ஜீரோ பட்ஜெட்டில் இயற்கை விவசாயம் செய்யும் அமெரிக்க ரிட்டன் விவசாயி…

First Published Jan 12, 2017, 1:28 PM IST
Highlights

இப்போ இருக்குற இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை, ஆடம்பர வீடு, சொகுசு கார், நாலு டிஜிட் சம்பளம் என பெரும் இலட்சியத்தில் வாழ்கின்றனர். ஆனால், இங்கு ஒருவர் வெளிநாட்டு வேலையைத் துறந்து இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இயற்கை விவசாயம் செய்து தெறிக்க விடுகிறார். அவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதத்திற்கு நான்கரை இலட்சம்.

அவர் பெயர் பிரபாகரன். 'ஜீரோ பட்ஜெட்' எனப்படும் செலவில்லா வேளாண்மை மூலம் கணிசமாக சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்து இன்றொரு வெற்றிகரமான இயற்கை விவசாயியாக நடைபோடுகிறார்.

சேலம் அம்மாபேட்டை மெத்தை தெருவில் வசிக்கிறார் பிரபாகரன் (38). மனைவி விமலாஸ்ரீ. ஒரே மகள், ஜோஷிகா. 4வது படிக்கிறாள். 

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் எம்.இ.கணினி பொறியியல் படிப்பை முடித்த கையோடு, அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காக்னிஸன்ட் (சிடிஎஸ்) மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். பழகுநர் - குழுத்தலைவர் - திட்டத்தலைவர் வரை கடும் உழைப்பால் பதவி உயர்வு பெற்று உச்சிக்குச் சென்றார். 

அந்த நிறுவனத்தின் சார்பில், அமெரிக்காவு சென்று அங்கு மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அங்கு பணியாற்றிய காலத்தில் மாதம் ரூ.4.50 இலட்சம் ஊதியம் பெற்று வந்தார் பிரபாகரன்.

சட்டென்று ஒருநாள் பணியில் இருந்து விலகினார். அதன்பின் அவர் கையில் எடுத்தது இன்றைய மக்கள் வேண்டாம் என்று விட்டுவிட்ட தொழில்.

இனி அவரின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியங்களை அவரே சொல்கிறார். கேளுங்கள்.

"என் மனைவி எம்பிஏ, எம்ஃபில் முடித்துவிட்டு சென்னையில் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் பணியாற்றினார். இருவருக்கும் கைநிறைய சம்பளம். ஆனாலும், ஒரு இருபது ஆண்டுகள் பணியாற்றி விட்டு, *சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும். அதன்மூலம் நாம் பத்து பேருக்கு வேலை தர வேண்டும்* என்றுதான் திட்டமிட்டு இருந்தோம். அதனால், ஆரம்பத்தில் இருந்தே சிக்கனத்தையும் சேமிப்பையும் கடைப்பிடித்தோம். 

ஒருநாள், ஒரு இதழில் இயற்கை விவசாயம் பற்றி கட்டுரை படித்தேன். படிக்கப்படிக்க ஆர்வம் அதிகரித்தது. அதன்பின், இயற்கை விவசாயம் தொடர்பான பல்வேறு பயிலரங்குகளில் கலந்து கொண்டேன். பிறகுதான், நாமும் இயற்கை விவசாயம் செய்வோம் என்ற முடிவுக்கு வந்தோம்.

இலக்கு தெளிவாகிவிட்டது. அடுத்தது, அதற்குத் தேவையான விவசாய நிலத்தை வாங்க தீர்மானித்து, ஆத்தூர் அருகே பெத்த நாயக்கன்பாளையத்தில் 5 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். 

நிலத்தை வாங்கிய பிறகு அதை உடனடியாக இயற்கை விவசாயத்திற்கேற்ப சீர்படுத்துவதற்காக தக்கைப்பூண்டு விதைத்து, அதை மடக்கி உழவு ஓட்டினோம். பலதானிய பயிர்களை மடக்கி உழவு ஓட்டினோம். *ஓராண்டில் நிலம், இயற்கை விவசாயத்திற்கு தயாராகிவிட்டது.

இந்தக்காலக் கட்டத்தில் நான் அமெரிக்காவில் தான் இருந்தேன். இதன்பிறகு, 2012-ல் நான் என் வேலையை ராஜினாமா செய்தேன். முதன்முதலில், நம் *பாரம்பரிய இரகமான 'மாப்பிள்ளை சம்பா' மற்றும் குறுவை இரக நெல் விதைத்தேன்.* ஏக்கருக்கு 20 மூட்டை வரை மகசூல் கிடைத்தது. இரசாயன உரங்களை பயன்டுத்தினால் கிடைக்கும் மகசூலுடன் ஒப்பிடுகையில், இது பாதியளவுதான். என்றாலும், *இயற்கை விவசாயம் என்பதால் மனதுக்கு நிறைவாக இருந்தது”.

இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறை, வறட்சியால் என்ன செய்வது எனத் தெரியாமல் வேளாண் அலுவலர்களிடம் நேரில் ஆலோசனை செய்தேன். வறட்சி காலத்தில், 'வம்பன் - 4' இரக துவரையை விதைப்பது நல்லது என நான் முன்பே கேள்விப்பட்டு இருந்தேன். அதைப்பற்றி வேளாண் அதிகாரிகளிடம் கூறியபோது, அவர்களும் ஆச்சர்யம் அடைந்தனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இருந்து 8 கிலோ வம்பன் - 4 இரக துவரை விதைகளை வாங்கிக் கொடுத்தனர். நான்கு ஏக்கரில் வம்பன் விதைப் பண்ணைக்காக விதைத்தேன். 

அப்போது எங்கள் பகுதியில் பலரும் பருத்தி சாகுபடி பயிரிட்டு இருந்தார்கள்.

வம்பன் எனக்கு கைக் கொடுத்தது. 150 நாள் பயிரான வம்பன், எனக்கு ரூ.1.75 இலட்சம் சம்பாதித்துக் கொடுத்தது. விதைகளை அரசு வேளாண் அதிகாரிகளே வாங்கிக் கொண்டனர். இயற்கை விவசாயம் என்பதால், ரூ.12 ஆயிரம் மானியமும் கிடைத்தது. செலவும் பெரிய அளவில் இல்லை.  

அடுத்து, ஊடுபயிர் திட்டத்தை செயல்படுத்தினேன். துவரை, நிலக்கடலை, பனிவரகு ஆகியவற்றை ஊடுபயிராக பயிரிட்டேன். அப்போது பருத்தி பயிரிட்டிருந்த பலரும் பெரும் நட்டத்தை சந்தித்தனர். எனக்கு அப்படி இல்லை. ஏக்கருக்கு 350 கிலோ மகசூல் கிடைத்தது. பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய்யுடன் காந்தி பார் சோப்பு கரைசல், கோமியம் கலவையை பயன்படுத்தி தெளித்தேன்.

ஆரம்பத்தில் நானும் நம்மாழ்வாரின் இயற்கை விவசாய முறைகளைத்தான் பின்பற்றினேன். எனினும், அதிலும் சில செலவுகள் உள்ளன. அதைவிட, 'ஜீரோ பட்ஜெட்' என்ற செலவில்லா விவசாயம் குறித்து பயிற்சி பெற்றேன்.

ஒரு நாட்டு பசுமாடு இருந்தால் போதும் 30 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியும். அதுதான், 'செலவில்லா விவசாயம்'. நாட்டு மாடுகளின் சாணத்தில் ஏராளமான நுண்ணுயிர்கள் உள்ளன. பத்து லிட்டர் பாலையும் ஒரு ஸ்பூன் உறைமோர் இருந்தால்போதும் தயிராக மாற்றி விட முடியும். அதுபோல்தான் நாட்டு பசுமாட்டின் சாணத்தை உறைய வைத்து, பல ஏக்கருக்கு ஊட்டச்சத்தாக பயன்படுத்த முடியும்.

இதற்கிடையே, பெருமாபாளையம் கிராமத்தில் நான்கரை ஏக்கர் விவசாய நிலத்தை கிணறு, போர்வெல் வசதியுடன் வாங்கினோம். ஆனாலும், நாளடைவில் அங்கும் கிணறு வறண்டு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் நாங்கள் பராமரித்து வந்த நான்கு பசுமாடுகளையும் விற்று விட்டோம். எந்த துறையிலும் ஆர்வம் இருக்கும் அளவுக்கு போதிய அனுபவமும் அவசியம் என்பதை உணர்ந்தேன். 

இப்போது, செலவில்லா விவசாயம் மூலம் வெங்காயம், வெண்டை, கத்திரி, தக்காளி ஆகிய பயிர்களை ஒரே நேரத்தில் பயிரிட்டு வருகிறேன். இயற்கை மற்றும் செலவில்லா விவசாய தொழில்நுட்பத்தால் வெங்காயம் நல்ல விளைச்சலை தந்தது. அப்போது சந்தையில் கிலோ ரூ.10-க்கு விற்றபோதுகூட, நான் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்தேன். இலாபமும் கிடைத்தது.

விவசாயத்தை முழுநேர தொழிலாக மேற்கொள்பவர்கள், கால்நடை வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு போன்ற உபதொழிலும் மேற்கொள்வது அவசியம். நான் நாட்டுக்கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறேன். கடக்நாத் (கருஞ்சதை கோழி), நாட்டுக்கோழிகள், பெருஞ்சாதி கோழிகளை வளர்த்து வருகிறோம். 

குறிப்பாக, கடக்நாத் கோழிகள் இயற்கையிலேயே நோய் எதிர்ப்புசக்தி மிக்கவை. இறைச்சியும் சுவையாக இருக்கும். இவற்றை வளர்க்க எந்தவித செலவும் செய்யத் தேவை இல்லை.

கடக்நாத் கோழி முட்டை ஒன்று ரூ.15-க்கும், நாட்டுக்கோழி முட்டை ரூ.10-க்கும் விற்பனை ஆகிறது. இதன்மூலம் வாரம் ரூ.2000 வரை வருமானம் கிடைக்கிறது.

அடுத்து, கோழி இறைச்சி விற்பனையிலும் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்” என்று தன் வாழ்க்கையில் அவர் கடந்து வந்த சோதனைகளையும், தற்போது அவரின் சாதனைகளையும் நமக்குக் கூறி நம்பிக்கை அளித்துள்ளார்.

விவசாயம் இன்றி ஒரு அனுவும் இனி அசையாது என்பதை அவர் தெள்ளத் தெளிவாக உணர்ந்துள்ளதை நமக்கு உணர்த்தியுள்ளார்.

click me!