விவசாயிகள் பயிர் செய்யும் எந்த பயிருக்கும் தண்ணீர் பாய்ச்சுவது மிகவும் முக்கியமான பணி. இந்த தண்ணீர் பாசனம் பயிர்களுக்கு சென்று சேரும் முன் பல்வேறு நிலைகளில் விரயமாகிறது. இதனை தடுத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்ய வதற்காக மத்திய, மாநில அரசுகள் சில திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
அதில் ஒன்று தான் தேசிய நுண்நீர் பாசன இயக்க திட்டம். நீரின் அழுத்த விசையை பயன்படுத்தி பாசனம் செய்யும் அனைத்து பாசன முறைகளும் இந்த திட்டத்தில் அடங்கும். பொதுவாக நுண்நீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
undefined
மானியம்:
சொட்டு நீர் பாசனம் அமைத்திட சிறு மற்றும் குறு விவசாயிகள் இலவசமாகவும், இதர விவசாயிகள் 75 சத மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு, அதாவது நஞ்சை நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் அளவிற்கும், புஞ்சை என்றால் 5 ஏக்கர் அளவிற்கும் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மத்திய அரசின் 50 சத மானியத்திலும், மாநில அரசின் 50 சதவீத மானியத்தையும் பெற்று இலவசமாகவே சொட்டு நீர் பாசனத்தை தங்களது நிலத்தில் அமைத்துக் கொள்ளலாம்.
இதர விவசாயிகள் மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசின் மானியம் 25 சதவீதத்தையும் பெற்று ஆக மொத்தம் 75 சதவீதம் மானியத்தை பெற்று சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம்.
அதிக பட்ச தொகை:
இந்த அடிப்படையில் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க அதிகபட்சமாக 43 ஆயிரத்து 816 ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது இது 100 சதவீத மானியத் தொகையின் அளவு ஆகும். இந்த தொகையில் சிறு, குறு விவசாயிகள் காய்கறிகள், வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு 1 ஏக்கருக்கும், வாழை என்றால் ஒன்றரை ஏக்கருக்கும், பப்பாளி, எலுமிச்சை, மாதுளை, கொய்யா ஆகியவற்றுக்கு 3 ஏக்கர் முதல் 4 ஏக்கர் வரையிலும் சப்போட்டா, மா, தென்னை ஆகியவற்றுக்கு 5 ஏக்கர் வரையிலும் இலவசமாகவே சொட்டு நீர் பாசன கருவிகளை அமைத்துக் கொள்ளலாம்.
பெரிய விவசாயிகள் அதிகபட்சமாக 12.5 ஏக்கர் வரை 75 சத மானியத்தில் சொட்டுநீர் பாசனக்கருவியை எந்த பயிருக்கும் அமைக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
விவசாயிகள் தங்களது நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க தங்களது நில ஆவணங்களுடன், அதாவது கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேசன்கார்டு நகல்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தோட்டக்கலை துறையை அணுக வேண்டும். சிறு, குறு விவசாயிகள் தாசில்தாரிடம் வாங்கிய சான்றிதழை இணைக்க வேண்டும். ஆவணங்கள் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சொட்டு நீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்களில் விவசாயி ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
அவ்வாறு தேர்ந்தெடுத்த நிறுவன பொறியாளர், விவசாயின் நிலத்தை ஆய்வு செய்து சொட்டு நீர் பாசன அமைப்பை அமைக்கும் முன் ஆய்வு செய்வார். பிறகு மதிப்பீட்டை கணக்கிட்டு அதில் விவசாயியின் மானியம் போக எஞ்சிய மதிப்பீட்டு தொகைக்கு தேர்ந்தெடுத்த நிறுவனத்திற்கு வங்கி வரைவோலை எடுக்க வேண்டும். இந்த விண்ணப்பம் மாவட்ட நுண்நீர் பாசன தொழில்நுட்ப குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும். பின்னர் அவர்கள் அதை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவர். அதற்கு பின் விவசாயியின் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க பணி ஆணை வழங்கப்படும்.
விவசாயி தனது செலவில் பூமிக்கு அடியில் பதிக்க வேண்டிய மெயின், சப்மெயின் குழாய்களுக்கு ஒன்றரை அடி ஆழ வாய்க்கால் எடுக்க வேண்டும். இதற்கு பின் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் நிறுவனம் பாசன கருவிகளை நிர்மாணம் செய்யும். நிறுவனம் சொட்டு நீர் பாசன அமைப்பை அமைத்து அதன் செயல்பாட்டை ஆய்வு செய்த பின் நிறுவனத்திற்கு விவசாயியின் மானியம் வழங்கப்படும். இவ்வாறு அமைக்கப்படும் சொட்டு நீர் பாசன அமைப்பை அந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்யும்.
பயன்கள்
சொட்டு நீர் பாசனம் அமைப்பதால் நீர் விரையம் குறையும்.
பயிர்களுக்கு பாசன நீர் மூலம் பரவும் பூஞ்சான நோய்கள் தடுக்கப்படுகிறது.
சாதாரண பாசன முறையில் பாய்ச்சும் நிலப்பரப்பை விட இரண்டரை முதல் மூன்று மடங்கு நிலத்திற்கு கூடுதலாக நீர் பாய்ச்ச முடியும்.
பயிர்களுக்கு சீரான நீர் மற்றும் உரம் கிடைப்பதால் முறையான வளர்ச்சியும், சீரான முதிர்ச்சியும் கிடைக்கும்.
மொத்த விளைச்சல் 50 முதல் 100 சதவீதம் அதிகரிக்கும்.