இந்த முறையை பின்பற்றினால் சேனைக்கிழங்கில் 80-100 டன் மகசூல் பெறலாம்…

 |  First Published Jan 12, 2017, 2:22 PM IST

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆசியாவை தாயகமாகக் கொண்டது சேனைக் கிழங்கு.இதில், கஜேந்திரா, சந்திரகாசி ஆகிய இரண்டு ரகங்கள் மட்டுமே இந்தியாவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த கிழங்கில் மாவுச்சத்தும், கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்களும் அடங்கியுள்ளன. இதை காய்கறியாகவும், சிப்ஸ், ஊற்காய் போன்ற மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் செய்யவும், ஆயுர்வேத மருத்துவத்திலும் இக்கிழங்கு பயன்படுகிறது.

Tap to resize

Latest Videos

சேனைக்கிழங்கினை வெப்பமண்டல பகுதியிலும், மித வெப்பமண்டல பகுதியிலும் சாகுபடி செய்யலாம். கிழங்கு நன்கு வளர்ச்சியடைந்த குறைந்த வெப்பநிலை போதுமானதாகும்.

தண்ணீர் தேங்காத செம்மண் மற்றும் இரு மண்பாங்கான மண் வகைகள் சாகுபடிக்கு ஏற்றவை. மண்ணில் கார அமிலத் தன்மை 5.5 முதல் 6.5 வரை இருத்தல் நல்லது.

சேனைக்கிழங்கு பொதுவாக கிழங்குகள் மூலமாகவே இனவிருத்தி செய்யப்படுகிறது. நடவுக்கு பெரிய கிழங்குகளை சிறுசிறு துண்டுகளாகவோ அல்லது முளைவுடன் கூடிய கிழங்குகளாகவோ பயன்படுத்தலாம்.

சேனைக்கிழங்கு நடவு செய்வதற்கு முன்பு, நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழுது பின்பு, 75 செ.மீ இடைவெளியில் ஒன்றரை அடி ஆழம், அகலம், நீளத்தில் குழி எடுக்க வேண்டும். அதன்பின் குழிகளில் 10 கிலோ நன்கு மக்கிய தொழு எரு எட்டு நடவுக்கு தயாராக வைக்க வேண்டும். அதன்பின் தேர்வு செய்த கிழங்குகளை பூஞ்சாண மருந்துக் கலவையில் கலக்கி எடுத்து, குழியின் நடுவில் 20 செ.மீ ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

நடுவதற்கு முன்பு ஒரு எக்டேருக்கு 40 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து மற்றும் 100 கிலோ சாம்பல் சத்துக்களை அடியுரமாக இட வேண்டும்.

இரண்டு மாதத்திற்கு பிறகு மேலுரமாக 40 கிலோ தழைச்சத்தினை இட்டு மண் அணைக்க வேண்டும். நடவு செய்தவுடன் தண்ணீர் விட வேண்டும்.

பின்பு மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின்பு ஒருவார இடைவெளியில் மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து நீர்ப் பாய்ச்ச வேண்டும். காய்ந்த இலைகளை பயன்படுத்தி நிலப்போர்வை அமைத்தால் மண்ணின் ஈரப்பதம் காப்பதோடு, கிழங்கிலிருந்து துளிர்விடுவதும் அதிகரிக்கப்படுகிறது.

பின் இரண்டு மாத இடைவெளியில் களைகள் எடுத்து வயலினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சேனைக்கிழங்கில் கழுத்து அழுகல் நோய் ஆங்காங்கே இருக்கும். அதனை கட்டுப்படுத்த 2 கிராம் காப்டான் என்ற மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்ற வேண்டும். இப்படி மண்ணில் ஊற்றுவதால் நோய் தடுக்கப்படுகிறது.

சேனைக்கிழங்கு நட்டு 7 முதல் பத்து மாதங்கள் கழித்து அறுவடைக்கு தயாராகிவிடும். கிழங்கு முற்றிய செடியில் இலைகள் மஞ்சளாக மாறி கீழே தொங்கிவிடும்.

கிழங்குகள் முதிர்ச்சியடைந்தவுடன் வெட்டி எடுத்து சுத்தப்படுத்தி காற்றோட்டமுள்ள அறைகளில் வைத்து, அவை நீண்ட நாட்களுக்கு கெடாமல் பார்த்துக் கொள்ளலாம். நன்கு பராமரிக்கப்பட்ட நிலத்தில் ஒரு எக்டேருக்கு 80 டன் முதல் 100 டன் வரை சேனைக்கிழங்கு மகசூல் கிடைக்கிறது.

click me!