செயற்கை வேதி உரங்கள் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் நஞ்சில்லாத நெல் சாகுபடி முறை இப்போது பரவலாகி வருகிறது.
நாற்றங்கால் தயாரிப்பு
undefined
தேவையான நாற்றுக்களைப் பெற போதிய இடத்தைத் தேர்வு செய்து, எளிதில் மட்கி உரமாகும் வாகை, வேம்பு, எருக்கு, கிளிரிசிடியா, நெய்வேலிக்காட்டாமணக்கு, புங்கன், ஊமத்தை, எருக்கு போன்ற இலை தழைகளை மடக்கி உழவு செய்ய வேண்டும்.
இந்த தழைகள் விரைவாக மட்க அசஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர்உரங்களை 200 கிராம் என்ற அளவில் எடுத்து மக்கிய குப்பையுடன் கலந்து நாற்றங்காலில் கடைசி உழவின்போது இட வேண்டும். இதனால் தழைகள் விரைவில் மட்கிவிடும்.
விதைநெல் நேர்த்தி
தேவையான நீரில் உப்பைப் போட்டு அடர்த்தியான கரைசல் தயார் செய்து கொள்ள வேண்டும். இதற்கு ஒரு நல்ல முட்டையை எடுத்து உப்புக் கரைசலில் போட்டுப் பார்த்தால் அது மிதக்கும். இந்த அளவு கரைசலில் விதை நெல்லைப் போட வேண்டும்.
பதர்களும் சண்டு நெல்லும் மிதந்துவிடும். அவை சரியாக முளைக்காது. அவற்றை நீக்கிவிட வேண்டும். மூழ்கிய நெல் நல்ல முளைப்புத் திறன் கொண்டதாக இருக்கும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அசோஸ்பைரில்லம் முதலிய உயிர்உரங்களைக் போதிய நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
அதில் 24 மணி நேரம் விதை நெல்லை ஊற வைக்க வேண்டும். 2 விழுக்காடு (2%) ஆவூட்டமும் 200 கிராம் சூடோமோனஸ் புளோரோசன்ஸ் சேர்த்த கரைசலில் 15 நிமிடங்கள் நெல்லை ஊறவைத்து எடுக்க வேண்டும்.
பின்னர் ஈரச் சாக்கில் நெல்லைப் போட்டுக் கட்டிய மூட்டையைச் சுற்றி ஈரச்சாக்கைக் கொண்டு மூடிவிடவும். அடுத்த 24 மணி நேரத்தில் நெல் முளைவிடும். பின்னர் நாற்றங்காலில் நெல்லை விதைக்க வேண்டும்.
நாற்றங்காலில் தெற்கு வடக்காகவோ, அல்லது கிழக்கு மேற்காகவோ நன்கு நீர் வடிக்க ஏதுவாக ஒரு அடி அகலம் வைத்து கயிறு பயன்படுத்தி கண்டி அமைக்கவும். நாற்றங்காலில் சீராக நெல் பரவ இது உதவியாக இருக்கும். தண்ணீர் வடிக்கவும் வடிகாலாக இந்தக் கண்டி பயன்படும்.
நாற்றங்கால் பயிர் பராமரிப்பு
நெல் பயிர் சீராக வளர விதைத்த 10 முதல் 15 நாட்களில் கீழ்க்கண்ட கரைசலை தயாரித்து நாற்றங்காலுக்கு நீர் பாயச்சும்போது சீராகக் கலந்துவிட வேண்டும். ஒன்று அல்லது இரண்டு முறை 4 முதல் 7 நாள் இடைவெளியில் இக்கரைசலைப் பயன்படுத்தலாம்.
பின்னர் 5 கிலோ மண்புழுக் கழிவு உரம் அல்லது சாணியுடன் 20 லிட்டர் நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். இந்தக் கரைசலில் ஆவூட்டம் 200 மிலி முதல் 400 மிலி அல்லது தேங்காய்பால் மோர் கரைசல் அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் அத்துடன் 300 மிலி மீன் அமினோ அமிலமும் சூடோமோனஸ் புளுரோசன்ஸ் 50 கிராமும் சேர்த்து 3 நாட்கள் ஊறல் போட்ட பின்னர் தண்ணீர் பாய்ச்சும்போது கலந்துவிட வேண்டும்.
நடவு வயல்
அடி உரமாக ஏக்கர் ஒன்றுக்கு ஒரு டன் முதல் ஒன்றரை டன் கோழி உரம் மற்றும் அசோஸ் பைரில்லம் பாஸ்போபாக்டீரியா சூடோமோனஸ் புளோரசன்ஸ் ஒவ்வொன்றும் ஒரு கிலோவீதம் நன்கு மக்கிய குப்பையில் கலந்து பயன்படுத்தவும்.
நடவு செய்த பின்னர் 30 முதல் 40 நாளில் மேலுரமாக 500 முதல் 1000 கிலோ பயிரின் வயர்ச்சியைப் பொருத்து கோழி உரம் பயன்படுத்த வேண்டும். வேறு தொழு உரங்களையும் பயன்படுத்தலாம். அத்துடன் ஏற்கனவே குறிப்பிட்ட நுண்ணுயிர் உரங்களையும் பயன்படுத்த வேண்டும்.
மேலே குறிப்பிட்டது தவிர நடவு வயலில் முன்கூட்டிய பலவகை தானியங்களை ஏக்கர் ஒன்றுக்கு 25 கிலோ என்ற அளவில் விதைத்து 30 முதல் 60 நாட்களில் இதனை மடக்கி உழுது நெல் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொழு எரு அளவை பாதியாகக் குறைக்கலாம். வயதான நாளுள்ள நெல் வகைகளுக்கு தூர்கட்டும் திறன் குறைவாக இருக்கும்.
இதனை சரிக்கட்ட நடவு சமயம் ஒரு குத்துக்கு 4 முதல் 6 நாற்றுக்கள் பயன்படுத்தி நெருக்கி நடவு செய்ய வேண்டும்.
பாசனமுறை
ஒவ்வொரு வயலிலும் தண்ணீர் நுழையும் இடத்தில் இரண்டடி நீள, அகல, ஆழ குழி அமைத்துக் கொள்ள வேண்டும். அதில் நன்கு மக்கும் வேம்பு, எருக்கு, ஊமத்தை, தங்கரளி, நெய்வேலிக் காட்டாமணக்கு போன்றவற்றின் இலைகளைக் போட்டுக் கொள்ள வேண்டும். அதன்மேல் கல் அடுக்கி வைத்து நீர் பாய்ச்சி வர வேண்டும்.
இந்தக் கசாயம் நீரில் சீராகப் பரவி வளர்ச்சிக்கு உதவும். நூற்புழுவைக் கட்டுப்படுத்தும். நூற்புழுவுக்கு எதிரான நுண்ணுயிர்கள் இதில் வாழ வாய்ப்புக் கிடைக்கும். நெற்பயிரின் தூரில் தங்கி சேதப்படுத்தும் புகையான் தாக்குதலையும் கட்டுப்படுத்தும். நெற்பயிரின் சீரான வளர்ச்சி மற்றும் தூர்க் கட்டும் திறன் அதிகரிக்க வாளிப்பான நெற்குலைகள் உருவாக, திரட்சியான நெல் மணிகள் உருவாக கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம்.
சாண எரிவாயுக் கலனில் வெளிவரும் சாணக்கரைசல் 75 லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் நீர் 75 லிட்டர் சேர்த்துக் கொள்ள வேண்டும். எரிகலன் இல்லாதவர்கள் 50 கிலோ சாணியை 100 லிட்டர் நீருடன் கலந்து சாணக் கரைசல் தயார் செய்து கொள்ள வேண்டும்.
இத்துடன் முன்னர் சொன்ன வளர்ச்சி ஊக்கிகளில் தெளிப்பதற்கு தேவையான ஒன்றைக் கலந்து 3 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும். பின்னர் அவற்றை பாசன நீருடன் கீழ்க்கண்ட அளவில் கலந்து விட வேண்டும்.
வளர்ச்சி ஊக்கி
ஏக்கருக்கான அளவு அமுதக் கரைசல் 50 - 80 லிட்டர் ஆவூட்டம் 5 - 10 லிட்டர் தேமோர்க் கரைசல் 5 - 10 லிட்டர் அரப்புமோர் கரைசல் 5 - 10 லிட்டர் மீன் அமினோ அமிலம் 3 லிட்டர் நெல் நடவு செய்த 20 முதல் 25ஆம் நாளில் இருந்து 7 முதல் 10 நாள் இடைவெளியில் 2 முதல் 4 முறை இக்கரைசல்களைப் பயன்படுத்தலாம்.