நெல்லுக்கு மண் ஆய்வின் பரிந்துரைப்படி உரமிடுதல் நல்லது. அல்லது பொது பரிந்துரைப் பிரகாரம் குறுகிய கால இரகத்திற்கு ஒரு ஹெக்டேருக்கு 125:50:50 என்ற அளவிலும் மத்திய மற்றும் நீண்ட கால ரகங்களுக்கு 150:60:60 கிலோ என்ற அளவிலும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை இட வேண்டும்.
இதில் அடியுரமாக 50 மற்றும் 60 கிலோ தழைச்சத்தை முறையே குறுகிய மற்றும் மத்திய கால பயிருக்கு இட வேண்டும். நீண்ட கால பயிருக்கு அடியுரமாக 30 கிலோ தழைச்சத்து இட்டாலே போதுமானது.
இந்த தழைச்சத்தை யூரியாவாக இடும் போது ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றையும் சேர்த்து 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இட வேண்டும். இத்துடன் எல்லா ரகங்களுக்கும் அடியுரமாக 100 சதவீத மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரமாகவும் 50 சதவீத சாம்பல் சத்தை பொட்டாஷ் உரமாகவும் இட வேண்டும். மேலும் கடைசி உழவில் 500 கிலோ ஜிப்சத்தை நன்றாக மண்ணுடன் கலக்கச் செய்ய வேண்டும்.
உரத்தை மண்ணுடன் கலக்கிய பிறகு வயலை ஒரே சீராக சமன் செய்ய வேண்டும். இந்த தொழில் நுட்பம் மிக அவசியமான ஒன்று. பின் சமன் செய்த வயலில் ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட்டை 50 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும். மேலும் 10 பாக்கெட் அசோஸ்பைரில்லத்தை நன்றாக மக்கிய சலித்தெடுத்த 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து நிலத்தில் பரவலாக தூவ வேண்டும்.
வளர்ந்த நெற்பயிருக்கு: கீழ்க்கண்டவாறு மேலுரம் இட வேண்டும். மேலுரம் இடும் பொழுது யூரியாவுடன் ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இட வேண்டும். கடைசியாக இடப்படும் மேலுரம் மட்டும் தனி யூரியாவாக இட வேண்டும். அப்பொழுது தான் யூரியாவிலுள்ள தழைச்சத்து உடனடியாக உபயோகப்படுத்தப் பட்டு பூக்கள் நெல்மணியாக மாறி எடை கூடுவதுடன் விளைச்சல் கூடுவதற்கு வழிவகுக்கும்.
குறுகிய கால இரகம்: குறுகிய கால இரகத்திற்கு நட்ட 15வது நாளில் ஹெக்டேருக்கு தழைச்சத்து 25 கிலோ இட வேண்டும். நட்ட 30வது நாளில் ஹெக்டேருக்கு தழைச்சத்து 25 கிலோ, சாம்பல் சத்து 25 கிலோ இட வேண்டும். நட்ட 45வது நாளில் ஹெக்டேருக்கு தழைச்சத்து 25 கிலோ மீண்டும் இட வேண்டும்.
மத்திய கால இரகம்: மத்திய கால இரகத்திற்கு நட்ட 20-25வது நாளில் ஹெக்டேருக்கு தழைச்சத்து 30 கிலோ இட வேண்டும். நட்ட 40-45வது நாளில் ஹெக்டேருக்கு தழைச்சத்து 30 கிலோ, சாம்பல் சத்து 30 கிலோ இட வேண்டும். நட்ட 60-75வது நாளில் ஹெக்டேருக்கு தழைச்சத்து 30 கிலோ மீண்டும் இட வேண்டும்.
நீண்ட கால இரகம்: நீண்ட கால இரகத்திற்கு நட்ட 25வது நாளில் ஹெக்டேருக்கு தழைச்சத்து 30 கிலோ இட வேண்டும். நட்ட 50வது நாளில் ஹெக்டேருக்கு தழைச்சத்து 30 கிலோ மீண்டும் இட வேண்டும். நட்ட 75வது நாளில் ஹெக்டேருக்கு தழைச்சத்து 30 கிலோ, சாம்பல் சத்து 30 கிலோ இட வேண்டும். நட்ட 100வது நாளில் ஹெக்டேருக்கு தழைச்சத்து 30 கிலோ மீண்டும் இட வேண்டும்.