தோப்பிற்கு நடுவே கொட்டில் முறையில் ஆடு வளர்ப்பு; ஆட்டுக்கு தீவனம், மரத்திற்கு உரம்…

 
Published : Feb 25, 2017, 02:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
தோப்பிற்கு நடுவே கொட்டில் முறையில் ஆடு வளர்ப்பு; ஆட்டுக்கு தீவனம், மரத்திற்கு உரம்…

சுருக்கம்

மா, தென்னை தோப்பிற்கு நடுவே, கொட்டில் (பரண்) முறையில் ஆடு வளர்த்தால், விவசாயத்தோடு, ஆடுகளின் மூலம் லாபம் பார்க்கலாம்.

பத்து ஏக்கரில் 500 மாமரம், 16 ஏக்கரில் ஆயிரம் தென்னை மரங்கள் வைத்திருக்கிறேன் என்று தனது அனுபவத்தை ஆரம்பித்தார் அமிர்தன்.

தென்னைக்கு 20 வயது, மாவிற்கு 15 வயது .27 அடி இடைவெளியில் தென்னை நட்டோம். ஆண்டுக்கு இரண்டு முறை தொழு உரம், கொழிஞ்சியை இடுவோம். இப்போ ஆட்டுப் புழுக்கை, கொழிஞ்சியா மாத்திட்டோம். வேற ரசாயன உரம் தர்றதில்ல.

தேங்காயா விக்காம, கொப்பரையாக்கி, வெள்ளகோவில்ல இருக்குற எண்ணெய் மில்லுக்கு நேரடியா அனுப்பிடுவேன். அன்றைக்கு மார்க்கெட் ரேட்டுக்கு ஏத்தமாதிரி பணம் கிடைக்கும்.

தென்னையில ஆண்டுக்கு ஆறுதரம் காய் பறிக்கலாம். ஆயிரம் மரத்துல, ஒவ்வொரு தரமும் 30ஆயிரம் காய் கிடைக்கும். உரிச்சு உடைச்சு காயவச்சு பருப்பு எடுத்தா 18 டன் கொப்பரை, 18 டன் சிரட்டை கிடைக்கும். ஒரு டன் சிரட்டை 8ஆயிரம் ரூபாய். தேங்காய் மட்டை ஒரு லாரி லோடு 4000 ரூபாய்.

இந்த வருமானத்தை வைச்சே, தேங்காய் வெட்டுக் கூலி, உரிப்பு கூலி, பருப்பு எடுக்கற கூலியை கொடுத்துடுவேன். கொப்பரையில கிடைக்குறது அப்படியே லாபமாயிடும். ஆண்டுக்கு பத்து லட்ச ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும்.

25 அடிஇடைவெளியில் அல்போன்சா, பங்கனப்பள்ளி, கல்லாமை, செந்தூரம், கருங்குரங்கு மாமரங்கள் நட்டிருக்கேன். இதுக்கும் ஆண்டுக்கு ரெண்டு தரம் இயற்கை உரம் கொடுப்பேன்.

இதுல கிடைக்கிற பழங்களை, நேரடியாக பழமுதிர்ச் சோலை நிலையக் கடைகளுக்கு அனுப்புவேன். மா, தென்னையில கிடைக்கற பொருட்களை நேரடியாக அந்தந்த இடங்களுக்கு அனுப்புறதால, போக்குவரத்து செலவு மட்டும்தான், எனக்கு. மத்தபடி மார்க்கெட் கமிஷன், புரோக்கர் கமிஷன் எதுவும் இல்ல. இதனால மார்க்கெட் விலை கிடைச்சாலே, எனக்குப் பெரிய லாபம் தான்.

மா, தென்னைக்கு ஆட்டுப் புழுக்கை வெளியில விலைக்கு வாங்கி, போட்டிட்டு இருந்தேன். எங்க தாத்தா காலத்தில் நூத்துக்கும் மேற்பட்ட வெள்ளாடு, செம்மறியாடு இருந்துச்சு. கூலியாட்கள் பற்றாக்குறையால, எல்லாம் போச்சு.

ஆட்டுப் புழுக்கைக்காக, கொட்டில் முறை ஆட்டு வளர்ப்பைத் தேர்வு செஞ்சேன். பத்து ஏக்கரில் தென்னைக்கு ஊடே, ஆடுகளுக்குத் தேவையான கோ - 3, கோஎப்.எஸ் - .29, வேலி மசால், கிளரிசிடியா பசுந்தீவனங்களை பயிரிட்டுள்ளேன்.

அடர் தீவனத்திற்காக சோளத்தட்டை, மக்காச்சோளமும் சாகுபடி பண்றேன். எல்லாத்தையும் மெஷினில் வெட்டி தீவனமா கொடுக்கறேன். இதனால, ஆட்களோட எண்ணிக்கையும் கம்மி.

ஆட்டுப் புழுக்கைகள், தென்னை, மாமரத்திற்கு நல்ல உரமாகுது. அதன்மூலம் தீவனப் பயிர்களும் நல்லா வளருது. தீவனத்திற்கு தனியா வெளியில வாங்க வேண்டிய செலவும் இல்ல, என்றார் அமிர்தன்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?