உவர் நிலத்தை விவசாய நிலமாக மாற்றும் அபூர்வ தாவரம் ‘ஓர்பூடு’...

 |  First Published Feb 25, 2017, 2:16 PM IST



வறட்சி, பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் மாற்று வழிகளிலும் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், நச்சுக் கழிவுகளால் நிலத்தில் ஏற்படும் உப்புத்தன்மையை இயற்கை முறையில் அகற்றி, மண்ணை வளமாக்கக்கூடிய தாவரத்தைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

வழவழப்பான தடித்த இலைகள், ஊதா நிறப் பூக்களைக் கொண்டு தரையோடு ஒட்டி வளரும் ‘ஓர்பூடு’ எனும் தாவரத்தைச் சில வீடுகளில் அலங்காரத்துக்கு வளர்ப்பதைப் பார்த்திருக்கலாம்.  இது அழகுத் தாவரம் மட்டுமல்ல, வேறு பல குணாதிசயங்களையும் கொண்டுள்ளது.

கால்நடைகளுக்குத் தீவனமாக, புற்றுநோய் எதிர்ப்புத் திறன் கொண்ட மருத்துவ மூலப்பொருளாக, குறிப்பாக மண்ணிலுள்ள சோடியம் உப்பை உறிஞ்சி எடுக்கும் திறன் கொண்ட அபூர்வத் தாவரம் இது.

இயற்கையாக வளரும் இந்தத் தாவரத்தின் மூலம், உப்பு படிந்து மலடாகிக் கிடக்கும் நிலத்தை, பைசா செலவில்லாமல் வளம்மிக்க விளைநிலமாக மாற்ற முடியும் என்பது ஆச்சரியம் அளிக்கக்கூடியது.

சுமார் இரண்டு வருட ஆய்வுக்குப் பிறகு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல் அறிவியல் துறையினர் இந்தத் தாவரத்தின் தனித்தன்மையை ஆய்வு பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளனர்.

‘கடற்கரை ஓரங்களிலும், உவர்நிலங்களிலும் ஓர்பூடு என்ற தாவரம் அதிகமாக வளர்கிறது. இது அந்தச் சூழலில் செழித்து வளர்வதால், தனக்குத் தேவையான சத்துகளை உவர் நிலத்திலிருந்தே பெறுகிறது என்பதை இனம் கண்டோம். இதன் தாவரவியல் பெயர் செசுவியம் போர்டுலகாஸ்ட்ரம்.

விரிவான ஆய்வு மேற்கொண்டதில், மண்ணில் உள்ள சோடியம் உப்பைத் தனது வளர்ச்சிக்கு இந்தச் செடி அதிகளவில் எடுத்துக்கொள்வது தெரியவந்தது. இதை ஆய்வுரீதியாக உறுதிசெய்துள்ளோம்.

அந்த ஆய்வில், “பல வகை மாசுகளால் பாழடைந்து கிடக்கும் உப்பு படிந்த நிலத்தை, இந்தத் தாவரம் மெல்லமெல்ல மீட்டெடுத்து நன்னிலமாக மாற்றுகிறது என்பதால், எதிர்காலத்தில் இதன் தேவை பல மடங்கு அதிகமாக இருக்கும்.

70 சதவீத உப்பை உறிஞ்சும். உப்பு நிறைந்த மண்ணின் மின்கடத்தும் திறன் அதிகமாக இருக்கும். எனவே, சோடியம் உப்புகளால் அதிகம் மாசுபட்ட மண்ணை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.

இந்த மண்ணின் மின்கடத்தும் திறன் 7 முதல் 14 இ.சி. புள்ளிகள் (Electrical conductivity) வரை இருந்தது.

அதில் மூன்று நிலைகளில் ஓர்பூடு தாவரத்தை வளர்த்தோம். குறிப்பிட்ட கால இடைவெளியில் மண்ணின் மின்கடத்தும் திறன் குறைந்தது. அதாவது உப்புத்தன்மை குறைந்துவந்தது. அதேசமயம் உப்புச் சத்தை எடுத்துக்கொண்டு ஓர்பூடு தாவரம் நன்கு வளர்ந்தது.

அதிக அளவில் சோடியத்தை எடுத்துக்கொண்டதால், அதன் தண்டுகள் சிவப்பாகவும், இலைகள் தடித்தும் வளரத் தொடங்கின. அடுத்த கட்டமாகத் தொட்டிகளிலும், விளைநிலங்களிலும் இச்செடியை வளர்த்து ஆய்வு செய்தோம். அதிலும் இதே முடிவுகள் கிடைத்தன. இந்தச் செடி மண்ணிலிருந்து சுமார் 70 சதவீத உப்புத்தன்மையை உறிஞ்சி எடுக்கிறது.

ஒரு மண் உப்புத்தன்மையுடன் இருந்தால், அங்கு எந்தத் தாவரமும் வளராது. ஆனால் இந்தத் தாவரமோ அங்கு வளர்வதுடன், மண்ணை வளமாக்கி விவசாயம் மேற்கொள்ளவும் வழிவகுக்கிறது.

மேலும் அழகுச்செடியாகவும், கால்நடைகளுக்குத் தீவனமாகவும், புற்றுநோய் எதிர்ப்பு மருந்து மூலப்பொருளாகவும், உணவுப் பொருளாகவும் இந்தத் தாவரம் பயன்படுகிறது.

குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இறால் மீனுடன் சேர்த்துச் சமைப்பதற்கு இந்தச் செடியைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இதை வங்கராசி கீரை என அழைக்கிறார்கள்.

இந்தச் செடி குறித்த அடுத்தகட்ட ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

click me!