இந்து மத திருமணத்தில் மணமகன், மணமகளுக்கு தாலி கட்டும்போது மூன்று முடிச்சு போடுகிறார். அது ஏன் தெரியுமா? அந்த மூன்று முடிச்சுகளுக்கான காரணங்கள் இங்கே...
திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு வாழ்க்கையின் பந்தத்தை இணைத்து வைப்பது ஆகும். பொதுவாகவே, இந்து மத திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள் இருக்கும். மேலும் இந்து திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு என்று கூறப்படுகிறது. சொல்லப்போனால் சில சடங்குகள் ஏன், எதற்காக செய்கிறோம் என்பது கூட சிலருக்கு
தெரியாது. ஆனால் அவர்கள் காலம் காலமாக அவற்றை செய்து வருகின்றனர்.
இந்து திருமணத்தில் எத்தனை சடங்கு சம்பிரதாயங்கள் இடம் பெற்றாலும், மணமகன் மணமகளுக்கு தாலி கட்டுவது தான் முக்கிய நிகழ்வாகும். உறவினர்கள் முன்னிலையில், மணமகன், மணமகளுக்கு தாலி கட்டும்போது மூன்று முடிச்சு போடுகிறான். அது ஏன் போடப்படுகிறது என்று இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: இந்து திருமணங்களில் மணமகளுக்கு கருப்பு நிற வளையல் அணிவிக்கப்படுவது ஏன்?
மூன்று முடிச்சு போடுவது ஏன்?
இந்து மதத்தில் மணமகன் மணமகளுக்கு தாலி கட்டும்போது மூன்று முடிச்சு போடுகிறான். இந்து சம்பிரதாயம் படி அந்த மூன்று முடிச்சு என்பது, விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளை கூறுகிறது. இந்த மூன்று நிலையிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மை மிக்கவளாக திகழ வேண்டும். தெய்வ பக்தி, குடும்ப பெரியவர்களிடம் மதிப்பு, கணவரிடம் அன்பு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.
மூன்று முடிச்சு அர்த்தம்:
முதல் முடிச்சு
தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை, ஆரோக்கியமாக இருக்கவும் சிறந்த அறிவாளியாக திகழவும், படைத்த பிரம்மாவையும், ஞானத்தை கொடுக்கும் சரஸ்வதி தேவியையும் வணங்கி முதல் முடிச்சு போடப் படுகிறது.
இரண்டாவது முடிச்சு
குழந்தை ஆரோக்கியமாக, அறிவாளியாக பிறந்தாலும், அந்த குழந்தை பிறருக்கு உதவி செய்யவும், நல்ல குணங்களோடு இருக்கவும், செல்வச் செழிப்புடன் வாழவும், காக்கும் கடவுளான திருமாலையும், செல்வங்களை அள்ளித்தரும் லட்சுமி தேவியையும் வணங்கி இரண்டாவது முடிச்சு போடப் படுகிறது.
இதையும் படிங்க: உடலுறவை மறுப்பது இந்து திருமணச் சட்டத்தின் கீழ் குற்றமாகலாம்! ஐபிசி-யின் கீழ் குற்றமாகாது! - கர்நாடக ஹைகோர்ட்
மூன்றாவது முடிச்சு
மேலும் அந்த குழந்தை ஆரோக்கியமாக, அறிவாளியாக, நல்ல குணங்களோடு செல்வச் சீமானாக வாழ்ந்தாலும், நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை தட்டிக்கேட்கவும், அநீதிகளை எதிர்க்கவும், அக்கிரமங்கள் தலை தூக்கும் முன்பே, அவற்றை அழித்து தர்மத்தை நிலை நாட்டவும், இன்னல்களிலிருந்து தன் குடும்பத்தை பாதுகாப்பதற்காக துணிச்சல் வேண்டும் என்பதற்காக சிவபெருமானையும், வீரத்திற்கு அடையாளமாக திகழும் பார்வதி தேவியையும் வணங்கி மூன்றாவது முடிச்சு போடப்படுகிறது.