விதை நேர்த்தி:
நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் இந்த பருவத்தில் ஏ.டீ.டி 36, ஏ.டீ.டி 43, ஏ.டீ.டி 45, ஏ.டீ.டி 16, ஏ.டீ.டி 18, ஏ.டீ.டி 5 மற்றும் வீரிய ஒட்டு இரகங்களான ஏ.டீ.டி,அர்.எச் 1, கோ.ஆர்.எச் 1 ஆகிய இரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 60 கிலோ விதைகள் போதுமானது.
இவ்வாறு தேர்வு செய்த விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். 1 கிலோ விதைக்கு 10 கிலோ சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் மருந்தை வைத்தபின்பு தண்ணீரை வடித்து 24 மணி நேரம் கழித்து விதைப்பு செய்ய வேண்டும். இதனால் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம். பின்னர் கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
ஒரு எக்டேருக்கு தேவையான 50 கிலோ விதையுடன் 5 பொட்டலங்கள் அஸோஸ்பைரில்லம் மற்றும் 5 பொட்டலங்கள் பாஸ்போ பாக்டீரியவினை தேவையான அளவு கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் பயிர்களுக்கு இயற்கையாகவே காற்றில் உள்ள தழைச்சத்து கிடைத்து நன்றாக வளரும்.
நாற்றங்கால் தயாரிப்பு:
ஒரு எக்டேருக்கு 20 செண்ட் நாற்றங்கால் தேவை. இந்த நாற்றங்காலுக்கு அடியுரமாக ஒரு டன் தொழு உரம் இட வேண்டும். சென்டிற்கு 2 கிலோ வீதம் டி.ஏ.பி யை அடியுரமாக இட வேண்டும். நாற்றுகளை 25 முதல் 30 நாட்களுக்குள் பறித்து நட முடியாத நிலையில் நாற்றுகளை பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு சென்டுக்கு ஒரு கிலோ டி.ஏ.பி இட வேண்டும். இதனால் தரமான நாற்றுகளை இட வேண்டும். நாற்றங்காலில் 10 பொட்டலங்கள் அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். இதனால் தரமான நாற்றுகளை பெறலாம்.
நடவு வயல் தயாரித்தல் :
நடவு வயலில் உழவிற்கு முன்பாக எக்டேருக்கு 12.5 மெட்ரிக் டன் தொழு உரம், கம்போஸ்ட், பசுந்தாள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நடலாம். இதன்படி ஒரு எக்டேருக்கு பசுந்தாள் உரம் 6.25 மெட்ரிக் டன் இட வேண்டும். நடவு வயலில் எக்டேருக்கு 10 பொட்டலங்கள் அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
மண் ஆய்வுப்பரிந்துரையின்படி ரசாயண உரங்கள் இட வேண்டும். இதனால் தேவையற்ற உரச்செலவை குறைக்கலாம். மண் ஆய்வு மேற்கொள்ளாத நிலையில் பொது பரிந்துரையாக எக்டேருக்கு 40 கிலோ தழைச்சத்து, 38 கிலோ மணிச்சத்து, 19 கிலோ சாம்பல்ச்சத்து ஆகியவற்றை இட வேண்டும்.
நுண்ணூட்ட உரமிடல்:
நடவு செய்வதற்கு முன்பாக எக்டேருக்கு 25 கிலோ சிங்க்சல்பேட் உரத்தினை மணலுடன் கலந்து இட வேண்டும். முதல் மேலுரமாக நடவு செய்த 15- ம் நாளில் 40 கிலோ தழைச்சத்து மற்றும் 9.5 கிலோ சாம்பல்சத்து இட வேண்டும். தழைச்சத்துடன் 5க்கு 1 என்ற விகிதத்தில் வேப்பம் புண்ணாக்கு கலந்து இட வேண்டும். 2 வது மேலுரமாக நடவு செய்த 30 வது நளில் 40 கிலோ தழைசத்து மற்றும் 9.5 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.
நடவின் போது 2 சென்டி மீட்டர் அளவு நீரும், பயிரின் முக்கிய பங்குகளான பஞ்சுக்கட்டுதல், பொதி பருவம் கதிர் வெளிவருதல் மற்றும் பூப்பருவத்தில் 2.5 செ.மீ உயரத்திற்கு தண்ணீர் இருக்குமாறு நீர்ப்பாய்ச்சுதல் அவசியமாகும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு :
நாற்றங்காலில் இலைப்பேனை கட்டுப்படுத்த 5 சதவீதம் வேப்பம் கொட்டைக்கரைசலை தெளிக்க வேண்டும்.
நடவு வயலில் இலைச்சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், புகையான் மற்றும் பச்சைத்தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு கலந்த யூரியா இடலாம். யூரியாவுடன் பொட்டாஷ் கலந்து பிரித்து இடலாம். பாத்தி நடவு மற்றும் நீர் மேலாண்மையில் பாய்ச்சலும், காய்ச்சலும் என்ற முறையை கடைபிடிக்கலாம். மேலும் வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
நோய் பாதிப்பு ஏற்பட்டால் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் 5 கிராமினை, ஒரு லிட்டர் நீரில் கலந்து நடவு செய்த 45 – வது நாளில் இருந்து 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். மேற்கண்ட தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி குறுவை சாகுபடியில் அதிக அளவு மகசூலினை பெறலாம்.