சிலரது குடும்ப வாழ்க்கையே போர்களமாக இருக்கும். அதற்கு காரணம் மண வாழ்க்கையில் மனைவியோ, கணவனோ சரியாக அமையாக விட்டால் தினம் தினம் போராட்டமாகத்தான் இருக்கும். நல்ல குடும்ப வாழ்க்கை அமைய பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் சிறப்பான இடத்தில் வலிமையாக இருக்க வேண்டும். குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். இன்னும் சில மாதங்களில் வக்ரமடைய இருக்கிறார். பிறந்த ஜாதகத்தில் குரு எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
குரு பகவான்:
நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலைவன் குரு பகவான். தேவர்களின் குருவான வியாழ பகவான் தனம், புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். குருபகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலம் பெறும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஓராண்டுகளுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைவார் குருபகவான். தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்கிறார் குரு. பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும். கோச்சார பலன்கள் பார்க்கும் அதே நேரத்தில் ஒருவரின் ஜாதகத்தில் எந்த வீட்டில் குரு இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
ஜென்ம குரு:
ஒருவரின் ஜாதகத்தில் குரு லக்னத்தில் அதாவது 1ஆம் இடத்தில் இருந்தால் சிறந்த பேச்சாளராக இருப்பார். நீண்ட ஆயுள் இருக்கும் நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். பெரிய மனிதர்கள், விவிஐபிக்களின் தொடர்பு கிடைக்கும். குரு நல்ல நிலையில் இருந்தால் இந்த பலன் கிடைக்கும்.
குடும்ப குரு:
ஜாதகத்தில் இரண்டாம் வீடான வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்து சுப கிரகத்தின் கூட்டணியோடு இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமையாக சந்தோசமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். அந்த வீடே ஆனந்தமயமாக இருக்கும். பணவரவு அபரிமிதமாக இருக்கும். அதே நேரத்தில் இரண்டாவது வீட்டில் குரு தனித்து இருந்தாலோ குடும்பத்தில் குருச்சேத்திரப்போர்தான். பணத்திற்கு திண்டாட வேண்டுமாம்.
Tortoise Vastu: கூர்ம அவதாரம்.. வீட்டில் ஆமை சிலை வைத்தால் அதிர்ஷ்டத்தை தருமா?.. வாஸ்து டிப்ஸ்
மூன்றாம் வீட்டில் குரு:
மூன்றாம் வீட்டில் குரு பயணம் செய்தால் செய்யும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிலும் தனித்துவமாக இருப்பீர்கள். அதே நேரம் மூன்றாம் வீட்டில் குரு தனித்து இருந்தாலோ பாவிகள் சேர்க்கை பெற்றால் சகோதர தோஷம் ஏற்படும்.
சுக ஸ்தான குரு :
நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் குரு பயணம் செய்தால் குடும்பத்தில் வசதி வாய்ப்புகளுக்கு பஞ்சமிருக்காது. செல்வம், செல்வாக்கு அசையா சொத்து யோகம் கிடைக்கும். உயர்கல்வி யோகம் ஏற்படும். நான்காம் வீட்டில் குரு தனித்து பலம் இழந்து இருந்தால் தடை தாமதங்கள் ஏற்படும்.
ஐந்தாம் வீட்டில் குரு:
புத்திர காரகன் குரு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து இருந்தால் நல்ல அறிவாற்றல் ஏற்படும். பரந்த மனப்பான்மை, பொதுக்காரிய ஈடுபாடு ஏற்படும். சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும். சுப கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்தால் சிறப்பான புத்திரபாக்கியம் அமையும். அதே நேரத்தில் 5ஆம் வீட்டில் குரு தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும்.
ஆறில் குரு எதிரிகள் வெற்றி:
ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு இருந்தால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நோய்கள் நீங்கும் நீண்ட ஆரோக்கியம் அமையும், சிறப்பான குடும்ப வாழ்க்கை ஏற்படும். எதிரிகளை வெல்வீர்கள். அதே நேரம் ஆறாம் வீட்டில் குரு பலம் இழந்து இருந்தால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும்.
கடகத்தில் உருவாகும் திரிகிரக யோகம்; இந்த 3 ராசிகளில் ஒருவரா நீங்கள்? அப்போ இனிமேல் ராஜ யோகம் தான்!
களத்திர தோஷம்:
ஜென்ம லக்னத்தில் இருந்து குரு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சுபர் சேர்க்கை சுபர் பார்வையுடன் இருந்தால் மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல அழகான வசதியான பெண் மனைவியாக அமைவாள். பாவிகள் சேர்க்கை பெற்றால் மண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து ஏற்படும்.
ஆயுள் ஆரோக்கியம்:
எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்தால் குடும்ப வாழ்க்கை தெளிந்த நீரோடை போல அமைதியாக இருக்கும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஏற்படும். பணம் பல வழிகளில் இருந்தும் வரும். அதே நேரம் குரு தனித்தோ பாவிகள் சேர்க்கை பெற்றோ பலம் இழந்து இருந்தாலே நோய்கள் வாட்டி வதைக்கும்.
ஒன்பதில் குரு:
ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்று சொல்வார்கள். குரு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் இருப்பது நன்மை தரும் அமைப்பு. தாராளமான தன வரவு கிடைக்கும். தந்தைக்கு நீண்ட ஆயுள், பொதுப்பணியில் ஆர்வமாக இருப்பீர்கள். பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.
பத்தில் குரு உயர்பதவி யோகம்:
பிறந்த ஜாதகத்தில் 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்து இருந்தால் நேர்மையானவராக இருப்பீர்கள். உயர்பதவி யோகம் தேடி வரும். பலம் இழந்து தனித்து இருந்தால் தடைகள் அதிகரிக்கும்.
லாப குரு:
லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு இருந்தால் சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும். குழந்தைகள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் மூலம் வசதி வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் புகழும் கவுரவம் கிடைக்கும். தாராளமான தன வரவு கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
12ல் குரு நிம்மதி
விரைய ஸ்தானமான 12ஆம் வீடு அயன ஸ்தயன ஸ்தானம். பிறந்த ஜாதகத்தில் குரு 12ஆம் வீட்டில் இருந்தால் வீண் செலவுகள் ஏற்படும். குரு உங்கள் ராசிக்கு 6 அல்லது 8ஆம் அதிபதியாக இருந்தால் நல்ல பலன்களை தருவார். 12ஆம் வீட்டில் குரு அமர்ந்து சுபரான புதன், சுக்கிரன் பார்வை சேர்க்கை பெற்றிருந்தால் நல்ல தூக்கமும் நிம்மதியான இல்லற வாழ்க்கையும் அமையுமாம்.