கோதுமை சாகுபடி
பொதுவாக கோதுமை வட இந்தியாவில் மட்டுமே விளையும் என்ற நிலை மாறி தற்போது தமிழ்நாட்டிலும் ஒரு சில மாவட்டங்களில் குளிர்காலத்தில் கோதுமை விளைவித்து நல்ல மகசூல் கண்டிருக்கிறார்கள்.
மலைப்பிரதேசங்களில் குளிர்காலத்தில் மட்டுமே கோதுமை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலை மாறி தற்போது சமவெளியிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, கோவை, தேனி மாவட்டங்களில் நவம்பர் 15 வரை கோதுமை விதைப்பிற்கு உகந்த பருவமாக உள்ளது.
நவம்பர் 15ம் தேதிக்குள் விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கப்பெற்றாலும் பூக்கும் பருவம் உறைபனி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தென்னந்தோப்பு மற்றும் மாந்தோப்புகளில் அதிக வெளிச்சம் உள்ள வயல்களில் ஊடுபயிராகவும் கோதுமையை பயிர் செய்யலாம்.
ரகங்கள்:
தற்போது கோடபிள்யூ(டபிள்யூ)-1, (எச்டபிள்யூ-3094) மற்றும் எச்டீ 2833 என்ற இரு ரொட்டிக் கோதுமை வகைகள் சமவெளிகளில் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
எச்டபிள்யூ 3094:
வயது 95-102 நாட்கள்,
மகசூல்: 20-50குவின்டால்/எக்டருக்கு,
பருவம்: நவம்பர்-டிசம்பர்.
எச்டீ 2833: வயது: 95-120 நாட்கள்.
மகசூல்: 25-50 குவின்டால்.
பருவம்:
நவம்பர்-டிசம்பர்.
நிலம் தயாரிப்பு:
நல்ல வடிகால் வசதியுள்ள நன்செய் உகந்தது. நன்கு பொலபொலவென்று 2 முறை உழுது கட்டிகள் உடைத்த வயலில் முக்கால் அடி (24 செ.மீ.) இடைவெளியில் 3 செ.மீ. ஆழ கோடுகள் இட்டு கோட்டின் அடிப்பகுதிகளில் இடைவெளியின்றி விதைகளைத் தொடர்ந்து இடவேண்டும்.
அல்லது பலுக்கு போன்ற கருவியில் 24 செ.மீ. இடைவெளி வருமாறு கோடுகள் இட்டு பின்னர் களைக்கொத்தி உதவியுடன் விதைகளை முழுமையாக மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஏக்கருக்கு விதைப்பு செய்ய 40 கிலோ விதை போதுமானது.
உரமிடுதல்:
ஒரு எக்டருக்கு 100 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து தரவல்ல உரங்களை இடவேண்டும். இதில் பாதி அளவு தழைச்சத்து, முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து உரங்களை அடி உரமாக கடைசி உழவில் இடவேண்டும். பாதி தழைச்சத்தினை விதைத்த 30 நாட்கள் கழித்து முதல் களை எடுத்த பின்னர் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
நீர்ப்பாசனம்:
5-6 தண்ணீர் போதுமானது. மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப இது மாறுபடும். விதைத்தவுடன் தண்ணீர் அவசியம். விதைத்த 15 நாட்கள் கழித்து ஒரு பாசனம் தேவை.
விதைப்பு:
0-3 நாட்கள். வளர்ச்சி பருவம்-15வது நாள். தூர்வரும் பருவம்-30-35வது நாள்.
கதிர்விடும் பருவம்:
50-55வது நாள் மற்றும்
மணி முற்றும் பருவம்:
70-75வது நாள். இந்த 5 நிலைகளிலும் பாசனம் கட்டாயம் தேவை.
களை நிர்வாகம்:
பயிரின் ஆரம்பகாலத்தில் களைகள் இல்லாமல் இருப்பது அவசியம். விதைத்த 20-25வது நாளில் 1 கொத்து களையும், 45-50 மற்றும் 70-75வது நாளில் கைக்களையும் எடுக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு:
அவ்வளவாக பூச்சிகள் தாக்குவதில்லை. பூக்கும் தருணம் அசுவினி தாக்குதல் தென்பட்டால் ஊடுருவிப்பாயும் நஞ்சுகளைத் தெளிக்கலாம்.
அறுவடை:
நன்கு காய்ந்த தாளை வேரோடு பிடுங்கி அல்லது அறுவடை செய்து நன்கு காயவிட்டு கதிர் அடிக்கும் இயந்திரம் அல்லது கையால் அடித்து மணியைப் பிரிக்கலாம்.
மகசூல்:
வளமான சூழ்நிலையில் விளைந்த கோதுமை எக்டருக்கு 4000-5000 கிலோ மகசூல் தரவல்லது. 1 எக்டர் சாகுபடியளவு ரூ.6000/- வரை ஆகும். நிகர வருமானமாக 14,000/- வரை 90 நாளில் கிடைக்கும். எக்டருக்கு 5 டன் கோதுமையும் கிடைக்கும்.