தோட்டங்களில் வெள்ளாடு வளர்ப்பவர்களுக்கு, ஆடுகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்றுவதுதான் பெரிய பிரச்சனை.
'கொட்டில் முறை ஆடு வளர்ப்பு' இதற்கு மாற்றாக இருந்தாலும், அது அவ்வளவாக விவசாயிகளிடம் பிரபலமாகவில்லை.
காரணம்... 'கொட்டில் முறையில் வெள்ளாட்டை நன்றாக வளர்க்க முடியாது. மேய்ச்சல் முறைதான் நன்றாக கைகொடுக்கும்' என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் ஆழமாகப் பதிந்திருப்பதுதான்.
ஆனால், இந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக, கொட்டில் முறையில் வெள்ளாடுகளைச் சிறப்பாக வளர்த்து வெற்றி காணலாம்.
ஆட்டுக் கொட்டில் பராமரிப்பு
ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உனி, பேன் போன்ற ஒட்டுண்ணி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் அளவு எளிய கொட்டகை அமைப்பே போதுமானது. கிராமங்களில் பெரும்பாலும் மரத்தடி (அ) குடிசை நிழலில் தான் ஆடுகளை வளர்க்கின்றனர்.
ஆட்டுக்குட்டிகள் வளர்ந்து ஓடும் வரை ஒரு பெரிய தலைகீழான கூடையைப் போட்டு மூடப்படுகின்றன. பொதுவாக ஆண் மற்றும் பெண் குட்டிகள் ஒன்றாகவே அடைக்கப்படுகின்றன.
வெள்ளாடுகளின் பால், இறைச்சி, உற்பத்திக்கு ஏற்றவாறு உள்ள ஒரு எளிமையான அமைப்பே போதுமானது. நகரங்களில் வசிப்போர் அல்லது அதிக அளவில் ஆடுகளை வளர்ப்போர் நல்ல காற்றோட்டமுள்ள, வடிகால் வசதியுடன், தேவையான இட வசதியுள்ள கொட்டகை அமைத்தல் நலம்.