Light this special lamp on Panguni Uthiram 2025. It is believed that your wishes will come true on this auspicious day. பங்குனி உத்திரம் 2025 நாளில் இந்த விளக்கை ஏற்றுங்கள். நீங்கள் விரும்பிய வரம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. பக்தர்களுக்கு இது ஒரு சிறப்பு தினமாகும்!
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக இருக்கும் முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று பங்குனி உத்திரம் ஆகும். பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை பங்குனி உத்திரமாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். வழக்கமாக மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் முருக பக்தர்கள் விரதம் இருந்து, காவடி, பால்குடம் எடுத்துச் சென்று முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம்.
பங்குனி உத்திரம் சிறப்புகள் :
சிவன்-பார்வதி, முருகன் - தெய்வாணை, ஸ்ரீராமர்-சீதா தேவி போன்ற தெய்வ திருமணங்கள் நடைபெற்ற நாளாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது. ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளில் சென்று ஐக்கியமானதும் பங்குனி உத்திர திருநாளில் தான் என புராணங்கள் சொல்கின்றன. அதனால் பங்குனி உத்திரம் என்பது சைவர்கள் மட்டுமின்றி, வைணவர்களுக்கும் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
பங்குனி உத்திரம் 2025 :
பங்குனி உத்திரம் பெருவிழா 2025ம் ஆண்டில் ஏப்ரல் 11ம் தேதி மங்கலகரமான வெள்ளிக்கிழமையில் அமைகிறது. ஏப்ரல் 10ம் தேதி பகல் 02.07 மணிக்கு துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி மாலை 04.11 மணி வரை உத்திரம் நட்சத்திரம் உள்ளது. ஆனால் ஏப்ரல் 12ம் தேதி காலை 04.13 மணிக்கு தான் பெளர்ணமி திதி துவங்குகிறது. பங்குனி உத்திரம் என்பது நட்சத்திர அடிப்படையில் கொண்டாடப்படும் விரத நாள் என்பதால் ஏப்ரல் 11ம் தேதியையே பங்குனி உத்திரம் நாளாக எடுத்துக் கொண்டு, அந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து, முருகப் பெருமானை வழிபடலாம்.
மங்கள வரம் தரும் விரதம் :
திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் மட்டுமின்றி திருமணமானவர்களும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக இந்த நாளில் விரதம் இருந்து வழிபடலாம். பங்குனி உத்திரம் என்பது திருமணம் வரம் மட்டுமின்றி வேண்டிய வரங்கள் அனைத்தையும் தரும் மிக அற்புதமான விரதம் ஆகும். அதனால் இந்த நாளில் யார் வேண்டுமானாலும் முருகப் பெருமானை வேண்டிய விரதம் இருக்கலாம். விரதம் இருக்க முடியாதவர்கள், மனதார முருகனை துதித்து, பூஜை செய்து, வழிபடலாம். இந்த நாளில் ஒரு குறிப்பிட்ட முறையில் விளக்கேற்றி வழிபட்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
விளக்கேற்றும் முறை :
பங்குனி உத்திர நாளன்று பூஜை அறையில் வாழை இலை பரப்பி, அதன் ஒரு புறம் பச்சரியும், மற்றொரு புறம் துவரம் பருப்பும் பரப்பி வைக்க வேண்டும். அதன் மீது ஆறு அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும். நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி இந்த விளக்கினை ஏற்ற வேண்டும். முருகப் பெருமானின் படத்தை பார்த்தவாறு இருக்கும் படி இந்த 6 விளக்குகளையும் ஏற்றி, முருகப் பெருமானை மனதார நினைத்து, "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை 11 முறை அல்லது 21 முறை மனதார உச்சரிக்க வேண்டும். அதற்கு பிறகு உங்களின் வேண்டுதல் அல்லது கோரிக்கையை முருகப் பெருமானிடம் சொல்லி முறையிட வேண்டும். இப்படி வேண்டிக் கொண்டால் உங்களின் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது அப்படியே நிறைவேறும்.