மா இஞ்சி என்ற பழமையான வகை இஞ்சியில் உள்ளது. மா இஞ்சி என்றால், மாங்காய் இஞ்சி ஆகும்.
சாதாரண இஞ்சியைப் போன்றே மா இஞ்சி வளமையாக உள்ள ஓர் அரிய தாவரம். ஒரு மீட்டர் உயரம் அளவுக்கு வளர வல்லது.
இதன் பசுமையான நீண்ட இலைகள் மிக்கவாறும், ஜதைகள் பலவாகவும் காணப்படுகின்றன.
இஞ்சிப் பகுதி பத்து சென்டி மீட்டர் நீளம் வரை தோன்றும். உள் பகுதி மஞ்சள் நிறமாகக் காணப்படும்.
கணுக்கள் ஆங்காங்கு நிரவியிருக்கும். நிழல் பாங்கான இடங்களில் இது சிறப்பாகப் பயிரிடப்படுகிறது. எனினும் மற்றைய வெளி இடங்களிலும் இது நன்கு வளரக் கூடியதே.
இதன் மட்ட நிலத் தண்டிலிருந்து பச்சை மாங்காயின் நறுமணம் வருவதாலேயே இதற்கு மா இஞ்சி (மாங்காய் இஞ்சி) என்ற மாசற்ற பெயர் உண்டானது. சாதாரண இஞ்சியில் உள்ள கார அளவுக்கு, இந்த மா இஞ்சியில் காரம் இருப்பதில்லை.
மட்ட நிலத்தண்டு வெளித் தோற்றத்தில் சாதாரண இஞ்சியைப் போன்றே இது காணப்படும். வெப்பமான மண்டலங்களிலே, தமிழ்நாட்டிலும், வியாபார முறையில் இது பயிரிடப்படுகிறது.
உணவுப் பண்டங்களுக்கு வாசனை ஏற்படுத்துவதற்காகவே இது பெரிதும் பயனாகிறது. பிரதானமாக இது ஊறுகாய் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
நாவில் இட்டால் இது மிகவும் சுவையாக இருக்கும்.
சாதாரண இஞ்சியில் நார்கள் அதிகமாக உள்ளன. ஆனால், மா இஞ்சியில் நார் பாகம் மிகவும் குறைவாகவே இருக்கிறது.
பயன்பாடுகளில் ஏறத்தாழ நான்கு மாதங்கள் வரை இது கேடுறாமல் இருப்பதால், அக்கால அளவுக்கு இதனைச் சேமித்து வைக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
சித்தா, ஆயுர்வேதா ஆகிய பழமையான மருத்துவ முறைகளிலே ஆஸ்துமா, ஜுரம், தோல் வியாதிகள் ஆகியவற்றை அகற்றவும், மலத்தை இளக்கவும் மா இஞ்சி பெரிதும் பயனாகிறது.
திப்பிலியுடன் சேர்ந்து அரவையான மா இஞ்சி, மூலநோயைக் குணப்படுத்தவும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும் உபயோகமாகிறது.
யுனானி மருத்துவ முறையில் அதீத உடற்சூட்டை மட்டுப்படுத்துவது, குடற்புழுக்களை மாய்ப்பது, இருமலைக் கட்டுப்படுத்துவது, இரத்தக் கொழுப்பைக் குறைப்பது, சிறுநீர்த் தொல்லைகளைச் சீராக்குவது முதலானவற்றுக்கு மா இஞ்சி பெரிதும் பயன்படுகிறது.