பார்த்தீனியம்
பல தென்னந்தோப்புகளில் விவசாயிகள் பார்த்தீனியத்தை ஒரு எதிரியாக பாவித்து அதனை கங்கணம் கட்டிக்கொண்டு அழித்திட அதிக காசு செலவு செய்து களைக்கொல்லி மருந்து தெளித்து கடும் நஷ்டத்துக்கு ஏன் மண்ணின் உயிர்க்குலங்கள் நாசமாகி மலடாகி தென்னந்தோப்பே வறண்ட காடு போலக்காட்சியளித்திடச் செய்கிறார்கள்.
தாவரங்களில் தானாக வளரத் திறன் கொண்ட தாவரமான பார்த்தீனியம் நம்மால் தான் நிலத்துக்கு கொண்டு வரப்பட்டது என்பது விசித்திரமான உண்மையாகும்.
அரை அடி முதல் 3 அடி வரை மண் கண்டத்துள்ளே அங்கிங்கெணாதபடி களை விதைகள் பல்கி பரவிக் கிடப்பதே அரைகுறையான மட்காத குப்பை உரத்தை இடுவதால் தான். ஆம், கால்நடை உண்ட களைச்செடி விதைகள் சாணத்துடன் வெளியே வந்து பத்திரமாக மேற்பரப்பில் பதப்படுத்தப்பட்டு பிறகு எடுத்து வீசும்போது நீரைக்கண்டதும் குப்பென்று வளர்ந்து விடுகிறது.
எனவே களைகள் வரும் இந்த வழியை மாற்றி யோசித்து மண்புழு உரமாக இட்டால் நிச்சயம் களைக்கு வேலையில்லை. அப்படியே களைகள் வந்தாலும் அதனை முறையாக சேகரம் செய்து மட்கம் செய்து மகத்தான உரமாக மீளப்பயன்படுத்தலாம். இதற்கு எந்தக் களையானாலும் விதிவிலக்கல்ல.
நல்ல இலைப்பரப்பு அதிகம் கொண்ட பசுந்தழைகள் அடங்கிய பலவித மரங்களின் இலைகளையும் சேகரம் செய்து பார்த்தீனியம் மற்றும் இதர புல்வகைச் களைகளையும் களை நீக்கும் கருவிகள் கொண்டு அறுத்து வதங்க வைத்து அப்புறப்படுத்தி பதப்படுத்தி மண்புழு உரக்குழியில் இட்டு மண்புழு உரமாக மாற்றலாம்.
அல்லது இதற்கு கம்போஸ்ட் குழி தயாரித்திட எல்லா இடத்திலும் வாய்ப்புள்ளது. நீளம் 15 அடி அகலம் 8 அடி மற்றும் ஆழம் 3 அடி உள்ள குழிகள் தோண்டினால் ஒரு ஏக்கருக்குத் தேவையான உரம் பெற வாய்ப்புள்ளது.
திடல்கள், சேமிப்பு கூடங்கள் மற்றும் நடைபாதைகள், கல்வி சாலைகள், பூங்காக்கள் பேருந்து நிறுத்தங்கள் இங்கு வளர்ந்துள்ள பார்த்தீனியத்தை 10 லிட்டர் தண்ணீரில் 1.5 கிலோ சாப்பாட்டு உப்பு கரைத்து தெளித்து சுத்தமாக அழிக்கலாம்.
உயிரியல் முறைப்படி “சைக்கோகிரம்மர்’ எனும் புள்ளி உடைய ஈச்சங்காய் போன்ற மஞ்சள் வண்ண வண்டுகளை சேகரம் செய்து பார்த்தீனியம் உள்ள இடத்தில் மெதுவாக அவற்றை சுத்தமாக அழிக்கலாம். களை வரும் முன்பே முந்தி ஊடுபயிர், மூடு பயிர், வரப்பு பயிர் மற்றும் நிலப்போர்வை அமைத்தல் மூலம் பார்த்தீனியம் தரும் பாதிப்பை வெகுவாகக் குறைக்கலாம்