தென்னையில் குரும்பைகள் மற்றும் பல்வேறு அளவுள்ள இளங்காய்கள் உதிர்வது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பைத்தரும் முக்கிய பிரச்சனைகளாகும்.
காய்க்க ஆரம்பிக்கும் இளம் மரங்களில் குரும்பை உதிர்வதை தடுக்க முடியாத பண்பாகும். எனினும் நல்ல காய்ப்பிற்கு வந்த தென்னையில் ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிகமாக பெண் பூக்கள் உதிர்கின்றன.
காரணங்கள்:
குரும்பைகள் மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் தாவர உடற்செயலில் குறைபாடு, மண்ணின் குணம்( உவர், களர் தன்மை), மண்ணில் ஊட்டச்சது பற்றாக்குறை, நீர் நிர்வாகக் குறைபாடு போன்ற காரணங்களைக்குறிப்பிடலாம்.
மண்ணின் குணம் :
மண்ணின் கார, அமிலத் தன்மை 5 சதத்துக்கு குறைவாகவோ அல்லது 8 சதத்துக்கு அதிகமாகவோ இருக்கும்போது, குரும்பைகள் கொட்டுவது இயல்பாகும்.
ஆகையால், அமிலத் தன்மை அதிகமிருக்கும் மண்ணில் மரத்திற்கு சுண்ணாம்புச்சத்து இட்டும், காரத்தன்மை அதிகமிருக்கும் மண்ணில் ஜிப்சம் இட்டும் உவர், களர் தன்மையச் சரிசெய்யலாம்.
கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள்: யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ மற்றும் மூரியேட் ஆப் பொட்டாஷ் 2 கிலோ ஆகியவற்றை 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து, ஒவ்வொரு மரத்திற்கும் இட வேண்டும்.
மேலும், தென்னை டானிக் 40 மில்லியை 160 மில்லி தண்ணீருடன் கலந்து, ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேர் மூலம் உட் செலுத்துவதன் மூலம் குரும்பை பிடிப்பதை அதிகரிக்கச் செய்யும்.
தென்னை நுண்ணூட்டக் கலவையை மரத்திற்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். இந்த நுண்ணூட்டக்கலவையில் தென்னைக்கு தேவையான அனைத்து நுண் சத்துக்களும் உள்ளன.
தென்னை நுண்ணூட்டக் கலவையை மரத்திற்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். இந்த நுண்னூட்டக் கலவையில் தென்னைக்கு தேவையான அனைத்து நுண் சத்துக்களும் உள்ளன.
நீர் நிர்வாகக் குறைபாடு:
மார்ச் ஏப்ரல் மாதங்களில் அதிகமாகக் குரும்பை உதிர்வு ஏற்படுகிறது. கடுமையான வறட்சி மழை பெய்த பின்பும் அல்லது நீண்ட காலமாக நீர் பாய்ச்சாமல் பராமரிப்பின்றி இருக்கும் தென்னந் தோப்புகளில் குரும்பை பிடிப்பு அதிகம் இல்லாமலும், மட்டைகள் துவண்டு தொங்குவதும் காணப்படும்.
தென்னை வேர்களுக்கு காற்றோட்டம் கிடைப்பதற்கு போதுமான வடிகால் வசதி செய்தல் அவசியமாகிறது. இல்லாவிடில், இளம் கன்றுகள் வளர்ச்சி குறைந்து, இலைகள் மஞ்சள் நிறமாகின்றன. மேலும் வளர்ந்த மரங்களில் குரும்பைகளும், இளங்காய்களும் உதிர்வதற்கான வாய்ப்பு உருவாகிறது. நவம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரை தொடர் நீர்ப்பாசனம் மற்றும் நல்ல வடிகால் வசதியும் செய்தால், 6 முதல் 9 ஆண்டுகள் வரை நல்ல நிலையான மகசூல் கிடைக்கும்.
மகரந்த சேர்க்கை குறைபாடு :
தென்னையில் அயல் மகரந்த சேர்க்கையில் கருவுறுதல் ஏற்பாடு, குரும்பைகள் காய்களாக வளர்ச்சி பெறுகின்றன. காற்றினாலும், தேனீக்கள் போன்ற பூச்சிகளாலும் தென்னையில் அயல் மகரந்தச்சேர்க்கை நிகழ்கிறது.
அதிக மழை பொழிவால் மகரந்தச் சேர்க்கையின்மை மற்றும் மகரந்த சேக்கை ஏற்படுத்தும் காரணயின்மையினாலும் குரும்பைகள் உதிர்கின்றன.
பயிர்வினை ஊக்கிகளின் குறை மற்றும் தேவை:
குரும்பைகள் வளர்ச்சிக்கு பயிர் வினை ஊக்கிகள் தேவைப்படுகின்றன. இவற்றின் உற்பத்தி தேவையான அளவுக்கு இல்லாத போது குரும்பைகள் உதிர்வதுண்டு.
பயிர் வளர்ச்சி ஊக்கியான நாப்தலின் அசிட்டிக் அமிலத்தை (பிளானோபிக்ஸ்) பாளைகள் வெடித்து ஒரு மாதம் கழித்து அரை மில்லி அளவை ஒரு லிட்டர் சுத்தமான நீரில் கலந்து பாளைகளில் தெளிப்பதன் மூலம் தடுக்கலாம்.
பூச்சிகள் மற்றும் நோய்கள்:
பாளைகள் வெடித்து குரும்பைகள் கருவுறும்போது, சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் பூசணத்தினால் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
பொதுவாக, கொலிடோடிரைகம் பூசணத்தினால் குரும்பைகளின் திசுக்களில் பசை வடிவத்தில் ஏற்பட்டு உதிர்வு ஏற்படுகிறது.
மேலும், அஸ்பொஜில்லஸ் பென்சிலியம், பைட்டோப்தோரா, ப்யுஸோரியம், பெஸ்டலேசியா போன்ற பூசணங்களினாலும் குரும்பைகள் உதிர்வு ஏற்படுகிறது.
இந்தக் காரணங்களை கண்டறிந்து தேவையான மருந்துகளை அளவுடன் உபயோகிப்பதன் மூலம் குரும்பைகள் உதிர்வதை தடுக்கலாம்.
போரான் குறைபாடு:
போரான் என்ற நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையினால் தென்னை இலைகள் சிறுத்து, விரிவடையாமல் காணப்படும். இது கொண்டை வளைதல் அல்லது இலை பிரியாமை என்று அழைக்கப்படுகிறது.
சுமார் மூன்று ஆண்டுகள் வயதுடைய மரங்களில் இலைகள் சாதாரண முறையில் விரிவடையாமல் ஒன்றுக்கு ஒன்று பின்னிக் கொண்டு வெளி வர இயலாத நிலையில் காணப்படும்.
சுமார் மூன்று ஆண்டுகள் வயதுடைய மரங்களில் இலைகள் சாதாரண முறையில் விரிவடையாமல் ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டு வெளிவர இயலாத நிலையில் காணப்படும்.
மேலும், வளர்ந்த மரங்களில் இலைகளின் வளர்ச்சி மிகவும் குறைந்து மட்டைகள் குருத்து பாகத்திலிருந்து வளைந்து காணப்படும். குறைபாடு முற்றிய நிலையில் குரும்பைகளும், இளம் காய்களும் கொட்டுவதற்கு வாய்ப்பு உருவாகிறது.
இதைத் தவிர்க்க, மண்ணில் 250 கிராம் போராக்ஸ் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தனியே வைத்து (மற்ற உரங்களுடன் கலக்காமல்) இரண்டு வருடங்களுக்கு தொடர்ச்சியாக இட வேண்டும். ( அல்லது ) வேர் மூலம் 25 மில்லி அளவு போரான் கரைசலை செலுத்துவதால் மரம் போரான் குறைபாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறது.
தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், குரும்பை உதிர்வதின் காரணங்களைக் கண்டறிந்து உரிய தடுப்பு முறைகளை மேற்கொண்டு நல்ல மகசூல் பெறலாம்.