் சிலவற்றை காணலாம்.
ஆண்டாள் கோயில்:
2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் 11 அடுக்குகள், 193 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. ஆண்டாள் கோயிலின் கோபுரம்தான் தமிழ்நாடு அரசின் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தென்காசி பக்கத்தில் இருக்கும் 3 புகழ்பெற்ற ஐயப்பன் கோயில்கள்; பக்தர்களே மிஸ் பண்ணாதீங்க!
வைகுந்தப் பெருமாள் கோயில்:
காஞ்சிபுரத்தில் உள்ள வைகுந்தப் பெருமாள் கோவில் பல்லவ மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்டது. 7ஆம் நூற்றாண்டில் நந்திவர்மன் கட்டிய இக்கோயிலில் இருக்கும் 'ஆயிரங்கால் மண்டபம்' தனிச்சிறப்புடையது. இதன் தூண்கள் ஒவ்வொன்றிலும் கலை வேலைபாடுகள் காணப்படுகின்றன. எல்லா தூணிலும் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கும். இதே காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இது 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டப்பட்டது. இதை தொடங்கியது அவராக இருந்தாலும் முடித்தது அவர் மகன் 3-ஆம் மகேந்திரவர்மன் என வரலாறு சொல்கிறது.
இதையும் படிங்க: இந்தியாவின் டாப் 7 பிரம்மாண்டமான கோயில்கள்; தமிழ்நாடு கோயில் இருக்கா?
தியாகராஜஸ்வாமி திருக்கோயில்:
சோழ மன்னர்கள் கட்டியதில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் அனைவரும் அறிந்ததே. அதைப் போலவே பழமையான கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் தியாகராஜஸ்வாமி திருக்கோயில். இது 1-ஆம் நூற்றாண்டு கோயிலாகும்.
நெல்லையப்பர் கோயில்:
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில் தமிழ்நாட்டின் பழமையான சிவன் கோயில். கி.பி. 700 ஆம் ஆண்டில் பாண்டிய மன்னர்கள் கட்டியெழுப்பிய இக்கோயிலில் ஒரு தனித்துவம் உண்டு. இங்கு சிவனுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே இரண்டு கோயில்கள் உள்ளன. குறிப்பாக இவை இரண்டும் சங்கிலி மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபமும், கோயில் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டி எழுப்பப்பட்டவை.
இதுதவிர திண்டுக்கலில் உள்ள மங்களப் புள்ளி குருநாத நாயக்கர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான கோயிலான ஸ்ரீ மங்கலவல்லிதாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடற்கரைக் கோவிலான மாமல்லபுரம் கிட்டத்தட்ட 1300 வருடம் பழமையானது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
மற்ற பழமையான கோயில்கள்:
1). அரியலூர் - கங்கைகொண்ட சோழபுரம் (1000 ஆண்டுகள்)
2). திருச்செந்தூர்-முருகன் கோவில் (2000 ஆண்டுகள்)
3). சிதம்பரம் - தில்லை நடராசர் கோவில் (1000 ஆண்டுகள்)
4). ராமேசுவரம் - ராமநாதசுவாமி கோவில் (1000 ஆண்டுகள்)
5). ஸ்ரீரங்கம்- ரங்கநாத சுவாமி கோவில் (1700 ஆண்டுகள்)
6). திருவண்ணாமலை- அருணாச்சலேஸ்வரர் கோவில் (1200)
இக்கோயில்கள் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் பல கோயில்கள் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டால் அவை பாதுகாக்கப்படும் என்பதில் ஐயமில்லை.