தற்போது நிலவும் வறண்ட வானிலையால் மானாவாரி நிலக்கடலைப் பயிரில் சுருள்பூச்சித் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
விவசாயிகள் ஆரம்பத்திலேயே பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தாக்குதல் அறிகுறி:
வறண்ட வானிலை இருக்கும்போது இந்தப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இலைகளில் பச்சையத்தைச் சுரண்டிச் சாப்பிட்டு உயிர் வாழும். தாக்குதலுக்கு ஆளான செடிகள் காய்ந்தும், சுருங்கியும் காணப்படும்.
இப்பூச்சியில் புழு ஆரம்பத்தில் ஒரு நரம்பில் துளையிட்டு அதனுள்ளே இருந்து கொண்டு படிப்படியாக வளர்ந்து இலைகளைச் சுருட்டி அதனுள்ளே வசிக்கும். தீவிரத் தாக்குதலுக்குண்டான வயல்கள் தூரத்திலிருந்து பார்க்கும்போது எரிந்தது போலக் காணப்படும்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் பின்வரும் வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.
கட்டுப்படுத்தும் முறை:
சரியான பருவத்தில் விதைக்க வேண்டும். விளக்குப் பொறி வைத்து (இரவு 7 மணி முதல் 9 மணி வரை) பூச்சிகளின் நடமாட்டத்தைக் கவனிக்க வேண்டும்.
தட்டைப்பயறு, துவரை அல்லது உளுந்து ஆகியவற்றைப் பொறிப் பயிராகவும் ஊடுபயிராகவும் விதைக்கலாம்.
பூச்சிகள் அதிகம் தென்படும்போது ஏக்கருக்கு வேம்பு சார்ந்த பூச்சிகொல்லி மருந்தான அசாடிராக்டின் 500 மில்லி தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
பூச்சியின் தாக்குதல் பொருளாதாரச் சேத நிலையைத் தாண்டும்போது அதாவது ஒரு செடிக்கு 2 அல்லது 3 புழு தென்பட்டால் குவினால்பாஸ் 25 இ.சி. – 400 மில்லி., டைமெத்தோயேட் 30 இ.சி. – 250 மில்லி., குளோரபைரிபாஸ் 20 இ.சி. – 500 மில்லி, லாம்டாசையலோத்ரின் 5 இ.சி. – 80 மில்லி போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றைத் ஒரு ஏக்கருக்குத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.