ஆடுகளை தாக்கும் சில நோய்களும், அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிகளும்…

 |  First Published Sep 25, 2017, 12:48 PM IST
Some diseases affecting the goats and ways to control them ...



ஆடுகளைத் தாக்கும் நோய்கள்

1.. அடைப்பான்

Tap to resize

Latest Videos

நுண்ணுயிரி நோய்களில் முக்கியமானது அடைப்பான். இது 'பேசில்லஸ் ஆந்திராசிஸ்’ என்ற நுண்ணுயிரியால் வருது. இந்த நோய் தாக்கின ஆடுகளுக்கு காய்ச்சல் வந்து... திடீர்னு இறந்துடும். அப்படி இறந்த ஆடுகளோட மூக்கு, காது, ஆசனவாய் பகுதிகள்ல இருந்து உறையாத கருஞ்சிவப்பு ரத்தம் வெளியேறும். இது, முக்கியமான அறிகுறி.

அடைப்பான் தாக்கி இறந்த ஆடுகளை உணவுக்காகவோ, பிரேத பரிசோதனைக்காகவோ அறுக்கக்கூடாது. அப்படி அறுத்தா... நோய் கிருமிகள் காத்துல கலந்து பரவ ஆரம்பிச்சு, மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும்கூட ஆபத்தா மாறிடும். அதனால, இந்த நோய் விஷயத்துல கவனமா இருக்கணும்.

இறந்த ஆடுகளை குழிவெட்டி சுண்ணாம்புத்தூள் போட்டு புதைச்சுடணும். இறந்து கிடந்த இடத்தை கிருமிநாசினி மூலமா சுத்தப்படுத்தி, அந்த இடத்தை தீயிட்டு கருக்கணும். அந்தப் பகுதியில இருக்கற மத்த ஆடுகளுக்கும் உடனடியா தடுப்பூசி போடணும். இந்த நோயை ஆன்ட்டிபயாடிக் மருந்துகளால கட்டுப்படுத்திட முடியும்.

2.. தொண்டை அடைப்பான்

ஆடுகளோட தொண்டைப் பகுதியில 'பாஸ்ச்சுரல்லா மல்டோசியா’ங்கிற நுண்ணுயிரி எப்பவும் இருக்கும். உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, இது பெருகி நோயை உண்டு பண்ணும்.

மழைக் காலத்தில் இளம் வெள்ளாடுகளுக்கு அதிகமா இந்த நோய் வரும். காய்ச்சல், மூச்சுத்திணறல், மார்பு, கழுத்து பகுதிகள்ல வீக்கம் மாதிரியான அறிகுறிகள் தென்படும். மூக்கு, வாயிலிருந்து சளி ஒழுகும். நோய் தாக்கின அஞ்சிலருந்து ஏழு நாட்களுக்குள்ள ஆடுகள் இறந்துடும்.

நோய் கண்ட ஆட்டை மந்தையிலிருந்து பிரிச்சுடணும். உடனடியா, கால்நடை மருத்துவர்கிட்ட கொண்டுபோய் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யணும். மத்த ஆடுகளுக்கும் உடனே தடுப்பூசி போடணும். ஒவ்வொரு வருஷமும் மழைக் காலம் ஆரம்பிக்கறதுக்கு முன்ன தடுப்பூசி போட்டு, இந்த நோய்ல இருந்து ஆடுங்களைக் காப்பாத்தலாம்.

3.. துள்ளுமாரி

'கிளாஸ்டிரீடியம் வெல்சை’ என்ற நுண்ணுயிரியால் ஏற்படுற நோய் துள்ளுமாரி. இது எல்லா வயது ஆடுகளையும் தாக்கும். அதிகமா இளம் ஆடுகளுக்கு வரும். மழைக் காலத்துல புதுசா முளைச்ச இளம்புற்களை மேயும்போது இந்த நோய் வருது.

இந்த நோய்க்கிருமிகள் குடலில் எப்பவுமே தங்கி இருக்கும். திடீர்னு, அதிகமான தீவனம் எடுக்கும்போது, கிருமிகள் பெருகி, பாதிப்பு வருது. கிருமிகளோட விஷத்தன்மை நரம்பு மண்டலத்தைத் தாக்குறதால, ஆடுகள் துள்ளி விழுந்து இறந்துடும்.

சில சமயங்கள்ல, சளி மாதிரி வயிற்றுப் போக்கு இருக்குற அறிகுறி தெரிஞ்சா மேய்ச்சல் நேரத்தைக் குறைச்சு, பாதி அளவுக்கு தீவனம் எடுக்குற மாதிரி பண்ணணும். உடனே மருத்துவர்கிட்ட காமிக்கணும்.

ஆடுகளுக்கு 6 மாச வயசுல இந்த நோய்க்கான தடுப்பு ஊசியைப் போடணும். ஒவ்வொரு வருஷமும் மழைக் காலம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி தடுப்பூசி போட்டுடணும். புதுசா முளைச்ச புல்லை எப்பவும் மேய விடக்கூடாது. தீவனத்தை திடீர்னு அதிகப்படுத்தக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாத்தான் கூட்டணும்.

4.. கருச்சிதைவு

கருச்சிதைவு நோய், 'புரூசெல்லா மெலிடென்சிஸ்’ என்ற நுண்ணுயிரியால் பரவும். இனச்சேர்க்கை மூலமா பெட்டை ஆடுகளுக்குப் பரவும். இந்த நோய் தாக்குனா ஆடுகளுக்கு மலட்டுத்தன்மை வந்துடும். கருச்சிதைவு ஏற்படும். இந்த நோயோட அறிகுறிகள் தெளிவாத் தெரியாது. கருப்பையிலிருந்து ரத்தம் கலந்த சீழ் வெளியேறும். கிடாய்களுக்குத் தாக்கினா, விரைவீக்கம் இருக்கும்.

பாதிக்கப்பட்ட ஆடுகளோட ரத்தம், பால், நச்சுக்கொடி மூலமா மத்த ஆடுகளுக்கும் நோய் பரவும். சில சமயங்கள்ல மனிதர்களுக்கும் இந்த நோய் பரவி, 'மால்ட்டா காய்ச்சல்’ங்கிற நோயை ஏற்படுத்தும்.

பாதிக்கப்பட்ட ஆடுகளை மந்தையில இருந்து பிரிச்சுடணும். ரத்தப் பரிசோதனை செஞ்சு நோய் உறுதியாச்சுனா... அந்த ஆடுகளைக் கழிச்சுடணும். பாதிக்கப்பட்ட ஆடுகளில் இருந்து வெளியேறிய ரத்தம், நச்சுக்கொடி எல்லாத்தையும் அப்புறப்படுத்தி, கொட்டிலை கிருமிநாசினியால சுத்தம் செய்யணும்.

click me!