மஞ்சள் சாகுபடிக்கு சிறந்த பட்டம் வைகாசிப் பட்டமே (மே – ஜூன்)
விதைக் கிழங்கு தேர்வு ஒரு ஏக்கர் விதைப்புக்கு 1000 கிலோவிதைக் கிழங்குகள் வரை வேண்டும்.
நடவுக்குத் தேர்ந்தெடுக்கும் கிழங்கின் எடை குறைந்தபட்சம் 35 கி இருந்தால் மட்டுமே முளைப்புக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் கிடைக்கப் பெற்று செடி நன்றாக முளைத்து அதிக மகசூல் கொடுக்கும்.
பூச்சி நோய்த்தாக்குதலுக்கு உட்படாத, குறிப்பாக வேர் அழுகல் நோயால் பாதிக்கப்படாத தோட்டங்களில் இருந்து விதைக் கிழங்குகளைத் தேர்ந்தெடுத்து நடவு செய்வது நல்லது.
முடிந்தளவு மஞ்சளை வெட்டாமல் முழுமையாக நடவுக்குப் பயன்படுத்தலாம். இல்லையெனில் பூச்சி நோய்த் தாக்கம் ஏற்பட வாய்ப்பாகும்.
நடவுக்குத் தேர்ந்தெடுத்த மஞ்சளை கார்பண்டசிம் மருந்துக் கரைசலில் 1 லிட்டர் தன்ணீர்க்கு 1கிராம் என்றளவில் கரைத்து குறைந்தது 20 நிமிடங்கள் ஊறவைத்து நடவு செய்தால், விதை மூலமாகவும், மண்மூலமாகவும் பரவக்கூடிய ஆரம்பகால நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
நிலத் தேர்வு மற்றும் நடவு
நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணல் சார்ந்த வண்டல் மண் நடவுக்கு சாலச் சிறந்தது. உப்புத் தன்மையுடைய களர்நிலங்கள் மஞ்சள் சாகுபடிக்கு உகர்ந்தது அல்ல.
மாற்றுப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்களை மஞ்சள் சாகுபடிக்குத் தேர்வு செய்யலாம். நிலத்தை 15- 20 செ.மீ ஆழத்திற்கு உழ வேண்டும். இதனால் மண்ணுக்கு நல்ல காற்றோட்டமும், பொலபொலப்புத் தன்மையும் கிடைக்கப்பெற்று கிழங்கு செழித்து வளரும்.
கடைசி உழவிற்கு முன் அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 4 டன் தொழு உரம் போடவேண்டும். அதன் பிறகு 80 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 22கிலோ யூரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோபொட்டாஷ், 6 கிலோ துத்தநாக சல்பேட் மற்றும் 12 கிலோ இரும்பு சல்பேட்டை அடியுரமாக, பார்களின் பக்கவாட்டில் போட்டு அதன் பிறகு மஞ்சள் சாகுபடி செய்யலாம்.
மேற்கூறிய தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றினால் மஞ்சள் சாகுபடியில் அமோக விளைச்சலையும் கை நிறைய வருமானத்தையும் பார்க்கலாம்.