உலக அளவில் 3.6 லட்சம் மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பயிர்கள் உள்ளதாக அறியப்படுகிறது. இவற்றில் ஏறக்குறைய 1.4 லட்சம் மூலிகைகள் இந்திய துணைக் கண்டத்தில் காணப்படுகின்றன.
மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைக்கு மூலிகைச் செடிகள் உபயோகப்பட வேண்டிய அவசியமும் கட்டாயமும் இன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது உலகமே மூலிகை மருத்துவத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இதனை உணர்ந்தே வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையத்தில் உள்ள வேளாண் அறிவியல் பணிபுரியும் விஞ்ஞானிகள் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மூலிகைத்தோட்டம் உருவாக்கி நமக்குத் தேவையான மூலிகைகளை நாம் ஏன் உற்பத்தி செய்யக் கூடாது என்ற புதிய நோக்குடன் வீட்டிலே ஒரு மூலிகைத் தோட்டம் என்ற புதிய கோட்பாட்டை உருவாக்கியுள்ளனர்.
வீட்டுக் காய்கறித்தோட்டம் மட்டுமல்ல, வீட்டு மூலிகைத் தோட்டமும் இன்றைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது
துளசிச்செடிகள்:
துளசியில் பல இனங்கள் உண்டு. அவற்றில் திருநீற்றுப் பச்சிலை, கஞ்சாங்கோரை, நாய்த்துளசி மற்றும் பெருந்துளசி ஆகியவை வீட்டுத்தோட்டத்தில் மற்றும் தொட்டிகளில் நன்கு வளரக்கூடியவை.
துளசியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், கபம் முதலியவற்றைக் குணப்படுத்தும் தன்மையுடையது. மேலும் குடல் புழுக்கள், காதுவலி, தோல் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.
கீழாநெல்லி:
கீழாநெல்லியின் இலை மற்றும் தண்டு மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்துகிறது. இதன் பொடியை பாலுடன் கலந்து அருந்துவதன் மூலம் நோய் குணமடைகிறது. சிறுநீர் பெருக்கியாகவும், வெப்ப அகற்றியாகவும், வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைத்து நரம்பு, சதை ஆகியவற்றை சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயல்படுகிறது.
கீழாநெல்லி முற்றிய மஞ்சள் காமாலையையும் குணப்படுத்தும் திறன் உடையது. மாலைக்கண், பார்வை மங்கல், நீர்வடிதல், ஓயாத தலைவலி, சோகை, ரத்தமின்மை மற்றும் கல்லீரல் பழுது ஆகியவற்றையும் குணப்படுத்தும்.
ஆடாதொடை:
இருமல் மருந்துகளில் பெரிதும் பயனாகும் ஒரு செடியாகும். மார்பில் இருக்கும் கபத்தை வெளிக்கொண்டு வருவதில் தென் அமெரிக்க காட்டுத் தாவரமான இபிகாகுவானாவுக்கு ஈடானது.
ஆடுதொடா இலைச்செடி இலையையும், வேரையும் சமபங்கு எடுத்து சுத்தம் பார்த்து, இடித்து கஷாயமாக்கி அருந்தினால் மார்புச்சளி வெளியாகிவிடும். கபமிளக்கும் மருந்துகளை ஆக்கத்தேவையான vaccine போன்ற ஆல்கலாயிடுகள் ஆடுதொடா இலையின் வேரிலிருந்துமே பெறப்படுகின்றன.
கரிசலாங்கண்ணி:
இது உடலிற்கு பொற்சாயலையும், விழிக்கு ஒளியையும் தெளிவையும் உண்டாக்கும். குன்ம கட்டியைப் போக்கும் பலவித செந்தூரங்கள் செய்யவும் உதவும். இதை உட்கொள்ள பாண்டு, சோபை, காமாலை முதலிய நோய்கள் தீரும்.
இதன் இலைச்சாற்றை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி தலைக்குத் தேய்க்க முடி கருமையாக வளரும். வேர் சூரணம் கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களுக்கும் சரும நோய்களுக்கும் கொடுக்க குணமாகும்.
சிறு குடலுக்கு வலிமை தரும். வீக்கங்களை குறைக்கும். இதை கீரையாக அடிக்கடி பருப்பு, நெய் சேர்த்து உணவுடன் உட்கொள்ள மலச்சிக்கல் நீங்கும். பொதுவாக இது வீட்டுத் தோட்டத்தில் வளரக்கூடியதாகையால் வளர்த்து பயனடையலாம்.