சுழி பட்ஜெட் உளுந்து சாகுபடி பற்றியதகவலை இந்தப் பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்ட நிலத்தை இரண்டுசால் புழுதி உழவு செய்ய வேண்டும்.
150 கிலோ கன ஜீவாமிர்தத்தை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தில் கலந்து புட்டு பதத்திற்கு பிசைந்து வயல் முழுக்க பரவலாக தெளிக்க வேண்டும்.
கன ஜீவாமிர்தம் பறக்காமல் இருக்கவும் அதன் வீரியத்தை அதிகப்படுத்துவதற்கும் ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிக்க வேண்டும்.
பின்பு 20 அடி நீளம் 15 அடி அகலம் கொண்ட பாத்திகள் அமைத்து 7 கிலோ ஆடுதுறை-5 இரக விதை உளுந்தை ஜீவாமிர்த கரைசலில் அமிழ்த்தி விதைநேர்த்தி செய்து, பரவலாக தெளித்து ரோட்டோ வேட்டர் மூலம் மேலோட்டமாக ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும்.
தொடர்ந்து காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் கட்டி வரவேண்டும்.
7-ஆம் நாள் 50 லிட்டர் ஜீவாமிர்தத்தை 80 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
15-ஆம் நாள் 5 லிட்டர் அக்னி அஸ்திரத்தை 120 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
35-ஆம் நாள் இதே அளவு ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும்.
45-ஆம் நாள் 5லிட்டர் தேமோர்க்கரைசலை 115 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
மாலை நேரங்களிலேயே தெளிக்க வேண்டும். 65 நாட்களில் உளுந்து அறுவடைக்கு வந்து விடும்.
ஜீவாமிர்தம்:
பசுஞ்சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் ஒரு கைப்பிடி நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.
பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைக்க வேண்டியது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை இதை கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார்.
இது ஒரு நாளுக்கான அளவு. இதை பயிர் வளர்ச்சி ஊக்கியாக பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
கன ஜீவாமிர்தம்:
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும்.
இதையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு நாட்டு மாட்டுச் சிறுநீரை கலந்தால் போதும். பின்பு உருட்டி நிழலில் காயவைத்து தேவைப்படும் போது உதிர்த்துப் பயன்படுத்தலாம். இது மானாவாரி நிலங்களுக்கு ஏற்றது.
மகசூல் ஏக்கருக்கு 5 குவிண்டால் உளுந்து ரூ.1 இலட்சத்து 52 ஆயிரம் வருமானம் கிடைக்கும்.